ARTICLE AD BOX
தலைநகர் டெல்லிக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக சார்பில் முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வான ரேகா குப்தா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் கடந்த 20ஆம் தேதி டெல்லி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். டெல்லி சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல்வர் ரேகா குப்தா உள்பட 70 எம்எல்ஏக்கள் உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னதாக சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக அர்விந்த் சிங் லவ்லி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வுகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாஜக மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். இதனிடையே சபாநாயகராக விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி சட்டமன்ற மூன்று நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டி வருகிறார். அந்த வகையில், “பாஜகவின் பட்டியலின விரோத மனநிலை நன்கு அறியப்பட்டதே. இன்று, அதன் மனநிலைக்கான ஆதாரம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசாங்கத்தின் ஒவ்வோர் அலுவலகத்திலும் பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் ஷாஹீத் பகத் சிங்கின் புகைப்படங்களை வைத்திருந்தார். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அந்த இரண்டு புகைப்படங்களையும் முதல்வர் அலுவலகத்திலிருந்து நீக்கியுள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால், அந்தப் புகைப்படங்கள் முதல்வர் அலுவலகத்திலிருந்து அகற்றப்படவில்லை. எதிர்ச்சுவரில் இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. அதிஷி முதல்வராக இருந்தபோது, நடுச்சுவரில் அந்த புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. தற்போது அங்கே இடதுபுறத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் புகைப்படமும், மையத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படமும், வலதுபுறத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங், ”சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஜீரணிக்க முடியாமல், ஆம் ஆத்மி கட்சி ஒன்றுமில்லாததை ஒரு பிரச்னையாக மாற்றுகிறது. புகைப்படங்களை வைப்பது அல்லது தேர்ந்தெடுப்பது நிர்வாகத்தின் வேலை என்பதால், முதலமைச்சருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. ஒரு நெறிமுறை உள்ளது, அது நிர்வாகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. முதலமைச்சரால் அல்ல. நெறிமுறையின்படி, பாபா சாஹேப், பகத் சிங் அல்லது மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் இருக்கும். சில சமயங்களில் பிரதமர் மற்றும் மகாத்மா காந்தியின் படங்களும் இருக்கும். மக்கள் ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சியை நிராகரித்து தூக்கி எறிந்துவிட்டனர். இந்த பிரச்னைகளை உருவாக்குவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. நெறிமுறையின்படி, பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் படங்கள் அங்கு இருக்க வேண்டும்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.