ARTICLE AD BOX
அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மதுபான விநியோக கொள்கை முறைகேடுகள் காரணமாக டெல்லி அரசுக்கு 2002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேகா குப்தா தலைமையில் பதவி ஏற்றுள்ள புதிய டெல்லி அரசு கிடப்பில் வைக்கப்பட்டிருந்த மதுபான விநியோகக் கொள்கை தொடர்பான சிஏஜி அறிக்கையை செவ்வாய்க்கிழமை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
2021-22 நிதியாண்டில் மதுபான விநியோக கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோதியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய மதுபான கொள்கை மாற்றம் தொடர்பான சிஏஜி அறிக்கையை புதிய முதலமைச்சர் ரேகா குப்தா டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
பலவீனமான கொள்கை மற்றும் நடைமுறைப்படுத்துவதில் முறைகேடுகள் ஆகியவை சிஏஜி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மேலும் மதுபானங்களின் தரத்தை பரிசீலனை செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான சிஏஜி அறிக்கை உள்ளிட்ட 14 சிஏஜி அறிக்கைகளை ஆம் ஆத்மி கட்சி அரசு கிடப்பில் வைத்ததாக பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் முக்கிய இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. உரிமங்கள் வழங்குவது தொடர்பாக வல்லுனர்கள் குழு அளித்த பரிந்துரைகளை முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா புறம்தள்ளினார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலால் துறை முன்னாள் துணை முதல்வரான மணிஷ் சிசேடியா வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. வல்லுநர்களின் பரிந்துரைகளைப் புறந்தள்ளி முறைகேடுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஈடுபட்டதாக பாஜக தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் குற்றம் சாட்டினர்.
புதிய மதுபான விற்பனை மையங்களை திறக்க அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக 941.53 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 890.15 கோடி ரூபாய் உரிமைதொகை வசூல் செய்வதில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்துறை சுட்டிக்காட்டி 144 கோடி உரிமத்தொகை தள்ளுபடி செய்யப்பட்டதாலும் வருவாய் இழப்பு ஏற்பட்டது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சட்டசபை தேர்தல் பரப்புரை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நிலுவையில் வைத்துள்ள சிஏஜி அறிக்கைகள் சட்டசபை முதல் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு உண்மை வெளிவரும் என வலியுறுத்தி வந்தனர். அதே சமயத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை எனவும் மதுபான கொள்கை தொடர்பான வழக்கு ஜோடிக்கப்பட்டது எனவும் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி வருகிறது.