ARTICLE AD BOX
தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் மறந்துவிடாதீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பின் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; பெண்கள் கல்வி – வேலைவாய்ப்பு பெற்று, வாழ்க்கையில் முன்னேற ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மகளிர் முன்னேற்றத்திற்கு சிறிய தடை கூட ஏற்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதனால்தான், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனே, விடியல் பயணம் திட்டத்தை செயல்படுத்தினேன்.
இது போன்ற திட்டங்கள், தேவையுள்ள அத்தனைப் பேருக்கும் பாகுபாடு இல்லாமல் கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான், மகளிருக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தில், அடுத்ததாக, திருநர்கள் – மாற்றுத் திறனாளிகள் – அவர்களின் துணையர் என்று எல்லோருக்கும் விடியல் பயணத்தின் பயனை வழங்கினோம்.
ஏராளமான தடைகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நேற்றைய தினம், நம்முடைய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நான் கடிதம் எழுதினேன்.
அதற்கு இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறார். நான் கேட்கிறேன். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான், கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியைத் தருவோம் என்று ‘ப்ளாக்மெயில்’ செய்வதற்கு பெயர் என்ன? அரசியல் இல்லையா…?
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு 5,000 கோடி ரூபாய் இழக்கிறது என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே, தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் மறந்துவிடாதீர்கள். கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சித் தத்துவம். அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை. அதைகூட புரிந்துக்கொள்ளாதவர்கள் ஒன்றியத்தை ஆள்வதுதான் இந்தியாவுக்கே மிகப்பெரிய சாபக்கேடு என தெரிவித்துள்ளார்.
The post தமிழக வரியை தரமாட்டோம் என்று சொல்ல ஒரு நொடி போதும்…! முதல்வர் ஸ்டாலின் கொடுத்த எச்சரிக்கை…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.