தமிழக பட்ஜெட் மக்கள் எதிர்பார்ப்பு என்ன.? தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றுமா.?

3 days ago
ARTICLE AD BOX

திமுக அரசு 2021 தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருப்பினும், முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். வரவிருக்கும் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக பட்ஜெட் மக்கள் எதிர்பார்ப்பு என்ன.? தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றுமா.?

தமிழகத்தில் 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுகவை வீழ்த்தி திமுக கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. பலம் பொருந்திய அதிமுகவை வீழ்த்த திமுகவின் தேர்தல் வாக்குறுதி முக்கிய அம்சமாக அமைந்தது. அந்த வகையில்  505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து ஆட்சிக்கு வந்த உடன் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் ஒன்று ஒன்றாக நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமில்லாமல் தேர்தலில் கொடுக்காத வாக்குறுதிகளையும் செயல்படுத்தியது. அதன் படி  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். விடியல் பயணத் திட்டம்,

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம். தமிழ்ப்புதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டம். கலைஞரின் கனவு இல்லத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும்-48, மக்களுடன் முதல்வர். தொழில்துறை 4.0 திட்டம். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். இல்லம் தேடி கல்வி என திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. 

அந்த வகையில் தமிழ்நாட்டில்  கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதில் தற்போது  90 விழுக்காட்டுக்கும், அதாவது  450க்கும் கூடுதலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு.?

 ஆனால் திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறது. குறிப்பாக மின்சாரக் கட்டணம் மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்,  சமையல் எரிவாயுவுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்,  தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கப்படும்,  ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை, 50 லட்சம் பேருக்கு தனியார் வேலை வழங்கப்படும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

காத்திருக்கும் அரசு ஊழியர்கள்

இதுமட்டுமில்லாமல், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்படும், அவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும் இந்த வாக்குறுதிகள் இன்னமும் நிலுவையில் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி எதிர்பார்த்து அரசு ஊழியர்கள் காத்து உள்ள நிலையில் அது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது குழு அமைத்துள்ளது தமிழக அரசு.

தமிழக பட்ஜெட் எதிர்பார்ப்பு என்ன.?

இந்த நிலையில் தான்  5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள திமுக அரசு தனது கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. அதன் படி மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை இன்னமும் ஒதுக்கவில்லை. இதனால் தற்போது தமிழக அரசு நிதி பற்றாக்குறையால் திணறி வருகிறது.

பெண்களுக்கான திட்டங்கள்

எனவே இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான கூடுதல் திட்டங்கள் தீட்டப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் பெண்களின் ஓட்டை கவரும் வகையில் மகளிர் உரிமை தொகைக்கான  நிதியுதவியை உயர்த்தி வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும்  2026ஆம் ஆண்டு தேர்தலையொட்டி மக்களைக் கவரும் திட்டங்கள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article