ARTICLE AD BOX

திருச்சி விமான நிலையம் உள்பட 11 விமான நிலையங்கள் அரசு -தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் புவனேசுவரம், வாரணாசி, அமிர்தசரஸ், சென்னை, திருச்சி, மதுரை, இந்தூர், ராய்ப்பூர், கோழிக்கோடு, கோவை, நாகபுரி, பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், விஜயவாடா, வதோத்ரா, போபால், திருப்பதி, ஹுப்பள்ளி, இம்பால், அகர்தலா, உதய்பூர், டேராடூன் உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், அரசு-தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இந்தநிலையில், இதுதொடர்பான கேள்விக்கு விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மோஹோல் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவனேசுவரம், ராய்பூர் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அரசு – தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த 11 விமான நிலையங்களும் தனியார் வசம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. தற்போது நாடு முழுவதும் 159 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The post திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியார் மயமா?- மத்திய இணை அமைச்சர் சொல்வதென்ன… appeared first on Rockfort Times.