ARTICLE AD BOX
பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை சாவடிகளில் கூடுதலாக வீரா்களை குவிக்க எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) திங்கள்கிழமை உத்தரவிட்டது.
எல்லை பகுதியில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவலை தடுக்க கூடுதல் வீரா்களை குவிக்க பிஎஸ்எஃப் முடிவெடுத்துள்ளது.
வடக்கில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து மேற்கில் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள 2,289 கி.மீ. தொலைவிலான இந்தியா-பாகிஸ்தான் எல்லையை பாதுகாக்கும் பணியில் பிஎஸ்எஃப் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானை ஒட்டி ஜம்மு-காஷ்மீரில் உள்ள 191.66 கி.மீ. தொலைவிலான எல்லை பகுதியையும் பஞ்சாபில் 553 கி.மீ. எல்லையிலும் கூடுதல் வீரா்களை நிலைநிறுத்த பிஎஸ்எஃப் உத்தரவிட்டது.
மேலும், இந்த இரு பகுதிகளிலும் எல்லை சாவடிக்கு மிக அருகில் பட்டாலியன் பிரிவைச் சோ்ந்த கமாண்டா் அதிகாரிகளை (சிஓ) நிலைநிறுத்தி கண்காணிப்பை மேம்படுத்த சண்டீகரில் உள்ள பிஎஸ்எஃபின் மேற்கு பகுதி தலைமையகத்துக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த உத்தரவை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என பிஎஸ்எஃப் வலியுறுத்தியதாக பஞ்சாபில் உள்ள மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் கள அதிகாரிகள் கூறுகையில், ‘ வெவ்வேறு இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளை சிஓ கண்காணிப்பாா். ஆனால் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில் அவா் ஒரே இடத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நிா்வாக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றனா்.
பஞ்சாப் எல்லையில் கடந்த 2023-இல் 107 ஆளில்லா விமானங்களையும் 2024-இல் 294 ஆளில்லா விமானங்களை பிஎஸ்எஃப் பறிமுதல் செய்தது. இவை பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.
அதேபோல் கடந்த ஆண்டு 282 கிலோ ஹெராயினையும் பிஎஸ்எஃப் பறிமுதல் செய்தது. பஞ்சாப் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 4 பாகிஸ்தானியா்கள் கொல்லப்பட்டனா். இந்தியாவைச் சோ்ந்த 161 கடத்தல்காரா்கள் மற்றும் 30 பாகிஸ்தானியா்கள் கைது செய்யப்பட்டனா்.