ARTICLE AD BOX
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் வலுக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மூழ்கும் கப்பல் என ஓ.பன்னீர்செல்வம் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசி வரும் நிலையில் ஓநாயும், வெள்ளாடும் ஒன்று சேர முடியுமா? என்று தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஒரு மூழ்கும் கப்பல் என ஓ.பன்னீர்செல்வம் காட்டான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல் உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்ற நிலை மாறி, இவையே மனித குலத்தின் வாழ் முறைகள் என்றாக வேண்டும்" என்கிறார் பேரறிஞர் அண்ணா. இந்தப் பண்புகள் எல்லாம் மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவதாகும். இந்தப் பண்புகள் இல்லாதவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பதுதான் பேரறிஞர் அண்ணாவின் பார்வை. தனி வாழ்வில் ஒழுக்கமற்றவன் பொது வாழ்விலும் ஒழுக்கமற்றவனாகவே இருப்பான் என்பது கம்பனின் அரசியல் பார்வை.

பேரறிஞர் அண்ணா குறிப்பிட்ட பாராட்டத்தக்க பண்புகளை இன்று வரை நான் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஜெயலலிதாவுக்கு என்றென்றும் விசுவாசமாக இருந்திருக்கிறேன். இதை நான் சொல்லவில்லை. ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். அரசியல் வரலாற்றில், எந்த நாட்டின் வரலாற்றிலும் ஒருவரை ஒரு அரியாசனத்தில் அமர வைந்துவிட்டு, அதன் பின்னர் உரியவருக்கே அந்த அரியாசனம் திரும்பத் தரப்பட்டதாக வேறு வரலாறே இல்லை. அந்தப் புதிய வரலாற்றை படைத்துக் காட்டியவர் அன்பு சகோதரர் ஓ. பன்னீர்செல்வம்" என்று என்னைப் பற்றி பெருமையாக பரதனுடன் ஒப்பிட்டுப் பேசியவர் ஜெயலலிதா.

மேலும், "மிகச் சிறிய பொறுப்புகளில், சாதாரண பொறுப்புகளில் தங்கள் வாழ்க்கையை தொடங்கி உள்ளார்கள். பின்னர் அரசியல் வாழ்க்கையில் அவர்கள் படிப்படியாக முன்னேறி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு, இயக்கத்தின்பால் அவர்களுக்குள்ள விசுவாசம், தலைமையிடம் அவர்கள் கொண்டுள்ள பற்று. இவற்றின் காரணமாக அவர்கள் படிப்படியாக உயர்ந்துள்ளார்கள் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் வாக்கு தெய்வ வாக்கு. இதனை என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.

ஒரு விதை வளருகிறது என்ற சொன்னால், அங்கு சத்தமிருக்காது. ஆனால், மரம் விழுகிறது என்று சொன்னால் பலத்த சத்தம் இருக்கும். சத்தம் எங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அது அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது. வீழ்ச்சியை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அது ஒரு மூழ்கும் கப்பல், அந்த மூழ்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள். அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்றால், நன்றி மறந்த, துரோகத்தின் மறுவுருவமாக விளங்குகின்ற ஆணவச் செருக்குடைய, பொய்மையின் மறுவடிவமாக திகழ்கின்ற நய வஞ்சகம் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் வீழ்ச்சி என்பது நிச்சயம்.

எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்கிற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க அழிவிலிருந்து தப்பிப்பது என்பது அறவே இயலாத ஒன்று. பொறுத்தார் பூமியாள்வார் என்று சொல்வார்கள். எனவே, 2026-ம் ஆண்டு மே மாதம் வரை பொறுத்திருங்கள். தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும். நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். துரோகம் நிச்சயம் விழும். நய வஞ்சகம் நசுக்கப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கருவாடு மீனாகாது. கறந்த பால் மடி புகாது, நய வஞ்சகம் வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார்.