ஜனவரி 29: இந்திய செய்தித்தாள் நாள் - இந்தியாவின் முதல் செய்தித்தாள் எது?

4 days ago
ARTICLE AD BOX

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 அன்று ‘இந்திய செய்தித்தாள் நாள்’ (Indian Newspaper Day) கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1780 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாளில் அயர்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் ‘வங்காள கெஜட் அல்லது கல்கத்தா பொது விளம்பரத்தாள்’ (Bengal Gazette or Culcutta General Advertiser) எனும் பெயரில் முதல் செய்தித்தாளினை வெளியிட்டார். இந்நாளையே இந்தியாவில் ‘இந்திய செய்தித்தாள் நாள்’ என்று கொண்டாடுகின்றனர்.

நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன. இருப்பினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே, இதை செய்தித்தாள்கள் (News Papers) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் நாளிதழ்கள் அல்லது தினசரிகள் (Dailies) என்றும் அழைப்பதுண்டு.

அச்சு எந்திரம் தோன்றிய ஜெர்மனியில்தான் முதல் அச்சிட்ட இதழ் வெளியானது. முதன் முதலாக ஜெர்மனியில் ‘செய்தித் துண்டு வெளியீடுகள்’ (News Pamphlets) வெளியிடப்பட்டன. இந்தத் துண்டு வெளியீடுகளை அப்போதிருந்த அரசர்கள் ஆதரிக்கவில்லை. மேலும், அக்காலத்தில் கற்றவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால், அதற்குப் பொதுமக்களிடமிருந்து ஆதரவும் கிடைக்கவில்லை. இருப்பினும், அதனைத் தொடர்ந்து 1609 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் ‘உறவு’ (Relation) எனும் இதழ் வெளியிடப்பட்டது. இந்த இதழ்தான் உலகின் முதலில் வெளியான இதழ் என்கின்றனர். அதன் பின்னர், பதினேழாம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளில் செய்தித்தாள்கள் வெளியாகின என்று சிலர் குறிப்பிடுகின்றன.

India's first newspaper
India's first newspaper

ஆனால், இந்தியாவில் 1780 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாளில் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் ‘வங்காள கெஜட் அல்லது கல்கத்தா பொது விளம்பரத்தாள்’ (Bengal Gazette or Culcutta General Advertiser) எனும் முதல் செய்தித்தாளினை வெளியிட்டார். 1785 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாளில் சென்னையில் ரிச்சர்டு ஜான்சன் என்பவர் ‘சென்னை கூரியர்’ (Madras Courier) எனும் ஆங்கில வார இதழை வெளியிட்டார். இதுவே தமிழ்நாட்டின் முதல் இதழாகும்.

தமிழில் வெளிவந்த முதல் இதழ் எது என்பது பற்றி சரிவரத் தெரியவில்லை. 1831 ஆம் ஆண்டு கிறித்துவ சங்கத்தினர் நடத்திய ‘தமிழ் மேகசின்’ (Tamil Magazine) என்பதுதான் முதல் தமிழ் இதழ் என்கிற கருத்து நிலவுகிறது. 1812 ஆம் ஆண்டில் ‘மாசத் தினச் சரிதை’ எனும் பெயரில் முதல் தமிழ் இதழ் வெளியாகி இருக்கிறது என்று அ. மா. சாமி தனது ‘தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி’ எனும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

1856 ஆம் ஆண்டில் சென்னையில் பெர்சிவால் பாதிரியார் தொடங்கி நடத்திய ‘தினவர்த்தமானி’ தமிழில் வெளி வந்த முதல் வார இதழ்.1887 ஆம் ஆண்டு தமிழ் முதல் நாளிதழாக ‘லலித பிரசனோதயா’ வெளியாகி இருக்கிறது. ஜி. சுப்பிரமணிய ஐயரால் 1882 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுதேசமித்திரன் முதலில் வார இதழாகத்தான் தொடங்கப் பெற்றது. அந்த இதழ் 1899 ஆம் ஆண்டில்தான் நாளிதழாக மாற்றப்பட்டது.

இதையும் படியுங்கள்:
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள் நிகழ்ச்சி - 'அருணாச்சலத்தின் அலுவல்' நாடக அரங்கேற்றம்
Newspaper

நாளிதழ்கள் பொதுவாக அரசியல், வணிகம், குற்றம், பொழுதுபோக்கு, விளையாட்டு முதலிய பல துறைகள் சார்ந்த செய்திகளைத் தாங்கி வருகின்றன. தவிர, நாளிதழ்கள் செய்திகள் அல்லாத வேறு பல பகுதிகளையும் கொண்டிருப்பது உண்டு. முக்கியமாக, ஆசிரியர் எழுதும் தலையங்கம், வாசகர் கடிதம், கேலிச்சித்திரங்கள், கதைகள், சோதிடம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை மக்களுக்குத் தகவல்களையும், பொழுதுபோக்கையும் வழங்கக்கூடிய கூறுகளாகும். இவற்றுக்காகவே மக்கள் நாளேடுகளைப் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கிறார்கள்.

பொதுவான நாளேடுகள் பல்வேறு வகையான வாசகர்களைக் கவர்வதற்காகத் தனியான கூறுகளையும் வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக, பெண்களுக்கான பகுதி, மாணவர்களுக்கான பகுதி, திரைப்படப் பகுதி, வேளாண்மைப் பகுதி, கலைப்பகுதி, விளையாட்டுப் பகுதி போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில நாளிதழ்கள் குறிப்பிட்ட கிழமைகளில் மட்டும் இலவசமாக தனி இதழ் ஒன்றையும் நாளிதழுடன் கூடுதலாக அளிக்கின்றன.

நாளிதழ்கள் வாசித்தபின் அன்றே எறிந்துவிடக் கூடியவை என்பதால், நாளிதழ்களைப் பதிப்பிக்கும் தாள்கள் உயர்ந்த தரமுள்ளைவையாக இருக்க வேண்டியதில்லை. இதனால் குறைந்த தரம் கொண்ட தாள்களிலேயே நாளிதழ்கள் அச்சடிக்கப்படுகின்றன. இது, ‘பத்திரிகைத் தாள்’ என்றே சொல்லப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:
உடல் வெப்பநிலையைச் சமமாகப் பராமரிக்கும் மெரினோ வகை கம்பளி ஆடைகள்!
Newspaper

தற்போது உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்ட கணினிகளின் பங்கும் பயன்பாடும் தேவை என்றாகிவிட்டது. குறிப்பாகத் தகவல் தொடர்புத்துறையில் கணினிகளும், அதன் வழியிலான இணையத் தொடர்புகளும் தவிர்க்க முடியாததாகி விட்டன. இணையப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்ட பிறகு, செய்தித் தொடர்புக்கான அனைத்து ஊடகங்களும் இணையம் வழியில் பயணிக்கத் தொடங்கி விட்டன. மரபு வழியிலான அச்சிதழ் வெளியீட்டாளர்கள் பலரும், இணைய வழியிலான இதழ்களினால் தங்களுடைய வாசகர்களை இழந்துவிடக் கூடாது என்கிற நிலையில் தங்களுடைய இதழை இணைய வழியில் வழங்குவதற்கான பெயர்களைப் பதிவு செய்து, இணையத்தின் வழியாகவும், தங்கள் இதழ்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Read Entire Article