ARTICLE AD BOX
திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அபராதம் விதித்தது குறித்து கேட்டதற்கு, கார் பார்க்கிங் ஏரியா பணியாளர், "தமிழ், ஆங்கிலம் தெரியாது, இந்தி தான் தெரியும்" என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையமாக உள்ளது திருச்சி விமான நிலையம். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் மற்றும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி விமான நிலையத்தை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நுழையும் போது நுழைவுத்தொகையை செலுத்த வேண்டியது அவசியம்.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் உறவினரை அழைப்பதற்காக சென்ற நபர்களின் வாகனம் லாக் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. அப்போது விமான நிலைய பார்க்கிங் ஊழியரிடம் ஏன் காரை லாக் செய்துள்ளீர்கள், எதற்கு அபராதம் கட்ட வேண்டும் என கார் உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பணியாளர் இந்தியில் பேசி உள்ளார்.
அதற்கு கார் உரிமையாளர் "எனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம்தான் தெரியும், இந்தி எனக்கு தெரியாது" என கூறியுள்ளார். அதற்கு, கார் பார்க்கிங் பணியாளர், எனக்கு தமிழ், ஆங்கிலம் எல்லாம் தெரியாது இந்தி மட்டும் தான் தெரியும் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கார் பார்க்கிங் வசூலிப்பவர் மற்றும் கார் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த கார் உரிமையாளர் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இங்கு வந்து அராஜகம் செய்து கொண்டிருக்கிறீர்களா? வண்டியை பார்க்கிங்கில் போட்டுவிட்டு 3 மணி நேரத்திற்கு பணமும் கட்டி விட்டேன். வெளியே எடுத்துவிட்டு லக்கேஜ் எடுத்து வைப்பதற்காக 2 நிமிடம் நிறுத்தியதற்காக வண்டியை லாக் செய்துவிட்டு போகிறாய்.
வந்து கேட்டா அபராதம் கட்டச் சொல்கிறாய்? இந்தியை தவிர எதுவும் தெரியாது என்கிறாய்?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் வாகன உரிமையாளர். இதைத்தொடர்ந்து, மற்றொரு ஊழியரிடம் முறையிட்டபோது, அவரும் இந்தியில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
அநாகரீகமான முறையில் கோபமாக அவர் பேசியதைத் தொடர்ந்து சூப்பர்வைசரிடம் முறையிடுவோம் என கார் உரிமையாளர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பொது இடங்களில் பணியாற்றுவதற்கு தமிழ் தெரிந்தவர்கள் அல்லது ஆங்கிலம் தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும், இந்தி தெரியாதவர்கள் இவர்களிடம் எப்படி உரையாடுவது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நடந்து வரும் சூழலில் இந்த வீடியோ பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் குறித்து விமான நிலைய வட்டாரத்தில் விசாரித்த போது மேற்கண்ட சம்பவம் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்றது.
இதுகுறித்து காவல் நிலைய புகாரின் அடிப்படையில் கார் உரிமையாளரை ஒருமையில் பேசிய அந்த வாலிபர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார், இந்த நிலையில் இப்பொழுது இந்த காணொளியை வைரல் ஆவது என்ன காரணம் என தெரியவில்லை என்றனர்.
க.சண்முகவடிவேல்