டெல்லி தேர்தல்: தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் 'டக்' அவுட்! பெரும் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

3 hours ago
ARTICLE AD BOX

காங்கிரஸ் படுதோல்வி 

நாட்டின் தலைநகராகவும், அதிகார மையமாகவும் வலம் வரும் டெல்லியில் கடந்த 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா தோல்வியை சந்தித்துள்ளனர். 

இந்த தேர்தல் முடிவில் காங்கிரஸின் நிலை தான் மிகவும் பரிதாபமாக உள்ளது. அதாவது மொத்தமுள்ள 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. அந்த கட்சி 70 இடங்களிலும் தோல்வியை தழுவுவது உறுதியாகியுள்ளது. டெல்லி தேர்தலில் பலம் வாய்ந்த பாஜக மற்றும் ஆத் ஆத்மியை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெறுவது சாத்தியமில்லாதது. ஆனால் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாதது தான் அக்கட்சியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

ஒரு காலத்தில் ஆட்சி அதிகாரம் 

இந்த முறை மட்டுமல்ல; கடந்த 2015 மற்றும் 2020 என முந்தைய இரண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றியை பெறவில்லை. 2020 தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து 66 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை தழுவியது. இதேபோல் 2015 தேர்தலிலும் முழுமையாக 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் டக் அவுட் ஆனது.

தலைநகர் டெல்லியில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. 1998ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 1998, 2003, 2008 என தொடர்ந்து மூன்று தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியை அலங்கரித்த காங்கிரஸ், இப்போது 2015, 2020 மற்றும் 2025 என மூன்று தேர்தல்களிலும் ஹாட்ரிக் தோல்வியை தழுவி பரிதாபமாக நிற்கிறது.

மெத்தனப் போக்கு 

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் பெருத்த அடியை வாங்கிய காங்கிரஸ், இப்போது டெல்லியிலும் மரண அடி வாங்கியுள்ளது. டெல்லி தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் முதலில் இருந்தே மெத்தனமாக செயல்பட்டது தெளிவாக தெரிந்தது. இந்தியா கூட்டணியில் ஒன்றாக இருக்கும் காங்கிரசும், ஆம் ஆத்மியும் டெல்லி தேர்தலில் கூட்டணி அமைக்காமல் தனித்தனியாக தேர்தலை சந்தித்துதான் இரண்டு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவாகும்.

இதில் பலமான அடியை வாங்கியுள்ளது காங்கிரஸ் தான். காங்கிரசுடன் கூட்டணி சேர ஆம் ஆத்மி ஆர்வம் காட்டாத நிலையில், அந்த கட்சியுடன் கூட்டணி சேர, ஆம் ஆத்மி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் எந்தவித சிரத்தையும் எடுக்கவில்லை. மேலும் தேர்தல் வாக்குறுதியிலும் காங்கிரஸ் கோட்டை விட்டு விட்டது. 

ராகுல் காந்தியின் உடல்நலக்குறைவு 

பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் மக்களை கவர்வதற்காக போட்டி போட்டு இலவச கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அள்ளித்தெளித்திருந்த நிலையில், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் பெரிய அளவில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லை. இதனால் மகக்ள் அந்த கட்சியை முற்றிலுமாக ஒதுக்கியுள்ளனர்.இது மட்டுமின்றி, மிக முக்கியமாக தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் சரியாக செய்யவில்லை என்றே கூறலாம். 

ஏனெனில் காங்கிரசின் முதுகெலும்பாக திகழும் ராகுல் காந்திக்கு டெல்லி தேர்தல் பிரசார நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் பல பிரசார கூட்டங்களில் பங்கேற்க முடியவில்லை. இதனால் வயநாடு தொகுதி எம்.பி.யும், அவரது சகோதரியுமான பிரியங்கா காந்தி தலைமையில் தான் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தியது. இது எந்த அளவுக்கு வாக்காளர்களிடம் எடுபட்டுள்ளது என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் இனியும் விழிக்காவிட்டால்???

ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்காதது, அதிகமான இலவச வாக்குறுதிகளை அறிவிக்காதது, ராகுல் காந்தியின் உடல்நலக்குறைவு ஆகியவை காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டன. இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த பாரம்பரியம் மிக்க கட்சியான காங்கிரஸ், 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு' ஆன கதையாக ஒவ்வொரு தேர்தல்களின்போதும் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அக்கட்சியின் தலைவர்கள் தொடர் தோல்விகளை ஆராயாமல் விட்டு விட்டால் இந்திய கட்சிகளின் வரிசையில் இருந்து காங்கிரஸ் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Read Entire Article