ARTICLE AD BOX

NEEK Review: தனுஷ் இயக்கியுள்ள 3வது திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் முழு விமர்சனத்தை பார்ப்போம்.
நடிகர்கள்: தனுஷின் சகோதரி மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ், வெங்கடேஷ் மேனன், மேத்யூ தாமஸ், சரத்குமார், சரண்யா பொன்வண்னன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர்.
இன்றைய 2k கிட்ஸ் இளைஞரின் வாழ்வில் வரும் காதலும், அதன் தோல்வியும், அவருக்கு நடக்கவுள்ள திருமணமும் அவரை என்ன செய்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தை துவங்கும்போதே ‘இது வழக்கமான காதல் கதை’ என சொல்லியே படத்தை துவங்குகிறார் தனுஷ். தன்னை விட்டு போன காதலி நிலா (அனிகா சுரேந்திரன்)வை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபுவுக்கு திருமணம் செய்து வைக்க அவரின் அம்மா சரண்யாவும், அப்பா ஆடுகளம் நரேனும் முடிவு செய்கிறார்கள். பிரபுவுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவரை அவரின் அப்பா, அம்மா வலுக்கட்டாயமாக கூட்டி செல்கிறார்கள்.
அங்கு போய் பார்த்தால் அவர் பார்க்க வந்த பெண் அவருடன் படித்த பிரியா பிரகாஷ். இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள சில நாட்கள் இருவரும் நன்றாக பழகட்டும், சரி வந்தால் திருமணம் என முடிவெடுக்கிறார்கள். அங்குதான் பிரச்ச்னை துவங்குகிறது. திருமணத்திற்கு நிறைய கண்டிஷன் போடுகிறார் பிரியா பிரகாஷ். அதை எதிர்கொள்ளும்போது நிலாவின் (அனிகா) திருமண பத்திரிக்கை பிரபுவுக்கு வருகிறது. திருமணம் கோவாவில் நடப்பதால் அங்கு போய் அவரை பார்க்க வேண்டும். அவரிடம் பேச வேண்டும். எதையாவது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் நண்பர்களுடன் அங்கு போகிறார் பிரபு. அதற்கு பின் என்ன ஆனது?. விட்டுப்போன காதலியை கரம் பிடித்தாரா?. அவரின் காதல் தோல்வி என்ன ஆனது?. அல்லது பிரியா பிரகாஷை திருமணம் செய்தாரா? என்பது மீதிக்கதை.

ஹீரோ பவிஷ்: பவிஷுக்கு நடிப்பே வரவில்லை. எல்லா காட்சியிலும் முகத்தை ஒரே மாதிரி வைத்திருக்கிறார். அவர் பேசும் ஸ்டைலும், உடல் மொழியும், நடிப்பும் பார்ப்பதற்கு குட்டி தனுஷ் போலவே இருக்கிறது. அனிகா அவரின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். பிரியா பிரகாஷின் நடிப்பும் அருமை. அதேபோல், மேத்யூ தாம்ஸும் நடிப்பில் அப்ளாஸ் வாங்குகிறார்.
இயக்குனர் தனுஷ்: இன்றையை 2k கிட்ஸ்களின் மனநிலை, அவரின் காதல் வாழ்க்கை, திருமணத்தில் அவர்களின் எதிர்ப்பார்ப்பு என எல்லாவற்றையும் திரையில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர் தனுஷ். தியேட்டருக்கு சினிமா பார்க்க வருபவர்கள் இவர்கள்தான் என்பதை புரிந்துகொண்டு அவர்கள் டார்கெட் செய்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

பிளஸ்: இசை மற்றும் பின்னணி இசை, கோல்டன் ஸ்பேரே பாடலை படம் பிடித்த விதம், இளமையான நடிகர்கள், கலர்புல் காதல் போன்றவற்றை சொல்லலாம். ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய பலம். அவர் வந்து பாடும் பிரேக்கப் பாடலுக்கு தியேட்டரில் கைத்தட்டல் பறக்கிறது.
மைனஸ்: பவிஷின் நடிப்பு பலவீனமாக இருக்கிறது. ஹீரோ முதல் கொண்டு எல்லோருமே பார்ப்பதற்கு பிளஸ் டூ மாணவர்கள் போல இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணமா? என்கிற கேள்வியே படத்தின் பெரிய பலவீனம். சீரியஸாக சொல்ல வேண்டிய கதையை மிகவும் ஜாலியாக சொல்லி சொதப்பி வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்த காட்சிகள் வந்து கிரின்ச்சை ஏற்படுத்துகிறது. கஞ்சா, மது என ஏற்கனவே தமிழகம் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் அதை ஊக்குவிப்பது போல படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் மது அருந்தி கொண்டே இருக்கிறார்கள். அதை தவிர்த்திருக்கலாம்.
தனுஷின் இயக்கத்திற்காக ஒருமுறை பார்க்கலாம்!..