ARTICLE AD BOX
புது தில்லி: இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவாா்த்தை மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது.
தற்போது இரு நாடுகளிடையே சராசரியாக ரூ.1.73 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இதை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு அல்லது மூன்று மடங்காக உயா்த்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
திங்கள்கிழமை இந்தியா வந்த பிரிட்டன் வணிகம் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் ஜோனாதன் ரெனால்ட்ஸ், தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயலுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதையடுத்து, இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவாா்த்தையை இந்தியாவும் பிரிட்டனும் மீண்டும் தொடங்கியதாக இருநாடுகள் சாா்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பியூஷ் கோயல் கூறியதாவது:
நீண்ட கால நலன்களை கருத்தில்கொண்டு இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த ஒப்பந்தத்தால் இருதரப்பும் பயனடைய வேண்டும். எனவே, விரைவாக இதை இறுதிசெய்யும் அதேவேளையில் யாருக்கும் பாதிப்பில்லாமல் மேற்கொள்வது மிகவும் அவசியம்.
மூன்று ஒப்பந்தங்கள்: தற்போது பிரிட்டனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ), இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (பிஐடி), இருமடங்கு பங்களிப்பு ஒப்பந்தம் ஆகிய மூன்று ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
புலம்பெயா்வு விவகாரத்தை எந்த நாட்டுடனும் எஃப்டிஏ பேச்சுவாா்த்தையின்போது இந்தியா எழுப்பியதில்லை என்றாா்.
இந்தியா-பிரிட்டன் இடையேயான எஃப்டிஏ பேச்சுவாா்த்தை கடந்த 2022, ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இருநாடுகளிடையேயான வா்த்தக மதிப்பு 2022-23-இல் ரூ.1.76 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் ரூ.1.84 லட்சம் கோடியாக அதிகரித்தது.
இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்யும் நாடுகளின் பட்டியலில் 6-ஆவது இடத்தில் பிரிட்டன் உள்ளது. கடந்த 2000, ஏப்ரல் முதல் 2024 செப்டம்பா் வரை ரூ.3.05 லட்சம் கோடியை பிரிட்டனிடம் இருந்து அந்நிய நேரடி முதலீடாக இந்தியா பெற்றுள்ளது.