ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து அதிகரித்து வரும் ஹஜ், பும்ரா பயண மோசடிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
- 3 நிமிடங்களுக்கு முன்னர்
கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். தனது மனைவி ரெஜினாவுடன் உம்ராவுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மெக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார்.
உறவினர்கள் மூலமாக சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனத்தின் முகவரான அமீதாவின் அறிமுகம் அப்துல் காதருக்கு கிடைத்துள்ளது. தனக்கும் தன் மனைவிக்கும் தலா 77 ஆயிரம் ரூபாயை அவர் பயணக் கட்டணமாகச் செலுத்தியிருந்தார்.
ஆனால், உண்மையில் நடந்தது வேறு.
"நீண்டகாலக் கனவு என்பதால் உறவினர்கள், நண்பர்களிடம் எல்லாம் கூறி உற்சாகப்பட்டோம். ஆனால், கிளம்புவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது" என்கிறார், அப்துல் காதரின் மனைவி ரெஜினா.

இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அன்றிரவு முழுவதும் உறக்கமின்றி அழுததாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"சென்னையில் செயல்பட்டு வந்த தனியார் சுற்றுலா நிறுவனத்தின் முகவராக கோவையைச் சேர்ந்த அமீதா என்பவர் செயல்பட்டு வந்தார். எங்களைப் போலவே கரும்புக்கடை, செல்வபுரம் பகுதிகளில் இருந்து சுமார் 68 பேர் அமீதாவிடம் பணம் செலுத்தியிருந்தனர்" எனக் கூறுகிறார், அப்துல் காதர்.
இதுதொடர்பாக, பெரியகடை வீதி (பி1) காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். முகவராகச் செயல்பட்ட அமீதா விசாரிக்கப்பட்டார். "ஆனால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை" என்கிறார் அப்துல் காதர்.
பயணிகளிடம் வசூல் செய்த பணத்தில் சுமார் 36 லட்ச ரூபாய் வரை அமீதா திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்தது. சென்னையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தின் பிரதிநிதிகள் தலைமறைவாகிவிட்டதால், அமீதா தனது சொத்து ஒன்றை விற்றுப் பணத்தை திருப்பிக் கொடுத்ததாகக் கூறுகிறார் அப்துல் காதர்.
இதை பிபிசி தமிழிடம் ஒப்புக் கொண்ட அமீதா, "நான் வாங்கிக் கொடுத்த பணம் தற்போது வரை சென்னையைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து வரவில்லை" எனவும் கூறினார்.
- இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஏன்? 8 கேள்விகளும் பதில்களும்
- ஹலால் முறையில் விலங்குகள் எவ்வாறு கொல்லப்படும்? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? 6 கேள்வி - பதில்கள்
- செய்யும் வேலை மூலம் கடவுளை தொழும் 'பயே ஃபால்' முஸ்லிம்கள் குறித்து தெரியுமா?
- மனமுடைந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம் இளவரசி; இந்திய நகரில் தொடர்ந்து ஒலிக்கும் அவரது பெயர் - யார் அவர்?
மற்றவர்களைப் போல தன்னையும் அந்நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
"சிறு வயதில் இருந்தே மெக்கா, மதீனா என்பது மனதில் பதிந்துவிட்ட ஒன்று. தினமும் தொழுகையின்போது எங்களை அங்கே அழைக்குமாறு இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். மரணத்தை யாராலும் ஏற்க முடியாது. அப்படியொரு வலியை ஏமாற்றப்பட்டபோது உணர்ந்தோம்," எனக் கூறுகிறார் ரெஜினா.
ஹஜ் மற்றும் உம்ரா என்பது ஒரு சமயப் பயணம். ஆண்டுக்கு குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே ஹஜ் யாத்திரை நடக்கும். உம்ரா என்பது இஸ்லாமியர்கள் ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் செல்லக் கூடிய ஒன்று.
இதற்காக செளதி அரேபியாவில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு உரிமங்களை வழங்கியுள்ளது. அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனங்களுடன் இணைந்து உம்ராவுக்கான பயண ஏற்பாடுகளைச் செய்கின்றன.
அடுத்தடுத்து மோசடிப் புகார்கள்

பட மூலாதாரம், Handout
அப்துல் காதரை தொடர்ந்து வேலூரைச் சேர்ந்த முகமது ஜாஹிர் அப்பாஸ் என்பவர், கடந்த ஜனவரி 28ஆம் தேதியன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது அவர் புகார் கூறியிருந்தார். வேலூரில் இருந்து ஜனவரி 24ஆம் தேதி உம்ராவுக்காக 14 பேர் மெக்கா செல்வதாக இருந்தது.
ஆனால், பயணம் தொடர்பான எந்தத் தகவலும் வராததால், புரசைவாக்கத்தில் உள்ள அந்நிறுவனத்துக்கு வந்துள்ளனர். ஆனால், அங்கு நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
"வேலூர் முஸ்லிம்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் மெக்காவுக்கு சென்ற குழுவினருக்குத் திரும்பி வருவதற்கான டிக்கெட்டை கூட இந்நிறுவனம் போலியாகக் கொடுத்து ஏமாற்றியுள்ளது," எனக் கூறுகிறார், கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கைக் கூட்டமைப்பின் துணைச் செயலாளர் ஃபைசல்.
முன்னதாக, சென்னை, கும்பகோணம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த மூன்று தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மீது உம்ராவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மோசடி செய்ததாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நைனா முகமது என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.
- அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய மாணவி 'ரஞ்சனி ஸ்ரீநிவாசன்' யார்? பின்னணி தகவல்கள்3 மணி நேரங்களுக்கு முன்னர்
- ஔரங்கசீப் கல்லறையை அகற்றும் கோரிக்கை: மத ஒற்றுமை பற்றிய கவலையில் குல்டாபாத் மக்கள்2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஹஜ் சீசனை முன்வைத்து மோசடி

பட மூலாதாரம், Getty Images
உம்ராவை போல ஹஜ் சீசனை முன்வைத்து தற்போது புதுப்புது மோசடிகள் கிளம்பியுள்ளதாகக் கூறுகிறார், தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவரான முகமது ரஃபீக்.
இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதியில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கான பயணம் தொடங்கவுள்ளது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசுக்கும் சௌதி அரேபிய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாவது வழக்கம்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்கள்தொகையின் (2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) அடிப்படையில் 1 சதவிகிதம் பேருக்கு ஹஜ் பயணம் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதை மாநில வாரியாக மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி பிரித்துக் கொடுக்கிறது.
"இந்த ஒதுக்கீட்டில் 70 சதவீத இடங்களை இந்திய அரசின் ஹஜ் கமிட்டி எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 30 சதவீத இடங்களைத் தனியார் பயண ஏற்பாட்டாளர்களுக்குக் கொடுக்கின்றனர். இதற்காக இந்திய அரசிடம் உரிமம் பெற வேண்டும். அதை அடிப்படையாக வைத்து சௌதி அரசும் எங்களை அங்கீகரிக்கிறது" எனக் கூறுகிறார் முகமது ரஃபீக்.
சௌதி அரசுடன் ஒப்பந்தம் போட்ட பிறகு தனியார் சுற்றுலா நிறுவனங்களை இந்திய ஹஜ் கமிட்டி தேர்வு செய்கிறது. நிறுவனத்தின் நிதிக் கணக்கு, முந்தைய ஆண்டு அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஹஜ் இடங்களை ஒதுக்கீடு செய்வதாகக் கூறுகிறார் முகமது ரஃபீக்.
ஒவ்வொரு தனியார் சுற்றுலா நிறுவனத்துக்கும் அதன் தகுதிக்கு ஏற்ப 200 பேர், 100 பேர், 50 பேர் என அழைத்துச் செல்வதற்கான அனுமதி தரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுப்புது ஆஃபர்கள் சாத்தியமா?

பட மூலாதாரம், Handout
இந்த ஆண்டு ஹஜ் பயணத்தை முன்வைத்து சில தனியார் சுற்றுலா நிறுவனங்கள், ஆஃபர்களை அள்ளி வீசுவதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பான சில விளம்பரப் பிரசுரங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.
அதில், "ஹஜ் 35 நாள் பேக்கேஜ் 5,60,000 ரூபாய்' என ஒரு விளம்பரத்திலும் '5,99,000 ரூபாய்' என மற்றொரு விளம்பரத்திலும் இடம்பெற்றிருந்தது. இன்னொரு நிறுவனமோ, '5,29,999 ரூபாய்' எனக் குறிப்பிட்டிருந்தது. இதைத் தள்ளுபடி விலையாகவும் அவர்கள் விளம்பரப்படுத்தி இருந்தனர்.
"இவர்களில் யாரும் முறையாக இந்திய அரசிடம் அங்கீகாரம் பெறவில்லை. இவர்களிடம் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக பணம் கட்டி ஏமாறுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது," எனக் கூறுகிறார் முகமது ரஃபீக்.
"சேவை அடிப்படையில் அரசு அழைத்துச் செல்வதால் தலா மூன்றரை லட்சம் முதல் 4 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. தனியார் சுற்றுலா நிறுவனங்களிடம் கூடுதல் வசதிகள் கிடைப்பதால் சுமார் 6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது," என்கிறார் முகமது ரஃபீக்.
"நாங்கள், 45 நாட்களுக்கான மூன்று வேளை இந்திய உணவு, தங்கும் இடம், விமானக் கட்டணம், வழிகாட்டுவதற்கு இமாம், அவருக்கான செலவு ஆகியவற்றை ஈடுகட்ட வேண்டும். இவை தவிர, ஜிஎஸ்டி, டிசிஎஸ் (Tax collected at source) என 10 சதவீதம் செலுத்த வேண்டும்" எனக் கூறுகிறார் முகமது ரஃபீக்.
இந்திய அரசு தனி விமானத்தில் ஹஜ் பயணிகளை அழைத்துச் செல்வதாகவும் தங்களால் அவ்வாறு அழைத்துச் செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஆஃபர்களை அள்ளி வீசும் நிறுவனங்கள், அவர்கள் குறிப்பிடும் கட்டணத்தில் ஹஜ் பயணத்திற்கான வசதிகளைச் செய்து தருவது மிகவும் கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முகமது ரஃபீக், "5 லட்ச ரூபாய்க்கு நட்சத்திர விடுதி உள்பட இதர வசதிகளை வழங்குவதாக உறுதியளிக்கின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் சௌதியில் இருந்து பதில் வரவில்லை எனக் கூறி மோசடி செய்கின்றனர். ஒரு முறையாவது காபாவை பார்க்க விரும்பும் முஸ்லிம்களை இலக்காக வைத்து இவர்கள் ஏமாற்றுகின்றனர்," என்கிறார்.

பட மூலாதாரம், handout
சில தனியார் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் நிறைந்த விளம்பரத்தை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்துகின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிமம் இல்லாததால் தங்களைப் போன்ற தனியார் நிறுவனங்களிடம் கடைசி நேரத்தில் வாய்ப்பு கொடுக்குமாறு கேட்பதாகவும் முகமது ரஃபீக் தெரிவித்தார்.
மக்களுக்குக் குழப்பம் வராமல் தடுப்பதற்காக லோகோ ஒன்றை ஹஜ் ஏற்பாட்டாளர்கள் தயாரித்துள்ளனர். இந்திய அரசு, சௌதி அரசு மற்றும் மாநில ஹஜ் கமிட்டியின் முத்திரைகளை அதில் பயன்படுத்தியுள்ளனர். இந்த இலச்சினையை அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அனைவரும் பயன்படுத்துமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதன் மூலம் மோசடியைத் தடுக்க முடியும் எனக் கூறும் முகமது ரபீக், "ஹஜ் என்பது இஸ்லாமியர்களின் வாழ்நாள் கடமையாக உள்ளது. இந்த ஆண்டு உம்ராவில் அதிக மோசடிகள் நடந்துள்ளன. ஹஜ் யாத்திரையிலும் இது தொடர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கிறோம்," எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று மாதங்களில் 50 புகார்கள்
கடந்த 3 மாதங்களில் மட்டும் உம்ராவை மையமாக வைத்து தமிழ்நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார், கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கைக் கூட்டமைப்பின் துணைச் செயலாளர் கோவை ஃபைசல்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "உம்ரா அல்லது ஹஜ் பயணத்துக்கு ஒருமுறை சென்றுவிட்டு வந்த பிறகு, அதில் பணம் பார்க்கும் நோக்கத்துடன் சிலர் சுற்றுலா நிறுவனங்களைத் தொடங்கி விடுகின்றனர். உம்ரா செல்வதற்கு யாராவது வந்தால் முதலில் பாஸ்போர்ட்டையும் முன்பணத்தையும் வாங்கி விடுகின்றனர்," எனக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், ஊட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள், இதுபோன்ற விளம்பரங்களை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஹஜ் பயணம் தொடர்பாக ஆஃபர்களை அறிவித்துள்ள கோவையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஒன்றை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
அப்போது பேசிய அதன் உரிமையாளர், "நாங்கள் குறைவான தொகைக்கு சேவையை வழங்கி வருகிறோம். எங்களின் புக்கிங் நிறைவடையும் நிலையில் உள்ளது. பணத்தைக் கையில் வாங்க மாட்டோம். வங்கிக் கணக்கு மூலமாகவே செலுத்த வேண்டும்" எனக் கூறினார்.
சௌதி அரசால் அங்கீகரிக்கப்பட்டு தாங்கள் செயல்படுவதாகக் கூறிய அவரிடம், அதற்கான அனுமதிக் கடிதத்தை அனுப்ப இயலுமா எனக் கேட்டோம்.
"கேரளாவில் உள்ள பிரபல தனியார் சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து ஹஜ் சேவையைக் கொடுத்து வருகிறோம்" என்று மட்டும் பதில் அளித்துவிட்டு, மேலதிக கேள்விகளுக்குப் பதில் கூற மறுத்துவிட்டார்.
மாநில ஹஜ் கமிட்டி தலைவரின் விளக்கம்

பட மூலாதாரம், Handout
"ஹஜ், உம்ரா என்ற பெயரில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?" என்பதைத் தெரிந்துகொள்ள தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ-வுமான அப்துல் சமதுவிடம் பேசினோம்.
"பணம் கட்டி ஏமாந்ததாக இதுவரையில் எழுத்துபூர்வமாக ஹஜ் கமிட்டிக்கு எந்தப் புகாரும் வரவில்லை. அவ்வாறு வந்தால் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.
ஹஜ் கமிட்டியின் அண்மைக் கூட்டத்தில் தனியார் சுற்றுலா நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு குழு ஒன்றை அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அப்துல் சமது, அரசின் பார்வைக்கு இதைக் கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், "உரிய உரிமங்களைப் பெற்று தனியார் ஹஜ் சேவை நடத்துவோருக்கும் மாநில ஹஜ் கமிட்டிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் மாநிலப் பிரிவாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்," எனக் கூறுகிறார் அப்துல் சமது.
"ஹஜ் பயணம் செல்ல விரும்பும் ஏழை, எளிய மக்களிடம் இதுபோன்று நடத்தப்படும் மோசடிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனவும் அப்துல் சமது குறிப்பிட்டார்.
நடப்பு ஆண்டில் சுமார் ஐந்தாயிரம் பேர் வரை தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கூறும் அப்துல் சமது, "அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தவிர வேறு யாரும் ஹஜ் சேவையில் ஈடுபடக் கூடாது என்ற நிலை உருவாக வேண்டும். இதை முறைப்படுத்தும் வேலைகளை இந்திய ஹஜ் கமிட்டி மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து விவாதித்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)