ARTICLE AD BOX

நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. அணியின் முக்கிய வீரர்கள், குறிப்பாக பாபர் அசாம், ஷாதாப் கான், ஷாஹீன் அஃப்ரீதி போன்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பது தான் அணியின் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தற்போதைய பார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுடயை கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது இந்தியா பி அணியை கூட பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெறுவது சந்தேகம் தான் என கூறியுள்ளார் .
இது குறித்து பேசிய அவர் ” பாகிஸ்தான் அணியின் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி பார்க்கும்போது கொஞ்சம் கவலையாக தான் இருக்கிறது. இப்போது அவர்களுடைய பார்ம் வைத்து சொல்லவேண்டும் என்றால் நிச்சயமாக இந்தியாவின் B அணி கூட அவர்களுக்கு சவாலாக தான் இருக்கும். இந்தியாவின் C அணியைப் பற்றிச் சொல்ல முடியாது, ஆனால் B அணி பாகிஸ்தானை வீழ்த்த அணைத்து வாய்ப்புகளும் உள்ளது.
மொஹம்மத் ரிஜ்வான் தனது முதல் பந்தையே பவுண்டரியாக அடித்தார். உடனே, பாகிஸ்தான் அணியின் அணுகுமுறை மாறுமோ என நினைத்தேன், ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பாகிஸ்தான் அணிக்கு எப்போதுமே தனித்திறமை ஒன்று இருப்பது அவர்களுடைய விளையாட்டை பார்க்கும்போது நமக்கு தெரியும். ஆனால், இந்த முறை அப்படி எதுவும் தெரியவில்லை.
பாகிஸ்தான் அணியில் இளமையாக திறமையான வீரர்கள் ஆரம்ப காலத்தை போல இணையாமல் இருப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டி இருக்கிறது. எனவே, அதன் மூலம் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.
இந்திய அணியை எடுத்துக்கொண்டோம் என்றால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நிறைய தரமான இளம் வீரர்களை உருவாக்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எப்படி என்றால் ஐபிஎல் காரணமாகவும் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவதன் காரணமும் தான் அவர்களுக்குக் நல்ல வீரர்கள் கிடைக்கிறார்கள். எனவே, அவர்களை போல பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் நல்ல வீரர்களை தேர்வு செய்யுங்கள்” எனவும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.