ARTICLE AD BOX
சென்னை: வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ், வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜூன் தேவ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘அகத்தியா’. ஜீவா, அர்ஜூன், ராசி கன்னா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா நடித்துள்ளனர். தீபக்குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பா.விஜய் எழுதி இயக்கியுள்ளார். வரும் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஜீவா பேசியதாவது: இப்படத்தின் கதையை பா.விஜய் சொல்ல வந்தபோது, நான் ஏற்கனவே ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற ஹாரர் படத்தில் நடித்துவிட்டதால், மீண்டும் ஹாரர் படத்தில் நடிக்க வேண்டுமா என்று கேட்டேன். எனினும் அவர், என்னை வற்புறுத்தி கதை கேட்க வைத்தார். மிகவும் வித்தியாசமாக இருந்ததால் நடிக்க சம்மதித்தேன்.
இப்படத்தை இந்திய ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மிக்ஸ்டு ஜானரில் உருவாக்கியுள்ளார். இன்றைய சமூகத்துக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜும் இருக்கிறது. முதல்முறையாக குழந்தைகள் தமிழில் இதுபோன்ற சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளையும், அனிமேஷனில் உருவான கதாபாத்திரங்களையும் தியேட்டரில் பார்த்து ரசிப்பார்கள். இப்படத்தின் முக்கியமான விதை, அர்ஜூன். அவரைச் சார்ந்தே கதை நகரும். நானும், ராசி கன்னாவும் நட்புடன் பழகி வருகிறோம். அவர் எனக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்துள்ளார்.