‘டிராகன் ‘ – திரைவிமர்சனம் !

3 days ago
ARTICLE AD BOX

ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹர், மிஷ்கின், கே.எஸ், ரவிகுமார், கௌதம் மேனன் , ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன் , விஜே சித்து, ஹர்ஷத், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘டிராகன்‘ .  96% மதிப்பெண் எடுத்தும் கூட தன் காதலை ஏற்றுக்கொள்ளாத பள்ளித் தோழியால் ‘ நல்ல பையனதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்ன்னு சொல்றதெல்லாம் சுத்தப் பொய்‘ என பள்ளி இறுதி ஆண்டில் முடிவு எடுக்கிறார் டி.ராகவன் (பிரதீப் ரங்க நாதன்). கல்லூரி நாட்களில் 48 அரியருடன் டிராகன் அவதாரம் எடுத்து ஒழிங்கீனமான மாணவராக பெயர் எடுத்து வெளியில் வருகிறார். தொடர்ந்து நண்பர்கள் பணம், காதலியின் செலவில் காதல், அப்பா, அம்மாவிடம் நாடகம் என எந்தக் குறிக்கோளும் இல்லாமல் வாழ்கிறார். இவன் வேலைக்கு ஆக மாட்டான் என முடிவெடுத்து நீ ஒரு ஃபெயிலியர் ‘ என விலகி விடுகிறார் காதலி கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்).

தொடர்ந்து மனமுடையும் ராகவன் இனி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் அதற்கு எப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்கவும் தயார் என முடிவு செய்கிறார். இந்த முடிவால் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது, நினைத்தப்படி ஜெயித்தாரா என்பது மீதிக் கதை. பிரதீப் ரங்கநாதன் மாஸ் ஷோ என சொன்னாலும் தகும்… அநேகமாக இந்த டிராகன் கதாபாத்திரத்தை எடுத்துக்கட்டாக எடுத்துக்கொண்டு பல 2கே கிட்ஸ்கள் ரீல்ஸ் போட்டாலும் ஆச்சர்யம் இல்லை. அந்த அளவுக்கு நாமே இப்படி ஒரு நண்பனோ, காதலனோ இருந்தால் ச்சீய் ..பே என அடித்து விரட்டி விடுவோம் அளவுக்கு அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒழுங்கீனமான மாணவன், அக்கறை இல்லாத காதலன், பொறுப்பில்லாத மகன், இடைஞ்சலான நண்பன் என அத்தனையாகவும் வாழ்ந்திருக்கிறார்.

பல இடங்களில் தனுஷ் சாயல் தெரிவதை தவிர்க்க முடியவில்லை. அவரது எனர்ஜி லெவல் இறங்கவே இல்லை. உணர்வுப் பூர்வமான காட்சிகளிலும் நிச்சயம் நம் வீட்டில் ஒரு பையனாகவே தெரிகிறார். அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹார் இருவருமே தனித்துவமான அழகு. யாரைப் பார்ப்பது என்னும் குழப்பம் நிச்சயம் இளைஞர்களுக்கு உண்டாகும். இருவருக்குமே சரிசமான கதாபாத்திரம். பெரும்பாலும் இந்த ஃபிளாஷ் பேக் நாயகிகள் வருவார்கள் அழுதுவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால் இங்கே அதற்கெல்லாம் இடமில்லாமல் அவசியமான கேரக்டர்களாக நிற்கிறார்கள். மிஷ்கின் கதையை மொத்தமாக தட்டிவிட்டு வேறு ஒரு திருப்பத்தை நோக்கி நகர்த்தும் முக்கிய காரியத்தை செய்திருக்கிறார். பிரின்சிபல் கேரக்டரில் நிச்சயம் ஒவ்வொரு கல்லூரி பிரின்சிபலும் ஞாபகம் வரும் அளவிலான மிகையில்லா நடிப்பு.

கௌதம் மேனன் ஐடி நிறுவன பாஸ் எனில் அவர் பாஸ் தான் என அடித்துச் சொல்லலாம். ஜார்ஜ் மரியான் நம் உணர்வுகளைத் தூண்டி, கண்கலங்க வைப்பதில் வல்லவர். இந்தப் படத்திலும் அதை தவிர்க்கவில்லை. அம்மாவாக இந்துமதி அவர் சொந்தக் குரலில் பேசினாலே நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஏன் வினோதினி குரல் எனத் தெரியவில்லை. அதுதான் சற்றே ஒட்ட மறுக்கிறது. ஆனால் மகனை நினைத்து உடைந்து வெடிக்கும் இடமெல்லாம் அருமையான நடிப்பு. விஜே சித்து & கோ நண்பர்கள் கேங், கல்லூரி காட்சிகளில் வரும் ஹர்ஷத் & கோ என படத்தின் கலகலப்பு மொமெண்ட்களுக்கு இவர்கள் பலம் சேர்த்திருக்கிறார்கள். லியான் ஜேம்ஸ் இசை படத்தின் இன்னொரு கதாபாத்திரம் போலவே பயணிக்கிறது. குறிப்பாக வழித்துணையே…‘, ஏன்டி…’ பாடல்கள் டிராவல் லிஸ்ட் எனில் ஃபயர்…’, ‘எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட…‘ பாடல்கள் பார்ட்டி ரகம். நிக்கெத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் பாடல்கள், காதல் காட்சிகள் அருமை. வழித்துணையே பாடலில் ஐரோப்பா அழகை கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார். எடிட்டர் பிரதீப் ராகவன் டிரெய்லரே அவ்வளவு எனர்ஜியாக இருக்க, படம் சொல்ல வேண்டுமா? எங்கேயும் தேவையற்ற காட்சிகளோ, நீளமோ, போர் என்கிற மனநிலையோ இல்லாமல் தன் திறமையைக் காட்டியிருக்கிறார்.

எந்தக் கதாபாத்திரமும் எதற்காகவும் உடன்படாமல், எதார்த்தமாக கதைக்களத்தைக் கொண்டு சென்றது மிக அழகு. யாரும் யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. அதே சமயம் நம்மை பெற்றவர்களும் சரி, நமக்கு பாடம் புகட்டிய ஆசானும் சரி எப்போதும் நம்மை குழந்தைகளாகத்தான் பார்ப்பார்கள் என்னும் கருத்தையும் ஆழமாக வைத்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. மொத்தத்தில் ஒரே இரவில் ஓஹோ வாழ்க்கை வேண்டும் எனக் கனவுக் கொட்டைக் கட்டிக்கொண்டு குறுக்கு வழியில் டிஜிட்டல் சமூகத்துக்கு மிக முக்கியமான பதிவு இப்படம். படிப்போ, வேலையோ, வாழ்க்கையோ, கஷ்டப்பட்டு கடின உழைப்பில் கிடைக்கும் வெற்றிதான் நிலைக்கும் என்னும் கருத்தை ஆழமாக சொல்லிய விதத்தில் இளைஞர்களுக்கு எக்காலத்திலும் தேவையான படமான மாறியிருக்கிறது இந்த ‘டிராகன்‘ .

Read Entire Article