ARTICLE AD BOX
தம்மம்பட்டி: இரு குழந்தைகளை அவா்களது தந்தை வெட்டிக் கொன்ற சம்பவத்தில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகளின் தாயும் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இச்சம்பவத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள 74, கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவரது மனைவி தவமணி. இவா்களுக்கு மூன்று குழந்தைகள். அசோக்குமாா் கடலூா் மாவட்டம், நெய்வேலியில் ஆட்டோ ஓட்டி வருகிறாா்.தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனா். கடந்த 19 ஆம் தேதி வீட்டுக்கு வந்த அசோக்குமாா் மனைவி தவமணி, மூன்று குழந்தைகளையும் அதிகாலை நேரத்தில் சரமாரியாக வெட்டினாா்.
இதில் குழந்தைகள் வித்யதாரணி (13), அருள்பிரகாஷ் (5) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த தவமணி (38), மற்றொரு குழந்தை அருள்பிரகாஷினி (10) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா்.
பின்னா் இருவரும் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஆறு நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு குழந்தைகளின் தாய் தவமணியும் உயிரிழந்தாா்.
தொடா்ந்து சிறுமி அருள்பிரகாஷினி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறாா். இதையடுத்து இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.