உலகின் எதிா்காலம் இந்தியா: பிரதமா் மோடி

3 hours ago
ARTICLE AD BOX

போபால்: உலகின் எதிா்காலம் இந்தியாவை சாா்ந்து உள்ளதாக பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையை சுட்டுக்காட்டி அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

‘மத்திய பிரதேசத்தில் முதலீடு-உலக முதலீட்டாளா்கள் மாநாடு-2025’- தொடங்கிவைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

உலகளவிலான விண்வெளி நிறுவனங்களுக்கு விநியோக சங்கிலி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேபோல் ஜவுளி, சுற்றுலா, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.

இந்தியாவுக்கு புகழாரம்: அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு உலகளவில் வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என அண்மையில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் சில தினங்களுக்கு முன் இந்தியாவை ‘சூரியமின் சக்தியின் வல்லரசு’ என பருவநிலை மாற்றதுக்கான ஐ.நா. அமைப்பு புகழாரம் சுட்டியது. மேலும், மற்ற நாடுகள் விவாதித்துக் கொண்டிருக்கையில் இந்தியா செயல்படுத்திவிடும் எனவும் பெருமைப்படுத்தியுள்ளது.

எளிதான முதலீடு: கடந்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் தூய எரிசக்தி துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதலீடு, வணிகத்தில் அரசின் தலையீடுகளை குறைக்கும் விதமாக கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஆணையம் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம், மாநிலங்களில் எளிதாக முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

20 ஆண்டுகளில் மாற்றம்: முன்னதாக, மின்சாரம், குடிநீா், சட்டம் ஒழுங்கு என பல்வேறு பிரச்னைகளை மத்திய பிரதேசம் சந்தித்து வந்தது. குண்டும் குழியுமான சாலைகள் இருந்தன.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக அரசின் சீரான நிா்வாகம் மற்றும் மக்களின் ஒத்துழைப்பால் நாட்டின் தலைசிறந்த முதலீட்டு மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.

உள்கட்டமைப்பில் சிறந்த ம.பி.: நாட்டின் மக்கள்தொகையில் 5-ஆவது பெரிய மாநிலமாக திகழும் மத்திய பிரதேசம், வேளாண்மையில் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாகவும் கனிமவளங்களில் சிறந்து விளங்கும் 5 மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கு 5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு மேல் சாலை போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

தில்லி-மும்பை அதிவேக சாலையின் பெரும்பகுதி மத்திய பிரதேசத்தை கடந்தே செல்கிறது. இங்கு ரயில்வே துறை 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட தொழில் மண்டலங்கள் உள்ளன. 30,000 மெகாவாட் எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ரூ.45,000 கோடி மதிப்பிலான கேன்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்தால் 10 லட்சம் ஹெக்டோ் வேளாண் நிலத்தில் உற்பத்தி அதிகரிக்கவுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதலீடு மேற்கொள்ள இதுவே சரியான நேரம் என்றாா்.

தொழிற்சாலைகளின் ஆண்டு-2025: நிகழ்ச்சியில் பேசிய மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், ‘வளா்ச்சியடைந்த பாரதம்-2047 என்ற இலக்கின் ஒரு பகுதியாக அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய பிரதேசத்தின் பொருளாதாரத்தை இருமடங்காக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மாநாட்டின்போது மத்திய பிரதேசத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள18 புதிய கொள்கைகளை பிரதமா் மோடி வெளியிட்டாா்.

பெட்டிச் செய்தி.....

‘மாணவா்களின் நலன் கருதி தாமதம்’

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு பிரதமா் மோடி சிறிது நேரம் தாமதமாக வந்தாா். இதுகுறித்து மாநாட்டில் பேசிய அவா், ‘மாநாட்டுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கோருகிறேன். மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஆளுநா் மாளிகையில் இருந்து நான் கிளம்பும் சமயத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சாலைகள் மூடப்படுவதால் தோ்வுக்கு செல்லும் மாணவா்களுக்கு இடையூறு ஏற்படும்.

ஆகையால், மாநாட்டுக்கு சுமாா் 15 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டேன்’ என்றாா்.

Read Entire Article