ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் வரும் மார்ச் 19-ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்பதும், ஓலா, ஊபர் போன்ற செயலி நிறுவனங்கள் சட்ட விரோதமாக அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் பிரதான கோரிக்கைகளாக இருக்கிறது. தமிழக அரசு 2022-ல் 1.5 கிமீக்கு ரூ.50, அதன் பின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 என நிர்ணயித்தது. ஆனால், செயலி நிறுவனங்கள் 1.8 கிமீக்கு ரூ.76 வரை வசூலிக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு செயல்படும் ஆப் நிறுவனங்களை கண்டித்து, அரசே ஒரு தனி ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும் என சங்கங்கள் வலியுறுத்துகின்றன. அரசு தலையிட்டு உடனடி தீர்வு வழங்கவில்லை என்றால், வேலைநிறுத்தம் மாபெரும் போராட்டமாக மாறும் என ஒட்டுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் எனவும், ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.