ARTICLE AD BOX

சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கடையநல்லூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தியபோது அங்கிருந்த பெயர் பலகைகளில் பெயர் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை கருப்பு பெயிண்ட் வைத்து இந்தியை அழிப்பதற்கு பதிலாக ஆங்கிலத்தை அழித்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் ” இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் அறவழிப் போராட்டம். அன்னைத் தமிழை ஆதிக்க மொழியிடமிருந்து பாதுகாக்கின்ற போராட்டம். இனத்தின் அடையாளத்தைத் தக்கவைத்து, தாய்மொழியைக் காலத்திற்கேற்ற அறிவியல் தொழில்நுட்பத் தன்மையுடன் வளர்த்தெடுக்கும் போராட்டம்.
85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்” என எழுதியிருந்தார். இதனையடுத்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” திமுகவின் போலி நாடகத்தை மக்கள் நம்பப்போவதில்லை” என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது ” திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்
அவர்கள், கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கழகக் கண்மணிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன். அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மும்மொழி கற்கத் தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்கவேண்டும் என்றால் திமுகவினர் நடத்தும் CBSE அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா திரு ஸ்டாலின்?
உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே” எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு @mkstalin அவர்கள், கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கழகக் கண்மணிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன்.
அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று…
— K.Annamalai (@annamalai_k) February 25, 2025