ARTICLE AD BOX
தெலங்கானாவின் மேட்சல் மாவட்டத்தில் கட்கேசர் மண்டலத்தில் உள்ள எதுலாபாத் என்ற கிராமத்தில் அமைந்துள்ள கோதா ரங்கமன்னார் சுவாமி கோயில் இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றாகும்.
மாநிலம் முழுவதும் இதுபோன்ற பல கோயில்கள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அடுத்தபடியாக, ஆண்டாளுக்காக கட்டப்பட்ட 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் உத்தர ஸ்ரீவில்லிபுத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் ரங்கநாத சுவாமி என்றாலும், கோதா என்கிற கோதை தேவி தான் இங்கு முக்கிய தெய்வமாக வணங்கப்படுகிறாள்.
வரலாற்றின்படி 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், குலி குதுப் ஷாவின் ஆட்சியின் போது, எதுலாபாத் என்ற இந்த கிராமம் ராயபுரம் என்று அழைக்கப்பட்டது. இந்த இடத்திற்கு சீனிவாச தேசிகாசாரி மற்றும் அவரது குடும்பத்தினர் புனித யாத்திரையாக வந்தனர். தேசிகாசாரி உடல் நலக்குறைவால் இறந்தபோது, அவரது மனைவி அலிவேலம்மா மற்றும் அவரது மகன் அப்பலா தேசிகாசாரி இந்த இடத்திலேயே தங்கி விட்டனர். ஆண்டாள் பக்தரான அப்பலா தேசிகாசாரி அங்குள்ள வேணுகோபால் கோயிலுக்கு எதிரில் கோதை தேவிக்காக ஒரு சிறிய சன்னதியை கட்டி வணங்கி வந்தார்.
ஒரு முறை அலிவேலம்மாவும் அவரது மகன் அப்பலா தேசிகாசாரியும் தங்கள் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றபோது, அங்கு உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதே நாளில், அப்பலா தேசிகாசாரி கனவில் கோதை தேவி தோன்றி, ராயபுரத்திற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டாள். அடுத்த நாள், அவர்கள் ஆச்சரியப்படும் வகையில், கோதா தேவி மற்றும் ரங்கமன்னார் சிலைகளை தங்கள் வளாகத்தில் கண்டனர். அந்த சுயம்பு சிலைகளை ராயபுரத்திற்கு கொண்டு வந்து வைத்து அந்த சிறிய சன்னதியில் பிரதிஷ்டை செய்தனர்.
ஆனால், ஆண்டாள் கருடாத்ரி என்ற இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே கோயில் கட்டுமாறு அப்பலா தேசிகாசாரியிடம் தெரியப்படுத்தினாள். அந்த நாட்களில், இந்த இடம் அடர்ந்த காடாக, விலங்குகள் மற்றும் கருட பட்சிகள் உள்ளிட்ட பறவைகள் வசித்து வந்த இடமாக இருந்தது. ஆனால் கோதா தேவியின் அருளால் அந்த இடத்தில் கோதை மற்றும் ஶ்ரீரங்கமன்னார் கோயிலைக் கட்டி பிரதிஷ்டை செய்தனர்.
தேவியே அங்குள்ள பணக்கார ஜமீன்தார்களின் கனவில் வந்து அப்பலா தேசிகாசாரிக்கு கோயில் கட்ட உதவுமாறு கூறியதாக வரலாறு. அதனால் தான் ஆண்டாளே தனக்காக கட்டிய கோயில் எனக் கூறப்படுகிறது.
கோதா தேவிக்கு காஜுலா ஆண்டாளம்மா என்ற பெயரும் உண்டு. ஒரு இளம் பெண் அந்த கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சில வண்ணமயமான வளையல்களைக் கண்டாள். அவள் உடனடியாக விற்பனையாளரிடம் சென்று சில வளையல்களைக் கேட்டாள். அவளிடம் பணம் இல்லை, ஆனால் தன் தந்தையான அப்பலாசாரியிடம் பணத்தை வாங்கிக் கொள்ளச் சொல்லி விட்டு வளையல்களை அணிந்து கொண்டு மறைந்தாள்.
மறுநாள் வளையல் விற்பவன் பூசாரியிடம் பணம் கேட்டான். தனக்கு மகள் இல்லை என்று சொன்னவர், வந்தது கோதா தேவியாக இருக்குமோ என்ற ஐயம் வர விரைந்து கோயில் உள்ளே சென்று பார்த்த போது, அங்கே ஆண்டாள் கைநிறைய வண்ண வளையல்களுடன் நின்று கொண்டிருந்தாள். அம்பாளே தன்னிடம் வளையல் வாங்கினாள் என்பதை உணர்ந்த வளையல் விற்பவர் உடனடியாக ஒரு ஜோடி தங்க வளையல்களைத் தயாரிக்கச் செய்தார். அதை கோதையம்மா இன்றும் அணிந்திருக்கிறார்.
திருமணமாகாத பெண்கள் பூஜை செய்து அம்மனுக்கு வளையல்களை சமர்ப்பித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கோயில் கருவறையில் ஸ்ரீரங்கநாதர் தன் இருபுறமும் ஆண்டாள் மற்றும் பெரியாழ்வாருடன் நின்றபடி காட்சி தந்து அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் அப்பலா தேசிகசாரியின் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக கோயில் பராமரிப்பு மற்றும் பூஜைகளை கவனித்து வருகின்றனர். ஸ்ரவண மாதத்தில் (ஆகஸ்ட்) பிரம்மோஸ்த்சவம் மற்றும் கோதா தேவி கல்யாணம் ஆகியவை கோயிலின் முக்கிய திருவிழாக்களாகும். அப்போது பெருமளவில் பக்தர்கள் திரண்டு வந்து விழாக்களில் பங்கேற்று ஆண்டாள் மற்றும் ஸ்ரீரங்கமன்னார் சுவாமியின் அருளைப் பெறுகின்றனர்.