ARTICLE AD BOX
ஜெர்மனி தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி வெற்றி - ஈலோன் மஸ்க் ஆதரித்த கட்சி என்ன ஆனது?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், பால் கிர்பி
- பதவி, ஐரோப்பிய டிஜிட்டல் பிரிவு ஆசிரியர், பெர்லின்
- 4 நிமிடங்களுக்கு முன்னர்
ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளைக் காட்டிலும் முன்னிலையில் இருந்தாலும், அக்கட்சியால் எதிர்பார்த்தபடி 30 சதவீத வாக்குகளை பெற இயலவில்லை.
"இன்றிரவு இந்த வெற்றியைக் கொண்டாடுவோம். நாளை காலை நாம் செய்வதற்கு வேலைகள் இருக்கின்றன," என்று உற்சாகமாக தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்தார் மெர்ஸ்.
"என் முன்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பலன் பெற்ற மற்றொரு கட்சி தீவிர வலதுசாரி கட்சியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி (AfD) கட்சியாகும். 20.8 சதவீத வாக்குகளுடன் அந்த கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜெர்மனியின் சான்சிலர் பதவிக்கான, இக்கட்சியின் வேட்பாளர் ஆலிஸ் வெய்டல், தனது ஆதரவாளர்களிடம் இந்த சாதனை குறித்து பேசினார். ஆனால் அவரது கட்சி இதைவிட அதீதமான வாக்குகளையும் பெரிய வெற்றியையும் எதிர்பார்த்தது.
திங்கட்கிழமை அதிகாலையில் வெளியான முடிவுகளின் படி, கிழக்கு பிராந்தியத்தில் இந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
ZDF நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில் இக்கட்சி 34 சதவீத வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டிருந்தது.

"ஜெர்மானியர்கள் மாற்றத்திற்கு வாக்களித்துள்ளனர்," என்று கூறிய ஆலிஸ் வெய்டல், கூட்டணியை உருவாக்கும் மெர்ஸின் முயற்சி தோல்வியில் தான் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.
"தேர்தல் மீண்டும் நடக்கும். அதற்காக இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.
யாருக்கு எவ்வளவு வாக்குகள்?
1990க்கு முன்பு இரண்டாக பிரிந்து கிடந்த அந்த நாடு இணைவதற்கு முன்பு பார்த்த வாக்குப்பதிவை இந்த தேர்தலில்தான் காண முடிந்தது. இம்முறை 83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆனால் மெர்ஸின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் 28.6 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் அக்கட்சி அதைவிட வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது.
Mல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கட்சியுடன் இணைந்து பணியாற்ற மெர்ஸ் மறுத்துவிட்டார். ஜெர்மனியில் உள்ள பிரதான கட்சிகள் தீவிர வலதுசாரிகளுடன் இணைந்து செயல்படுவதில் ஏதோ ஒரு தடை அங்கே நிலவுகிறது.
ஆனால் மெர்ஸூடன் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி (Social Democrats), 16.4% வாக்குகளை இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது. ஆனால் இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அக்கட்சிக்கு கிடைத்த குறைந்த வாக்குவிகிதம் ஆகும்.
அக்கட்சியின் தலைவரும் பதவியில் இருந்து வெளியேறும் சான்சிலருமான ஓலாஃப் ஷோட்ஸ், கட்சிக்கு ஒரு மோசமான தோல்வி என்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறினார்.
கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கு எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவான வாக்குகளே கிடைத்திருப்பதால், இந்த இரண்டு கட்சிகள் சேர்ந்தால் ஆட்சியமைக்க போதுமானதாக இருக்குமா என்பதில் ஆரம்பத்திலேயே சில சந்தேகங்கள் இருந்தன.
ஜெர்மனியில் மூன்று கட்சிகள் சேர்த்து அமைத்த கூட்டணியின் ஆட்சி தற்போது நான்கு ஆண்டுகளைக் கடந்து விட்டது. இப்போது அங்கே கூட்டணிக்கான ஒரே ஒரு சாத்தியமான வாய்ப்பு மட்டுமே உள்ளது. அது பசுமைக் கட்சி.
இருப்பினும், பசுமைக் கட்சியின் தலைவரான ராபர்ட் ஹேபெக்கை தேர்தலுக்கு முன்பு "வெப்ப குழாய்களுக்கான பிரதிநிதி" என்று கூறி மெர்ஸ் கேலி செய்திருந்தார்.
69 வயதான மெர்ஸ் ஒருபோதும் அமைச்சராகப் பதவி வகித்ததில்லை. ஆனால் அவர் ஜெர்மனியின் அடுத்த சான்சிலரானால் ஐரோப்பாவில் ஜெர்மனியின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி யுக்ரேனுக்கு ஆதரவை வலுப்படுத்த உறுதியளித்துள்ளார்.
உலக பணக்காரர் ஈலோன் மஸ்க் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகிய இருவரும் ஜெர்மனி தேர்தலில் ஆல்டர்நேடிவ் ஃபார் ஜெர்மனி (AfD) கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது பெரும்பாலான ஜெர்மானியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மியூனிச் மாநாட்டுக்குச் சென்ற போது, ஜெர்மனி தேர்தலில் தலையிட முயன்றதாக வான்ஸ் குற்றஞ்சாட்டப்பட்டார். ஜெர்மனி தேர்தல் குறித்து ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கட்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கூடுதலாக 10 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
வெற்றிகரமான டிக்டாக் பிரசாரத்தின் மூலமாக, பெரும்பாலான இளம் வாக்காளர்களை கவர்ந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெர்ஸின் வெற்றியை வரவேற்றுள்ளார். இதனை நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக மெர்ஸ் கருதவில்லை.
- ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்5 மணி நேரங்களுக்கு முன்னர்
ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த ஒரு வட்டமேசை தொலைக்காட்சி விவாதத்தில், டிரம்ப் நிர்வாகம் ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து பெரிதும் அலட்சியமாக உள்ளது என்பது கடந்த வாரத்தில் தெளிவாகிவிட்டது என்று அவர் கூறினார்.
மெர்ஸ், தனது "முன்னுரிமை", "முடிந்தவரை விரைவாக ஐரோப்பாவை வலுப்படுத்துவது என்று தெரிவித்தார். இதன் மூலம் படிப்படியாக அமெரிக்காவிடம் இருந்து உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்" என்றும் அவர் கூறினார்.
மெர்ஸின் வெற்றிக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து வரவேற்பு கிடைத்தது.
இந்த அசாதாரண காலகட்டத்தில் ஒன்றிணைந்து, "உலகத்திற்கும் நமது கண்டத்திற்கும் முன்பாகவுள்ள முக்கிய சவால்களை சமாளிக்க" வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறினார்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், "நமது கூட்டு பாதுகாப்பை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க" வேண்டும் எனத் தெரிவித்தார்.
8 முதல் 24 வயது வரை உள்ள வாக்காளர்கள் ஆல்டர்நடிவ் ஃபார் ஜெர்மனி மற்றும் இடதுசாரிகள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
பிரெட்ரிக் மெர்ஸின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கு முதிர்ந்த வாக்காளர்களிடையே அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
சிறிது காலத்திற்கு முன்பு, இடதுசாரிகளுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே ஆதரவு இருந்தது.
ஆனால் இடதுசாரிக் கட்சியின் இணைத் தலைவரான ஹெய்டி ரெய்ச்சினெக், நாடாளுமன்றத்தில் ஆவேசமாக உரையாற்றிய டிக் டாக் வீடியோக்கள் அடுத்தடுத்து இணையத்தில் மிகவும் பிரபலமானது.
இதன் விளைவாக, அக்கட்சிக்கு ஆதரவு கணிசமாக அதிகரித்தது. அக்கட்சிக்கு கிட்டத்தட்ட 9 சதவீத வாக்குகள் கிடைத்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)