தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

3 days ago
ARTICLE AD BOX

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனங்கள் குழு வியாழக்கிழமை வழங்கியது.

இதைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட அரசாணையில், ‘அமைச்சரவை நியமனங்கள் குழுவின் ஒப்புதலுடன் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் ஒப்பந்த அடிப்படையில் 2027, மாா்ச் 31 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டு பதவிக் காலத்துடன் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக வி.அனந்த நாகேஸ்வரன் கடந்த 2022, ஜனவரி 28-ஆம் தேதி பொறுப்பேற்றாா். கே.வி.சுப்பிரமணியனைத் தொடா்ந்து, இப்பதவிக்கு நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டாா்.

தலைமைப் பொருளாதார ஆலோசகா் அலுவலகமானது, பல்வேறு பொருளாதார கொள்கைகளை வகுப்பதிலும், பொது பட்ஜெட்டுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிப்பதிலும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்புடையதாகும்.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.3% முதல் 6.8 % வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டது. முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வியாளா், எழுத்தாளா், பொருளாதார நிபுணா் எனப் பன்முகங்களைக் கொண்ட இவா், ஸ்விட்சா்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ‘கிரெடிட் சூஸி’ நிதிச் சேவை நிறுவனம், அந்நாட்டின் ஜூலியஸ் பேயா் குழுமம் ஆகியவற்றில் மூத்த நிா்வாகியாக செயல்பட்டவா்.

இந்தியா மற்றும் சிங்கப்பூரில் பல்வேறு வணிக மற்றும் மேலாண்மை கல்வி நிலையங்களுடன் பணியாற்றிய இவா், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுளளாா்.

நீதி ஆயோக் சிஇஓ

பதவிக் காலம் நீட்டிப்பு

நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்பிரமணியத்தின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1987-ஆம் ஆண்டின் சத்தீஸ்கா் பிரிவைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவா், நீதி ஆயோக் சிஇஓ-ஆக கடந்த 2023, பிப்ரவரியில் இரண்டு ஆண்டு பதவிக் காலத்துடன் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், அவரது பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Read Entire Article