ARTICLE AD BOX
உலக நாடுகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ரஷ்யா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் உக்ரைன் போர் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்க - ரஷ்ய அதிகாரிகள் விவாதித்தனர்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்திலும், மியாமியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும் ஜெலன்ஸ்கியை கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார். ‘ஜெலன்ஸ்கி தேர்தலை சந்திக்காத ஒரு சர்வாதிகாரி’ என்றும், ‘சுமாரான வெற்றி பெற்ற காமெடியன்’ என்றும் கூறியிருந்தார்.

மேலும் வெல்ல முடியாத ஒரு போரில் ஈடுபட 350 பில்லியன் டாலர்களை செலவழிக்குமாறு அமெரிக்காவை வற்புறுத்தினார் என்றும், ஐரோப்பாவை விட 200 பில்லியன் டாலர்கள் உக்ரைனுக்கான அமெரிக்கா அதிகமாக செலவழித்ததாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். அத்துடன் நில்லாமல் உக்ரைனின் எதிரியான ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்ததாக ட்ரம்ப் தெரிவித்தது, ஜெலன்ஸ்கியின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலையீடு இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தே இருவருக்கும் இடையிலான இந்த வார்த்தைப் போர் தீவிரம் அடைந்தது.
ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு எத்தகையது?ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டு மே மாதமே முடிவடையவிருந்தது. ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான தாக்குதலை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து தேர்தல்கள் நிறுத்திவைக்கப்பட்டன. உக்ரைனுக்கு உதவி வழங்கியது தொடர்பாக ட்ரம்ப் மேற்கோள் காட்டிய தொகை அமெரிக்க அரசு வெளியிட்ட தரவுகளுடன் முரண்படுகின்றன.
அதாவது, உக்ரைனுக்கு அனுப்பப்படும் உதவிகளைப் பதிவு செய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட வலைத்தளத்தின் கூற்றின் அடிப்படையில், 2024 செப்டம்பர் 30 நிலவரப்படி, உக்ரைனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா 183 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பிய உதவி 350 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருப்பதாக சுயாதீன ஆராய்ச்சி நிறுவனங்களும் கூறுகின்றன. 2024 டிசம்பர் நிலவரப்படி, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு சுமார் 138 பில்லியன் டாலர்களை அனுப்பியுள்ளன. அதே நேரத்தில் அமெரிக்கா 120 பில்லியன் டாலர்களை அனுப்பியதாக உலக பொருளாதாரத்துக்கான கீல் இன்ஸ்டிடியூட் தெரிவிக்கிறது.
2024 இறுதியில் ஜெலன்ஸ்கியை 52 சதவீத உக்ரேனியர்கள் நம்புவதாக, கீவ் சர்வதேச சமூகவியல் நிறுவனம் (KIIS) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல உக்ரைன்தான் போரைத் தொடங்கியது என்ற ட்ரம்ப்பின் கூற்றும் உண்மைக்குப் புறம்பானதாக உள்ளது. ரஷ்யா தான் முதலில் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 20 சதவீத உக்ரைன் பகுதிகளை அது இதுவரை கைப்பற்றியுள்ளது.
இது இப்படியிருக்க, ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் சாத்தியமானால் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, உக்ரைனில் உள்ள அரிய மற்றும் முக்கியமான தாதுக்களை அணுகுவதற்கு அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.
உக்ரைனில் டைட்டானியம், லித்தியம், கிராஃபைட் மற்றும் யுரேனியம் தாதுக்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் உட்பட 109 குறிப்பிடத்தக்க கனிம வைப்புக்கள் இருப்பதற்கான ஆதாரங்களையும் உக்ரைன் அரசு வெளியிட்டது.

உயர் ரக ஆயுத அமைப்புகள் முதல் மின்சார வாகனங்கள், சுத்தமான எரிசக்தி தீர்வுகள், மின்னணு சாதனங்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான கனிம வளங்கள் உக்ரைனில் உள்ளன. இவற்றை பிரித்தெடுப்பதும் கடினம். இதனால் அவை மதிப்புமிக்கதாக கருதப்படுகின்றன. அமெரிக்காவும், மற்ற மேற்கத்திய நாடுகளுக்கும் அவற்றை குறிவைப்பதற்கான முக்கிய காரணம், சீனாவிடமும் அவை பரவலாக உள்ளன என்பதுதான். ட்ரம்ப் க்ரீன்லாந்து மீது ஒரு கண் வைத்திருப்பதற்கும் கனிம வளங்களும் ஒரு காரணமாகும்.
ஆனால், ரஷ்யா பக்கம் ட்ரம்ப்பின் இந்த திடீர் சாய்வுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது உக்ரைனுக்கு ஆதரவாக பல கருத்துகளை வெளியிட்டது மட்டுமின்றி தான் ஆட்சிக்கு வந்தபிறகு ஒரே நாளில் தன்னால் போரை நிறுத்திவிட முடியும் என்று உறுதி அளித்தார் ட்ரம்ப்.
ஆனால் அதிபராக பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்தபிறகும் கூட உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் ஒரு நிலையான முடிவை எடுக்கமுடியவில்லை. ஜோ பைடனின் நடுநிலையான நிலைபாடு இந்த விவகாரத்துக்கு எந்த வகையிலும் உதவாத நிலையில், உக்ரைனின் நம்பிக்கை கீற்றாக ட்ரம்ப்பின் வாக்குறுதிகள் தெரிந்தன.

ஆனால், தற்போது அவர் புதினை புகழ்வதும், ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என்று விளிப்பதும் என ட்ரம்ப் நடவடிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக உலக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உண்மையிலேயே சர்வாதிகாரியாகவும், போர் குற்றங்கள் செய்பவராகவும் உலக அரசியல் நிபுணர்களால் கருதப்படும் புதினிடம் போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் கொடுக்காமல், பாதிக்கப்படும் நிலையில் இருக்கும் உக்ரைனை நோக்கி கடுமையான தொனியை காட்டுவதுதான் ட்ரம்ப்பின் உத்தியா என்ற கேள்விகள் எழுகின்றன.

பாதிக்கப்பட்ட உக்ரைன் மீது ட்ரம்ப் அழுத்தம் கொடுப்பது, ஒரு நாட்டின் இருண்ட காலத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு மோசமான முயற்சியாகும். புதின் உக்ரைனின் பெரும் பகுதிகளை ஆக்கிரமிக்கிறார் என்றால், இன்னொருபுறம் ட்ரம்ப் அதன் கனிம வளத்தின் பெரும் பகுதியை மிகக் குறைந்த விலையில் விரும்புகிறார். ஒருவேளை இந்த கனிம வள ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட்டாலும் கூட வாஷிங்டன் எதிர்காலத்தில் உக்ரைனுக்கான உதவியைத் தொடர்ந்து வழங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
உக்ரைனுக்கு எதிரான ட்ரம்ப்பின் இந்த திடீர் அந்தர் பல்டி அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கு ஓர் அரசியல் பிரச்னை. ஆனால் உக்ரைனுக்கோ இது வாழ்வா சாவா பிரச்னை. அமெரிக்கா, ரஷ்யா என இரு வல்லாதிக்க நாடுகளின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்த சிறிய நாட்டில் விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்ப வேண்டும் என்பதே அந்நாட்டு குடிமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
