ARTICLE AD BOX
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
தமிழக அரசு டாஸ்மாக் விவகாரத்தில் ரூபாய் ஆயிரம் கோடி முறைகேடு செய்த விவகாரத்தில் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் பாஜக சார்பில் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், இன்று காலை முதல் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக நிர்வாகிகளான வினோஜ் பி.செல்வம், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அடுத்தடுத்து வீடுகளிலேயே கைது செய்யப்பட்டனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கைது செய்த போலீசார்:
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை நோக்கி வரும் வழியில் நீலாங்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். முன்னதாக வீட்டிலிருந்து போராட்டத்திற்கு கிளம்பிய அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " அமலாக்கத் துறையின் ஆரம்பகால தகவலின் அடிப்படையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது, பொறுத்திருந்து பாருங்கள் தமிழ்நாட்டின் நல்ல அரசியலை கொண்டு வருவதற்கான பாஜக எடுத்த முன்னெடுப்பு, இந்த போராட்டம் ஒரு அச்சாணியாக இருக்கும்.
டாஸ்மாக் ஊழல் 40 ஆயிரம் கோடியை தாண்டும்:
ஆயிரம் கோடி அல்ல, 40 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருக்கும் என்பது என்னுடைய அனுமானம், மொத்த மது விற்பனையும் சேர்த்து 40,000 கோடியை தாண்டும், ஆயிரம் கோடி என்பது சின்ன துரும்பு தான். 2024ல் நடந்த லோக்சபா தேர்தலே சாராயம் காய்ச்சி கிடைத்த பணத்தில் தான் நடத்தி இருக்கிறார்கள். 2026 தேர்தலையும் டாஸ்மாக் மூலம் கிடைத்த பணத்தில் தான் நடத்த தயாராக இருக்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தமரா?
இந்தியாவிலேயே நம்பர் ஒன் மோஸ்ட் பிராடு பொலிடிசியன் என்று யோசித்தால் முதலில் வருவது அவர்தான். உச்சநீதிமன்ற நீதிபதியே செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா? என்று கேட்கிறார்க. ஆனால், இன்று காந்தியவாதி போன்றும், காமராஜர் அமைச்சரவையில் இருப்பவர்கள் போன்று வேஷம் போடுகிறார்கள். ஊழல் அமைச்சரவையில் தலையில் இருந்து கால் வரை ஊழல் ஆட்சி மட்டும் நடைபெறக் கூடிய ஒரு ஊழல் பேர்வழி சாராய அமைச்சர்.
கெஜ்ரிவால் போல் ஸ்டாலின் தான் முதல் குற்றவாளி:
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முதல் குற்றவாளி முதல்வர் முக.ஸ்டாலின், இரண்டாவது குற்றவாளி தான் செந்தில் பாலாஜி, ஏனென்றால் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பர் ஒன் குற்றவாளியாக இருந்திருக்கிறார். தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தன்னுடைய அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்து முடிக்கும் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் குற்றவாளியாக இருப்பார் என்பது என்னுடைய ஆணித்தரமான நம்பிக்கை என்று அண்ணாமலை தெரிவித்தார்.