ARTICLE AD BOX
டாடாவின் மின்சார கார்களுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி பெறுவது எப்படி?
இந்தியாவில் மின்சார வாகன விற்பனையில் பல்வேறு போட்டிகள் எழுந்துள்ளதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய மின்சார கார்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் கூடிய விரைவில் இந்திய சந்தையில் கால் பதிக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மின்சார கார்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தங்களிடம் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் புதிதாக கார் வாங்க போகும் வாடிக்கையாளர்களுக்கும் என பிரத்தியேக தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

அடுத்த 45 நாட்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அமலில் இருக்கும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் Tiago EV, Tigor EV, Punch EV, Nexon EV, Curvv EV ஆகிய 5 மின்சார கார்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை 7.9 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக கூடிய மின்சார வாகனங்களாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் இருக்கின்றன.
2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் 61,496 மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் 60,000 ஆக தான் இருந்தது. பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு மின்சார கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருவதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் புதிது புதிதாக மின்சார கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக சிறப்பு எக்ஸ்சேஞ்ச் போனஸ்களை டாடா மோட்டார் வெளியிட்டுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள் ஜீரோ டவுன் பேமெண்ட் என்ற திட்டத்தின் படி 100 சதவீத தொகையையுமே கடனாக பெற்று டாடா மோட்டார்ஸ் மின்சார கார்களை வாங்க முடியும். Curvv EV அல்லது Nexon EV கார்களை வாங்கக்கூடிய புதிய வாடிக்கையாளர்கள் அடுத்த ஆறு மாத காலத்திற்கு இலவசமாக டாடா பவர் சார்ஜிங் நெட்வொர்க்கின் இலவச அணுகலை பெறுவார்கள். அதே போல வீட்டிலேயே சார்ஜ் செய்வதற்கான கருவிகள் இலவசமாக இன்ஸ்டால் செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டாடா நிறுவன மின்சார கார்களை பயன்படுத்தி வரக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய கார்களை Curvv EV அல்லது Nexon EV கார்களாக அப்டேட் செய்ய விரும்பினால் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் லாயல்டி போனஸாக வழங்கப்படும். அதேபோல டாடாவின் பாரம்பரிய பெட்ரோல், டீசல் கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மின்சார கார்களுக்கு அப்டேட் ஆக விரும்பினால் எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயஸ்டி போனஸாக 20,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika