சோனி வாக்மேனும் சோவாரடைஞ்ச சித்தப்பனும்

7 hours ago
ARTICLE AD BOX

இவ்வுலகின் முதல் நீர்நிலையையும், முதல் விவசாய நிலத்தையும் தன்னுடைய சொந்தத் தேவையின் பொருட்டு அழித்தவனே இந்தப் பூமியின் முதல் துரோகி.

ஆறுகளையும், நதிகளையும் மிதக்கும் யானைகள் என்று சொல்லலாம். இந்தியாவில் மட்டுமே கடந்த முப்பது ஆண்டுகளில் நீர்நிலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள காரியம் மிகுந்த கவலைக்குரியது. இது நம்முடைய நாட்டின் எதிர்காலத்துக்கு உகந்ததல்ல! மண்வகைகள், மலைகடத்தல், கனிமவளக் கொள்ளை குறித்து பேசும்போது நீர் நிலைகள் ஆக்கிரமிப்பையும் பேசவேண்டும். ஏனென்றால் ஒரு நீர்நிலையை ஒரு தனிமனிதனோ அல்லாதுமொரு குழுவோ அரசின் கண்ணைக்கட்டி இருட்டின் போக்கில் மூடி விட முடியாது. அது அரசாங்கத்தின் முழு உதவியோடுதான் நிகழும்.

உதாரணமாக ஒரு பேருந்து நிலையம் அல்லது விளையாட்டு மைதானங்களின் ஆதி வடிவமென்பது ஒரு குளமாகவோ குட்டையாகவோதான் இருந்திருக்க முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்த எனக்கே பல குளங்கள் நினைவிலிருக்கின்றன. தற்போது அண்ணா விளையாட்டரங்கம் அமைந்திருந்த இடத்தில் ஒரு குளமிருந்தது. தற்போது நாகாராஜா கோவில் திடல் என்றழைப்படுவதும், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியின் மேற்கில் இருக்கும் பெதஸ்தா எனப்பெயர் கொண்ட அரசுக்கு சொந்தமான கட்டடமும் இரண்டு குளங்களைக் கொன்றுதான் அமைத்திருக்கிறார்கள்.

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் அண்ணா பஸ் ஸ்டாண்டு ஆகியவையுமே இரண்டு குளங்களின் மேல்தான் பாய் விரித்துப் படுத்திருக்கிறது. நகர மயமாதலுக்கு அப்போது அப்படி திட்டமிட்டிருக்கிறார்கள். ‘‘செம்மாங்குளம் ஏற்கனவே போட்டா வரட்டா'' என ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருக்கிறது. இன்னமும் ஆஸ்ராமம் பெரிய குளம், தேரூர் பெரிய குளம், அத்தாணிமார்குளம், தத்தியார்குளம் போன்ற குளங்களைப் போனால் போகட்டுமென பாவம் பார்த்து விட்டிருக்கிறார்கள்.

‘திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நீர் மேலாண்மையும் கழிவுநீர் அமைப்பையும் போல உலகெங்கிலும் இல்லை’ என்றொரு பொறியாளர் ஒரு கூட்டத்தில் சொன்னார். குளம் குட்டைகளின் தாய்தகப்பனான ஆறுகளையும் நதிகளையும் பற்றிக் கூறினால் அதன் நினைவுகள் அத்தனைக்கும் அற்புதமானதான ஒன்றுதான் என்பேன். என்னுடைய பால்யகாலம் அப்பாவின் பணிநிமித்தமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பூத்து மலர்ந்தது. ஆதலால் தாமிரபரணி ஆற்றில் இருந்து கதையைத் தொடங்கலாம்.

தாமிரபரணி ஆற்றுக் கரையின் அருகே 1987 காலகட்டத்தில் நாங்கள் பொதிகையடி கிராமத்தில் குடியிருந்தோம். எங்கள் வீட்டின் நேரே பின்னாடி ஒரு வாய்க்கால் ஓடிக்கொண்டிருக்கும். அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் நேரம் போவதே தெரியாது. எனக்கு அப்போது நீச்சல் தெரியாதாகையால் பக்கத்து வீட்டு அண்ணன்மார் குதித்துக் குளிப்பதைக் கண்டு பொறாமையாக இருக்கும். அம்மா விடமாட்டாளே... என்னசெய்வது? அதுவரைக்கும் கரையிலிருந்து வேடிக்கை பார்க்கவாவது அனுமதியிருந்தது. நாங்கள் பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வந்த காலத்தில் அக்கா கால்தவறி வாய்க்காலில் விழுந்து அம்மா கஷ்டப்பாடு பட்டு காப்பாற்றி பின் படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து என்னுடைய அத்தானின் தலையில் தீபமேற்றினார்கள். (தீ வைத்தார்கள் என்றால் அவ்வளவு ரசனையாக இருக்குமா என்று தெரியவில்லை)

பின்பொரு சுபயோக சுப தினத்தில் நாங்கள் பாபநாசத்திலிருந்து நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்தோம். குமரி மாவட்டத்திலுள்ள பரளியாறு, வள்ளியாறு, தாமிரபரணி ஆறுகளின் இடையில் பழையாற்று படுகையில் அமைந்திருந்தது எங்கள் பாட்டி வீட்டு கிராமம். ஊரைச்சுற்றி பச்சைப் போர்வைகள் போர்த்தியது போன்ற வயல்வெளியும், கால்வாய்களும், சுமைதாங்கிக் கற்களுமாக அமைந்த தீவுபோன்ற ஒரு குட்டி கிராமம். பெயர் மேலதத்தியார்குளம். எங்களுடைய விடுமுறை நாட்கள் அத்தனையும் வயல்வரப்புகளிலும் ஆற்றங்கரை அணைக்கட்டு ஆகிய இடங்களில் செலவு செய்வோம். அங்குள்ள நினைவுகள் அனைத்துமே சுகமாய் அசைபோடத் தகுந்தவைகள்தான். அப்படி ஒரு சம்பவத்தை இங்கே பதிகிறேன்.

ஒழுகினசேரி ஆற்றுப் பாலத்தில் இருந்து வலதுபக்கமாகத் திரும்பி ஆற்றின்கரை வழியாகப் போனால் அந்த ஊர் வரும். கரையின் இருபக்கத்திலும் ஆட்கள் குடிசை வீடுகளில் வசித்தார்கள். பார்க்க எளிய மனிதர்கள் போலத் தெரிந்தாலும் எமகாதகர்கள். நக்கல் நையாண்டிகளிலும் சரி, அடிதடி சண்டைகளிலும் சரி! எல்லாவற்றிலும் கைதேர்ந்தவர்கள். எங்கள் பாட்டி வீட்டு கிராமத்திலும் அப்படியான ஆட்கள் அதிகம். ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி விற்பது, சாராயம் காய்ச்சுவது, பிறன்மனை கொய்தல், தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து தேங்காய் திருடுதல், வயலில் மேயும் ஆடுகளைத் தூக்கிக் கொண்டு போய் சந்தையில் வியாபாரம் செய்வது என்று எந்த சல்லியங்களுக்கும் குறைவிருக்காது.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பழையாற்றின் அணைக்கட்டில் போய் ஒளிந்து குத்த வைத்துக் கொண்டு புகை விடுவது வழக்கமாகயிருந்தது. ஊருக்குள் ‘உத்தமன்’ என்ற ஒரு பெயர் எனக்கிருந்ததால் அந்த ஏற்பாடு.

அன்றும் அப்படித்தான் ரெண்டு சிகரெட்டை வாங்கி டவுசருக்குள் போட்டுக்கொண்டு, கடையிலிருந்து தீப்பெட்டி சிலைடைக் கிழித்து இரண்டொரு குச்சிகளை எடுத்துக் கொண்டு அணைக்கட்டுக்குப் போயிருந்தேன். அப்போதெல்லாம் என்னோடே ஒரு சோனி வாக்மேனும் துணைக்கு வரும். ‘உள்ளம் கேட்குமே’ என்ற படத்தின் ஆடியோ ரிலீசான சமயம் அது. அட்டகாசமான பாடல்கள் அவை.

அந்த அணைக்கட்டில் இருந்து கொண்டு கீழே பார்த்தால் பெண்டிர் நீராடுவது தெரியும். அவர்களுக்கு நம்மை விட்டால் யார் பாதுகாப்பு அளிப்பார்? என்ற எண்ணத்தில் அங்கேயே குந்திக் கொண்டு பந்தத்தைக் கொளுத்தி அமர்ந்தேன். திடீரென நாராயணன் மாமா வந்து விட்டார். அவசரமாக சிகரெட்டை மறைத்து வைத்து விட்டு மாமாவிடம் விசாரித்தேன்,

“மாமா! எங்க தூரமா போறிய?”

“ஒரு எஸ்.டி.டி விளிக்கணும்! அதாம்டே வடிவீசுவரத்துக்குப் போறம் பாத்துக்கா! ஒழ்னசேரியில பில்லு ஒருவாடு வருகு! மிசினுக்கு சூடு வச்சிருப்பானுவன்னி தோணுகு! ஆமா நீ என்னப்போ இங்க?”

“சும்ம காத்து வாங்கலாம்ன்னு வந்தம் பாத்துக்கிடுங்க!”

“ஊருக்குள்ள காத்து வரமாட்டாங்கு பாத்தியா?”

“ஊரானுவளுக்க மோறையக் கண்டுட்டாலும் காத்து வெரசா வீசிரும்லா?”

“செவம் அதுவு ஒண்ணு இருக்கு பாத்தியா? மாந்தப் பெயலுவோ! துப்புன குழிக்கி மண்ணள்ளிப் போடாத பெயக்க!”

“அவுனுவ திரியானுவ சாவ நாளத்து! நீங்க மறுகால்ல பாத்துப் போங்க! வெள்ளம் இழுவ கூடுதலா இரிக்கி!”

“செரிடே! மாமம் போய்ட்டு வரட்டா? நீ கொஞ்சம் பாத்து லெகுவா நடந்துக்கா! லெகிரி காரியங்களு ஒடம்புக்கு சொகங் கெடையாது! செரியா?”

என்றவாறே படிக்கட்டில் இறங்கி நடந்து போனார். மாமா ஒரு மான்யன். கையில் மறைந்திருந்த சிகரெட்டைக் கண்ட போதிலும் அது குறித்து எந்தக் கேள்விகளும் எழுப்பவில்லை. தூரத்தில் கொஞ்சம் பயல்கள் ஜமுக்காளத்தை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

வாக்மேனில் “கனவுகள் புதிய கனவுகள் காண கண்ணுக்குச் சொல்லிக் கொடு நண்பா! ஹேய் அப்துல் கலாம் முன்மொழிந்ததைப் போல” என்ற பாடல் ஓடிக் கொண்டிருந்தது. ரொம்ப ரசமான பாடல் அது. ஒவ்வொரு சரணத்துக்கும் பாடலின் ராகம் வேறு வேறு தளத்தில் மாறிடும் விந்தையை ஹாரிஸ் ஜெயராசா செய்திருந்தார். அந்தப் பாடலானது லுத்தரன் சபையின் ஞானப் பாடல்களில் இருந்து ராவப்பட்ட காரியம் பின்பொரு நாள் தெரிந்தது.

இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்த சமயத்தில் நாராயணனின் மைத்துனன் வந்து சேர்ந்தார். அதுவொரு சகுனி. எனக்கு ஒரு சித்தப்பன் முறை. நான் ‘ஃப்பூ’ என்று ஊதியதைக் கண்டவர் என்னிடம் வந்து கோபத்தில்,

“என்னலே! தல இருந்த எடத்துல கழுத்து வந்துட்டுன்னு ஆவேசப்படுகியோ? பெரட்டிப் புடுவம்பாத்துக்கா? பெரிய ஆனக்கறி துண்ணுட்டு வந்து செமிக்கதுக்காண்டி அணைக்கட்டுக்காத்த வந்து வெள்ளப்பீடிய சுட்டு சூப்பியாரு! தாயளி... கீழப் போட்டு அணல!”

‘ஆனக்கறி, அணக்கட்டு, கீழ்ப்போட்டு அண! பெரிய சிலேடைப்புலவம்’னு நெனப்பு! கொம்மய..ளிக்கி!’ என்றவாறே என் உள்மனம் சலம்பியது. அந்த மாமன் ஒரு ஊர்மாறி! எப்டினாலும் வீட்ல போயி சொல்லத்தாம் போறான்! எதுக்கு ரெண்டு ரூவாய கீழப் போட்டு சீரழிக்கணும்? என்று நானும் சிகரெட்டைக் கைவிடவில்லை.

“இன்னிக்கி ஒங்கய்யங்கிட்ட போயி பத்த வச்சி ஒனக்கு எட்டாங்கொட ஏற்பாடு பண்ணித் தாரனா இல்லியான்னு பாருலே!”

என்று கறுவியவாறே அந்த பாடி அணைக்கட்டின் வலது பக்கச் சப்பாத்தில் இறங்கியது. ஆய் கழுவத்தான் இத்தனை பெகளம்? அந்தப் பக்கம் ஐம்பது வயது இளம்பெண்கள் வேறு நீராடுகிறார்கள்! இந்த நாய் வேறு போகிறது? என்று தோன்றினாலும் நான் எட்டிப்பார்த்தால் கனைப்பான்! எதற்கு இன்னொரு சல்லியம்?’ என்று திரும்பி அமர்ந்து கொண்டேன்.

மெல்லிய சப்தத்தில் “ஒ மனமே! ஒ மனமே! உள்ளிருந்து அழுவது ஏன்ன்‌ன்‌ன்‌ன்... மழையத்தானே வாசித்தோம்! மண்ணின் துளிகளைத் தின்றது யார்?” என்று சோனி வாக்மேன் கண்கலங்க, நானும் கண்கள் குளமாக அமர்ந்திருந்தேன்.

பின்பக்கம் ‘டும்மத்தார்’ என்றொரு சப்தம் கேட்டது. துல்லியமான ஒலிகளைக்கூட அசாத்தியமாக வழங்குவதில் அந்த வாக்மேனை அடிக்க வேறெந்த வாக்மேன்களாலும் முடியாது. நானும் ஸ்பெஷல் எஃபக்டுகளை ரசித்து கண்ணீரில் லயித்து அமர்ந்திருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பயல்கள் சேர்ந்து ஒருவரை தலைக்கு மேல் பாடையில் எடுப்பது போலத் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். என்னருகில் வந்தவுடன் அந்த மனிதர் அவர்களிடம் தன்னை இறக்கிவிடுமாறு சொல்லவே அவர்கள் அவரை இறக்கிவிட்டார்கள், ஆய் கழுவப் போன ஆத்துமாதான் அது. அவர் என்னிடம்,

“காதுல என்னடே தகரம் அடிச்சிருக்கு?”

“அது ஹெட்போனு!”

“நீ யா இங்க வந்து கெடக்க?”

“காத்து வாங்க வந்தேன்!”

“யா ஊருக்குள்ள காத்தில்லாம மூச்சிமுட்டி சாவக் கெடந்தியா?”

“அது இருக்கட்டும்! நீரு யாவோய் நனஞ்சி தொவஞ்சி வந்து நிக்கீரு?”

“அது... நாங் குளிச்சிக்கிட்டுல்லா வாரேம்!”

“எது.... உடுதுணியோட குளிச்சீரு இல்லியா?”

“நாந்தண்ணிக்குள்ள முங்கி தியானம் பண்ணுனம்லா? அதாந்துணி நனஞ்சிட்டு!”

“இநதப் பயலுவ யாம்வே ஒம்ம தூக்கிட்டு வந்தானுவ?”

“செவங்களுக்கு மண்டக்கி வட்டு!” என்று என்னிடம் சொல்லிவிட்டு, “நீங்க போங்கல ஒழிஞ்சி!” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு கடந்து போனார். அந்தப் பயல்கள் என்னிடம் வந்து,

“எண்ணே! யாருணே இந்தக் கொம்மண்டத் தாயோளி? கொஞ்சம்னா செத்துருப்பாங் கேட்டுக்கா! காலு வழுக்கி மண்ட அடியா அடிச்சி தண்ணிக்குள்ள தலக்குப்பற பாஞ்சி சாவக் கெடந்தவன காப்பாத்திக் கொண்டாந்தா நாயி என்ன சொல்லிட்டுப் போகு பாத்தேளா?”

“விடுங்கலே தம்பி! செவம் நம்ம கைல அடிவாங்குனா செத்துருவாம்டே! நம்ம எதுக்கு ஒரு பல்லியக்கொல்லின்னு கேசு எடுக்கணும்? செவம் ஆடிமாசம் வருகுல்லா! காத்து வாக்குல பறந்து எங்கயாம் போயி கரண்டு லைனுல அடிபட்டு செத்துருவாம்! நீங்க போயி மீனு புடிங்கடே!”

என்று பயல்களை அனுப்பி வைத்த பிற்பாடுதான் எனது பின்பக்கத்தில் சோனி வாக்மேனின் துல்லியமில்லை என்பது, அந்தச் சப்தம் சித்தப்பன் நீருக்குள் பாய்ந்த சப்தம் எனவும், தலையில் அடிபட்டு நான் சிகரெட் பிடித்த சம்பவம் அவனுக்கு மறந்து போனது என்பது எனக்குத் தெரிந்தது.

அவனது பெயர் “மோடேறி மோசை” என்பது யாருக்குத் தெரியுமோ இல்லையோ, அவனது தலையில் மோதிய பாறைக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்! மோசைக்கும், கோலப்பனுக்கும் துளியளவும் சம்பந்தமில்லை!

பழையாற்றின் ஜலத்துக்குள்வீழ்ந்த மோசஸை ஜீசசும் காப்பாற்றவில்லை.. இளம்பிராயத்து மீனவர்கள்கண்டுகொண்டு மோசையைக் காப்பாற்றினார்கள் அல்லேலூயா! ஐந்து அப்பம் என்பதுமுக்கியமல்ல! அன்றன்றுள்ள அப்பமே ஆசுவாசம்! ஆமேன்! ஜலபகவான் ஒரு விடாக்கண்டன்! மோசை ஒரு கொடாக்கண்டன்!

இப்போது அந்த ஆற்றங்கரைக்குப் போய்ப் பார்த்தால் அங்கே இருந்த வீடுகளையும் ஆட்களையும் பொதுப்பணித்துறைக்காரர்கள் அப்புறப் படுத்தியிருந்தார்கள். அங்கேயிருந்த படித்துறைகளையும் காணவில்லை. கரைமுழுவதும் செடிகளடைந்து கிடக்கிறது. ஆட்கள் புழங்காத பழையாறும் அழுக்காய் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அந்த மிதக்கும் யானை செத்துப் போயிருக்குமோ என்று தோன்றுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

Read Entire Article