ARTICLE AD BOX
குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு இது தான் காரணம் – ஸ்ரீதர் வேம்பு..
அண்மை காலமாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தென்னிந்திய மாநிலங்களில் இந்த போக்கினை அதிகமாக காண முடிகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11% அளவிற்கு சரிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவாக 2024 ஆம் ஆண்டில் 8.50 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறி இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் மேம்பட்டு வரக்கூடிய அதே வேளையில் குழந்தை பிறப்பு விகிதம் இங்கே சரிவடைந்து வருகிறது என்ற பார்வை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இது பின்னாளில் பாலின விகிதாச்சாரத்தில் பெரிய ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என பலரும் கூறி வருகின்றனர். எனவே மக்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அனைத்து நவீன சமூகங்களிலும் ஏன் குழந்தை பிறப்பு விகிதங்கள் குறைந்து இருக்கின்றன என்பது குறித்து ஒரு பதிவை எழுதி இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த எக்ஸ் தள பதிவில் "நவீன சமுதாயங்களில் எல்லாம் குழந்தை பிறப்பு விகிதங்கள் ஏன் குறைந்து வருகின்றன என்பதற்கு இது பொருத்தமானதாக இருக்கலாம். அதாவது பாரம்பரியமாக மக்கள் பெரிய பெரிய குடும்பமாக குழுக்களாக வாழ்ந்தனர் அப்போது தங்களுக்கென பிரைவசி இல்லை எனக் கூறினர். ஆனால் அப்படி இருந்தும் அவர்கள் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்" என தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கும் நவீன சமூகம் குறிப்பாக தம்பதிகள் தங்களுக்கு என பிரைவசி வேண்டும் என எண்ணுகின்றனர் அனைவரும் தனித்தனி குடும்பங்களாக மாறிவிட்டனர். இப்படி அதிக பிரைவசியோடு இருப்பவர்கள் தான் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கின்றனர். அதாவது நாம் பெரிய குடும்பமாக பெரிய குழுக்களாக இருக்கும்போது தான் நமக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தூண்டுதல் இருக்குமாம. தற்போது பிரைவசி எனப்படும் தனி உரிமை பற்றி அனைவரும் பேசுகிறோம். ஆனால் இந்த பிரைவசி தான் நாம் இனப்பெருக்கம் செய்வதை குறைத்து இருக்கிறது என கூறுகிறார்.
வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால் எப்பொழுதும் மக்களால் சூழப்பட்டு இருப்பவர்கள் இன்னும் அதிகமான மக்களை உற்பத்தி செய்கிறார்கள் , பிரைவசி வேண்டும் என கூறுபவர்களுக்கு அத்தகைய உந்துதல் ஏற்படுவதில்லை என தெரிவித்துள்ளார். ஸ்ரீதர் வேம்புவின் இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வைகளை பெற்றுள்ளது, ஏராளமானவர்கள் தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டமாக பதிவு செய்துள்ளனர்.
Story written by: Devika