டெல்லியின் 4-வது பெண் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா

4 days ago
ARTICLE AD BOX

புதுடெல்லி,

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது.

இந்த வரலாற்று வெற்றி மூலம் பா.ஜனதா தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து டெல்லியின் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய, கட்சியின் மாநில தலைவரான வீரேந்த்திர சச்தேவா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

முதல்-மந்திரி பட்டியலில் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சர்மா, ரேகா குப்தா, முன்னாள் முதல்-மந்திரி சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் எம்.பி. ஆகியோர் உள்பட பல்வேறு பெயர்கள் இருந்தது. இதனிடையே பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு சென்றதால் அவர் வந்த பின்னர் புதிய முதல்-மந்திரி பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பியதும் டெல்லி மாநில தலைவர்கள் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவரான மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

புதிய முதல்-மந்திரி குறித்து நேற்று முன்தினமும் கட்சி மேலிடத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே புதிய அரசு பதவி ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்து வந்தது.

கட்சி தலைமை முடிவின்படி, மேலிட பார்வையாளர்களான ரவிசங்கர் பிரசாத், ஓ.பி.தங்கர் ஆகியோர் முன்னிலையில், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் 48 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் டெல்லி மாநில சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார்.

50 வயதாகும் ரேகா குப்தா, ஷாலிமார் பார்க் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கல்லூரி பருவத்தில் இருந்தே அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட ரேகா குப்தா, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகி தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் 3 முறை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு டெல்லி மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பா.ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஷாலிமார் பார்க் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். தனது முதல் வெற்றியிலேயே முதல்-மந்திரியாகவும் தேர்வாகி உள்ளார். இதனைத்தொடர்ந்து துணை நிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து பா.ஜ.க. சார்பில் ஆட்சியமைக்க ரேகா குப்தா உரிமை கோரினார்.

இந்நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜனதா மந்திரி சபை பதவி ஏற்க உள்ளது. டெல்லி துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா, புதிய முதல்-மந்திரிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இதற்காக ராம்லீலா மைதானத்தில் 3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு மேடையில் பிரதமர் மோடி மற்றும் பதவி ஏற்க உள்ள முதல் -மந்திரி, பிற மந்திரிகள் அமர்வார்கள். 2-வது மேடையில் மத்திய மந்திரிகள் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அமர்கிறார்கள். 3-வது மேடை மத குருமார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

4-வது பெண் முதல்-மந்திரி

டெல்லி மாநிலத்தில் சுஷ்மா சுவராஜ் (பா.ஜனதா), ஷீலா தீட்ஷித் (காங்கிரஸ்), அதிஷி (ஆம் ஆத்மி) ஆகியோரைத் தொடர்ந்து 4-வது பெண் முதல்-மந்திரியாக தற்போது ரேகா குப்தா பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசு பதவி ஏற்பதை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தா தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருந்ததாவது:-

என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், முதல்-மந்திரி பொறுப்புக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காகவும், அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வ நன்றியை நான் தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய இந்த நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு புதிய சக்தியையும், உந்துதலையும் ஏற்படுத்தி உள்ளது. நான் முழு அளவில் நேர்மையாகவும், ஒருமைப்பாட்டுடனும் மற்றும் டெல்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காக, அதிகாரம் பெறுவதற்காக மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறுவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன்.டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய வாய்ப்பில் நான் முழு அளவில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுவேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Read Entire Article