ARTICLE AD BOX
தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்னரே வெப்பநிலை உயர்ந்து வருகிறது. வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இரவில் கடும் குளிரும், அதிகபட்ச வெப்ப நிலையும் நிலவுகிறது. இந்த ஆண்டில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதை சமாளிக்க அரசும் மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். வரும் 23 முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 27ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 24ம் தேதி வரை அடுத்த நான்கு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 25ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.

இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°- 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதற்கடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.