ARTICLE AD BOX
'யானை வரும் பின்னே.. மணி ஓசை வரும் முன்னே..' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, அரசியல்வாதிகளுக்கு சாலப்பொருந்தும். 'தேர்தல் வரும் பின்னே.. மக்களிடம் நெருக்கம் காட்டுவார்கள் முன்னே..' என்று இந்த பழமொழியை மாற்றி அரசியல்வாதிகளை பார்த்து சொல்லும் நிலை இப்போது உள்ளது.
அதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்தில் இப்போது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் நடந்துகொள்கின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.வோ, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் மக்களை கவர்ந்து வருகிறது.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வோ, மக்கள் பிரச்சினைகளை மாவட்ட வாரியாக கையில் எடுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றது. தங்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டிக்கொள்ள பிற அரசியல் கட்சிகளும் இந்த வழிமுறையையே பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன.
இது ஒரு பக்கம் 'டிரெண்டிங்' என்றாலும், மற்றொரு பக்கம் அரசியல் கட்சி தலைவர்கள் இடையே 'வார்த்தைப் போர்' என்பது 'புதிய டிரெண்டிங்'காக உருவாகி வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு இன்னும் 14 மாதங்கள் கால இடைவெளி உள்ளது. ஆனால், இப்போதே தமிழ்நாட்டில் அரசியல் களம் அதிரத் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு தலைவர்களுக்கு இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக இருந்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்குள் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உள்கட்சி பூசல் நடைபெற்றதால் பிரிந்து கிடக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் என்று தனித்தனியாக அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், '2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம்' என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார்.
ஆனால், இதை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்கவில்லை. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் தற்போது விரக்தியில் இருந்து வருவது அவரது நடவடிக்கையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனால், அ.தி.மு.க.வுக்குள்ளேயே தற்போது வார்த்தை போர் தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வத்தை 'கொசு' என்று விமர்சித்தார். பதிலுக்கு அவர், சினிமாவில் வரும் சிரிப்பு போலீஸ் போல், டி.ஜெயக்குமார் சிரிப்பு அரசியல்வாதி என்று வர்ணித்தார்.
சரி, எதிர்க்கட்சியில்தான் இப்படி, ஆளுங்கட்சியிலாவது பிரச்சினை இல்லாமல் இருக்கிறதா? என்று பார்த்தால், இங்கு பிரச்சினை வேறு விதமாக இருக்கிறது.

அதாவது, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசு மீதான தி.மு.க.வின் எதிர் கருத்துக்கு இங்குள்ள பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் உடனடியாக பதில் அளித்து வருவதால், பா.ஜ.க. - தி.மு.க. இடையே மோதல் போக்கு உச்சம்பெற தொடங்கியிருக்கிறது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய கட்டிட செங்கல்லை ஒவ்வொன்றாக எடுப்பேன்' என்று கூற, அதற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'முதலில் அண்ணா சாலைக்கு அவரை வந்து பார்க்கச் சொல்லுங்கள்' என்று சவால் விட்டார். பதிலுக்கு அண்ணாமலையோ உடனடியாக, 'அண்ணா சாலையில் எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று சொன்னால் தனி ஆளாக வருகிறேன்' என்று கூறியிருக்கிறார்.
மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் அவ்வப்போது அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தினமும் பேட்டி, கருத்து என்று பட்டையை கிளப்பி வருகிறார்.

மொத்தத்தில், ஏதோ சினிமா படத்தில் வசனம் பேசுவதுபோல் அரசியல் தலைவர்களுக்கு இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் கால அளவு இருக்கும் நிலையில், இப்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி, அதிரத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த நகர்வுகள் எப்படி இருக்கப்போகிறது? என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.