ARTICLE AD BOX

சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என கூறப்பட்டது. இதனை குறிப்பிட்டு இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை முதலே தமிழ்நாடு காவல்துறை பாஜக நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வருவதாகவும், பல மாவட்டங்களில் பாஜகவினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது தெளிவாகவில்லை. முதலில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப்போராட்டத்தில் கலந்துகொள்ள ரெடியாக இருந்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை கைதுசெய்து தனியார் மண்டபத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அதேபோல், பல மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதற்காக, கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பு அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், இந்தப் போராட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கரு. நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பாஜகவினர் இதை “திமுக அரசின் அராஜகம்” என்று விமர்சித்து, டாஸ்மாக் ஊழலை மறைக்கும் முயற்சியாகவே காவல்துறை நடவடிக்கையைப் பார்ப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்