சிண்டுமுடிகிறாரா சிறுத்தை கட்சி எம்.பி. ரவிக்குமார்?- சிபிஎம் நிர்வாகி பதிலடி!

2 hours ago
ARTICLE AD BOX

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம்பெற்றுள்ளன. இதில் ஆதவ் அர்ஜூனா துணைமுதலமைச்சர் தலித்தாக இருக்கக்கூடாதா என விவகாரத்தை எழுப்ப, அதை முன்னிட்டு வி.சி.க. அணி தாவுமா எனப் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரே கட்சி தாவியதால் அந்தப் பேச்சு முடிவுக்கு வந்தது. 

இந்த நிலையில், வி.சி.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார், இன்று காலை ஒரு திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். வரும் ஏப்ரல் மாதத்தில் மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு அக்கட்சி தீர்மான வரைவுகளை வெளியிட்டிருக்கிறது. அதில் ஒன்றை எடுத்துப்போட்டுதான், இரவி பரபரப்பை உண்டுபண்ணியுள்ளார். 

”காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது”

சிபிஐ எம் கட்சியின் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள வரைவுத் தீர்மானத்தில் அறிவிப்பு” எனத் தலைப்பிட்டு, இரவிக்குமார் தன் சமூகஊடகப் பக்கத்தில் கூறியிருப்பது: 

”சிபிஐ எம் கட்சியின் 24 ஆவது தேசிய மாநாடு இன்னும் சில மாதங்களில் மதுரையில் நடைபெறவுள்ளது. அதில் நிறைவேற்றுவதற்கான வரைவுத் தீர்மானங்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்டுள்ளன. அதில் பாஜக, காங்கிரஸ், மாநிலக் கட்சிகள் குறித்த மதிப்பீடும் முன்வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியைக் குறித்துப் பின்வருமாறு அதில் கூறப்பட்டுள்ளது ( பக்கம் 52-53) :

“ காங்கிரஸ்:

இந்தியா கூட்டணியின் கூட்டாளிகளைப் பயன்படுத்தி காங்கிரஸ் மக்களவையில் தனது பலத்தை 44 லிருந்து 100 ஆக உயர்த்த முடிந்தது,. நாடு முழுவதும் முஸ்லிம் சிறுபான்மையினரின் ஆதரவைக் கணிசமான அளவில் பெற முடிந்தது. காங்கிரஸின் தளம் கணிசமாக விரிவடையவில்லை.

வட இந்தியாவில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஹரியானாவில் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஒடிசா மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில், அது கணிசமாக பலவீனமடைந்துள்ளது. கர்நாடகா மற்றும் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று அங்கு அரசாங்கங்களை அமைத்ததன் மூலம் தெற்கில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது பொருளாதாரக் கொள்கை திசையை மாற்றவில்லை. அது ‘குரோனி முதலாளித்துவத்திற்கு’ எதிராகப் பேசுகிறது, ஆனால் அத்தகைய முதலாளிகளை உருவாக்கும் அதே புதிய தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றுகிறது. அதன் தேசியத் தலைமை இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக மிகவும் வெளிப்படையான நிலைப்பாட்டை எடுத்து வரும் அதே வேளையில், பாஜக மற்றும் அதன் இந்துத்துவா கூட்டாளிகளின் ஆக்ரோஷமான தாக்குதலை எதிர்கொள்ளும்போது காங்கிரஸில் இன்னும் ஊசலாட்டங்களும் சமரசம் செய்துகொள்ளும் போக்கும் உள்ளன. காங்கிரஸ் கட்சி பாஜகவைப் போலவே அதே வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இருப்பினும், முக்கிய மதச்சார்பற்ற எதிர்க்கட்சியாக இருப்பதால், பாஜகவுக்கு எதிரான போராட்டத்திலும், மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமையிலும் அதற்கு ஒரு பங்கு உண்டு. காங்கிரஸ் குறித்த சிபிஐ(எம்) இன் அணுகுமுறை மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமைக்கான தேவையால் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், சிபிஐ எம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் ஒரு அரசியல் கூட்டணியை வைத்துக்கொள்ள முடியாது.”என்று இரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். 

கூடவே குறிப்பிட்ட தீர்மான வரைவின் ஆங்கில நகலையும் அவர் இணைத்துள்ளார். 

அவருடைய இந்தக் கருத்தையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் அக்கட்சியின் மார்க்சிஸ்ட் மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினருமான சிந்தன் இரவிக்குமாரின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். 

இரவிக்குமார் தலைப்பிட்டிருக்கும் “காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது” எனும் வாசகம், மார்க்சிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநாட்டிலேயே நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் என்றும், அதன்பிறகே இந்தியா கூட்டணியின் அங்கமாகச் சேர்ந்து தேர்தலில் இணைந்து போட்டியிட்டது பற்றியும் விவரித்துள்ளார். அதாவது, தேர்தல் கூட்டணி என்பது வேறு; கொள்கைசார்ந்த அரசியல் கூட்டணி வேறு என மார்க்சிஸ்ட் கட்சியின் ஆவணம் முன்வைக்கும் கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். 

”கீழே இணைத்திருப்பது சி.பி.ஐ(எம்) சென்ற மாநாட்டில் எடுத்த அரசியல் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நின்றுதான், இந்தியா கூட்டமைப்பு ஏற்படுவதற்கும், வலுப்படுத்தவும் சி.பி.ஐ(எம்) உழைத்தது. பல மேடைகளில் தோழர் @SitaramYechury முயற்சிகளை வியந்து பேசியது வி.சி.க.

தற்போதும், சி.பி.ஐ(எம்) நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஆனால், பாஜக/ஆர்.எஸ்.எஸ் போக்குகளை விவரித்துள்ளது.

நாட்டில் நவபாசிச போக்குகள் வேகம் எடுத்திருப்பதை சரியாகவே சுட்டிக்காட்டி, பொது விவாதத்திற்கும் விட்டுள்ளது. வரைவு தீர்மான நகல் cpim.org என்ற முகவரியில் ஆங்கிலத்திலும், தமிழில் நூலாகவும் கிடைக்கிறது.

அன்புத் தோழர் ரவிக்குமார் எம்.பி அவர்கள் முழுமையாக வாசித்து ஏதேனும் திருத்தங்கள் தேவையெனில் அனுப்பலாம்.

சி.பி.ஐ(எம்) தனது மாநாடுகளில்தான் அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றும். முன்னெடுக்கும். விவாதத்தில்‌ கட்சியினர், ஆதரவாளர்கள் அனைவரும் பங்கேற்கலாம்‌.” என்று இரவிக்குமாருக்கும் சிந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது, ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும் பெரியாரைப் பற்றி தமிழ்நாட்டில் கடுமையாக எழுதி, சர்ச்சைக்கு உள்ளானவர் இரவிக்குமார். அப்போது அவர் புதுச்சேரியில் வசித்துவந்தார். வி.சி.க.வில் பதவியைப் பெற்று, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபின்னர் முதலில் தோல்வியடைந்தாலும் பின்னர் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக எம்.பி.யாக இருக்கிறார். இதற்கிடையே, அவர் தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதி குறித்தும் பெரியார் குறித்தும் சட்டமன்றத்தில் பெருமளவில் புகழ்ந்தும் பேசியதால், அந்தப் பிரச்னை ஓய்ந்தது. 

இடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் கீழ்வெண்மணி நினைவிடத்தைக் கைப்பற்றுவோம் என வி.சி.க. அறிவித்தபோது பிரச்னையாகி காவல்துறைக்கு சட்டம் ஒழுங்குச் சிக்கலும் ஏற்பட்டது. பின்னர் அதே கட்சியுடன் தேர்தல் கூட்டணியும் வைத்துக்கொண்ட நிலையில் அந்தப் பிரச்னையும் இரு தரப்பினரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஒன்றாக மறைந்துபோனது. 

இந்த நிலையில், இப்போது நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சூழலில், தி.மு.க. அணியில் மாற்றம் வருமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. இதில், வி.சி.க.வின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான இரவிக்குமார் கூட்டணியில் உள்ள அகில இந்தியக் கட்சியின் கடந்த மாநாட்டுத் தீர்மானத்தைப் புதிதுபோல சமூக ஊடகத்தில் வெளியிட்டிருப்பதை, மார்க்சிஸ்ட் கட்சியினர் அவ்வளவாக ரசிக்கவில்லை. இரவிக்குமாரின் இந்தப் பதிவு சிண்டுமுடியும் வேலையா என அவர்கள் கோபமடைந்துள்ளனர். 

இரவிக்குமார் இப்படிச் செய்வதற்கான தேவை இப்போதைய அரசியல் சூழலில் என்ன என்பது மார்க்சிஸ்ட் கட்சியினரின் முக்கியமான கேள்வி. 

குறைந்தபட்சம், சிந்தனின் கேள்விக்கு இரவிக்குமார் என்ன பதில் சொல்வார் என்று பார்ப்போம்! 

Read Entire Article