ARTICLE AD BOX
தலைநகர் டெல்லிக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் அபார வெற்றிபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 10 நாட்கள் இழுபறிக்குப் பிறகு, டெல்லியின் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. அதன்படி, நேற்று இரவு நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள ரேகா குப்தா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டது.
இந்த நிலையில், இன்று அவர் டெல்லி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன், பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர் இந்தராஜ், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகிய ஆறு அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ரேகா குப்தா
டெல்லியின் 4ஆவது பெண் முதல்வராகப் பதவியேற்றுள்ளா ரேகா குப்தா, ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர். ஆர்எஸ்எஸ் பின்னணியை கொண்ட ரேகா குப்தா, அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். சிறுவயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர், டெல்லி பாஜக இளைஞரணி செயலாளராகவும் இருந்துள்ளார். மகளிர் அணியின் பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளார். 2007 மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானார். 2012 மாநகராட்சி தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மகளிர் பிரச்னையில் கவனம் செலுத்தி மக்களிடம் கவனம் பெற்ற ரேகா குப்தா, ஷாலிமர் பாக் தொகுதியில் களமிறங்கி முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரான நிலையில், தற்போது முதல்வர் பதவியையு பெற்றுள்ளார்.
பர்வேஷ் வர்மா
இரண்டு முறை பாஜக எம்பியாக இருந்தவர், பர்வேஷ் வர்மா. புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் இவர். நவம்பர் 7, 1977 அன்று பிறந்த இவர், முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனாவார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டம் பெற்றார். இவர், முன்னாள் மத்திய அமைச்சரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவருமான விக்ரம் வர்மாவின் மகள் ஸ்வாதி சிங்கை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முன்னதாக, டெல்லி முதல்வர் பட்டியலில் இவரது பெயரே முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கபில் மிஸ்ரா
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான கபில் மிஸ்ரா, கரவல் நகர் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்றார். நவம்பர் 13, 1980 அன்று டெல்லியில் பிறந்த இவர், கிழக்கு டெல்லியின் முன்னாள் மேயரான அன்னபூர்ணா மிஸ்ரா மற்றும் சோசலிசத் தலைவர் ராமேஷ்வர் மிஸ்ரா ஆகியோரின் மகனாவார். டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரியில் தனது கல்வியை முடித்தவர். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கத்தில் டெல்லியின் நீர்வள அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டில், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு 2019இல் பாஜகவில் சேர்ந்தார். 2020ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த வகுப்புவாத கலவரத்தின்போது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மஞ்சிந்தர் சிங் சிர்சா
பாஜகவின் சீக்கிய முகமாக அறியப்படுபவர், மஞ்சிந்தர் சிங் சிர்சா. இவர், நடப்பு சட்டமன்றத் தேர்தலில் ரஜோரி கார்டனில் இருந்து வெற்றிபெற்றார். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த சிர்சா, முன்பு ஷிரோமணி அகாலி தளத்துடன் தொடர்புடையவர் ஆவார்.
ஆஷிஷ் சூட்
டெல்லியின் பஞ்சாபி சமூகத்தில் ஆஷிஷ் சூட் நன்கு அறியப்பட்ட நபர். செப்டம்பர் 2, 1966இல் பிறந்த சூட், ஜனக்புரியிலிருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெற்கு டெல்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சியின்போது நிர்வாக விஷயங்களில் சில நேரடி அனுபவங்களைப் பெற்ற மூத்த தலைவர். அவர் பாஜகவின் டெல்லி பிரிவின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் கோவாவின் பாஜக பொறுப்பாளராகவும், கட்சியின் ஜம்மு-காஷ்மீர் பிரிவின் இணைப் பொறுப்பாளராகவும் உள்ளார்.
பங்கஜ் குமார் சிங்
பாஜகவின் பங்கஜ் குமார் சிங், விகாஸ்புரியிலிருந்து முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பூர்வாஞ்சலி தலைவரான சிங், தொழில்ரீதியாக ஒரு பல் மருத்துவர் ஆவார்.
ரவீந்தர் இந்திரஜ் சிங்
ரவீந்தர் இந்திரஜ் சிங் பாஜகவின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் ஆவார். அவர் பவானா தனித் தொகுதியில் 31,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பாஜகவின் பட்டியலின சாதி மோர்ச்சாவின் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.
சபாநாயகர் விஜேந்தர் குப்தா
இதற்கிடையே, டெல்லி சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தாவை பாஜக பரிந்துரைத்துள்ளது. அப்போதைய ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சகாக்களுடன் ஏற்பட்ட தகராறில் மார்ஷல்களால் உடல் ரீதியாக வெளியேற்றப்பட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு (2015) குப்தா மீண்டும் சட்டமன்றத்திற்குத் திரும்பியுள்ளார். 2015 முதல் அவர் வகித்து வந்த ரோகிணி தொகுதியை தற்போதும் தக்கவைத்துக் கொண்டார். அவருடைய வருகை, பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.