செவ்வாய் கிரகத்தில் அதிசயத்தை கண்டுபிடித்த சீன ரோவர்! விஞ்ஞானிகள் ஆச்சரியம்

3 hours ago
ARTICLE AD BOX

செவ்வாய் கிரகத்தில் அதிசயத்தை கண்டுபிடித்த சீன ரோவர்! விஞ்ஞானிகள் ஆச்சரியம்

New York
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இன்று செவ்வாய் கிரகம் வறண்ட பாலைவனமாக இருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இங்கு கடல் இருந்திருக்கிறது என சீன ரோவர் கொடுத்த தகவல்களை ஆய்வு செய்த போது தெரியவந்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அப்படி எனில், இனி வரும் நாட்களில் பூமியும் செவ்வாய் கிரகம் மாதிரி ஆகிவிடுமோ என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.

China Mars

சூரிய குடும்பத்தில் 4வது கிரகமாக செவ்வாய் இருக்கிறது. பூமியிலிருந்து 22 கோடி கி.மீ தொலைவில் இருக்கும் இந்த கிரகத்தில், மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா? குறிப்பாக நீர் இருக்கிறதா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக கடந்த 2021ம் ஆண்டு சீனா 'ஜூரோங்' என்கிற பெயரில் ஒரு ரோவரை அனுப்பி வைத்திருந்தது. இந்த ரோவர் செவ்வாயில் நீர் இருக்கிறதா? என்று ஆய்வு செய்து சில தகவல்களை அனுப்பியிருந்தது.

ரோவர் இப்போது செயல்பாட்டில் இல்லை. ஆனால் அது கொடுத்த தகவல்களை கொண்டு விஞ்ஞானிகள் இப்போது வரை ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான ஆய்வை பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர்கள் மேற்கொண்டு வந்தனர். அதில், செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் கடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த கிரகத்தில் ஆறுகள் ஓடியதற்கான ஆதாரங்கள் ஏற்கெனவே கிடைத்திருந்தன. ஆனால், கடல் இருந்ததா? என்று தெரியாது.

தற்போது பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக மாணவர்கள் கடல் இருந்ததை உறுதி செய்திருக்கின்றனர். பொதுவாக பூமியில், நிலத்தடியின் தன்மை குறித்து தெரிந்துக்கொள்ள கிரவுண்ட்-பெனிட்ரேட்டிங் ரேடாரை (Ground-Penetrating Radar - GPR) பயன்படுத்துவார்கள். இது நிலத்தடியில் அதிர்வலைகளை அனுப்பும். அவை பாறைகள், தண்ணீர், மண், நிலத்தடி பொருட்கள் போன்றவற்றுடன் மோதும்போது திரும்ப எதிரொலிக்கும். இந்த தகவல்களை வைத்து நிலத்தடி எப்படி இருக்கிறது? மண்ணின் தன்மை என்ன? என்பன உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்படும்.

செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிலப்பரப்பை ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்களும், பூமியின் கடற்கரையில் கிரவுண்ட்-பெனிட்ரேட்டிங் ரேடார் ஆய்வின் போது கிடைத்த தகவல்களும் ஒரே மாதிரி இருக்கின்றன. அப்படியெனில் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் கடல் இருந்திருக்கிறது என்று அர்த்தம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பூமியில் முதல் உயிர் உருவானது கடலில்தான். எனவே, செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்திருக்கிறது எனில், அங்கும் உயிர்கள் இருந்திருப்பதற்கான சான்றுகள் இருக்க கூடும் என்றும் ஆய்வாளர்கள் யோசித்து வருகின்றனர். எப்படி இருப்பினும், முழுமையான ஆய்வுக்கு பின்னரே உண்மை தெரிய வரும் என்றும் கூறியுள்ளனர்.

இன்று செவ்வாய் கிரகம் தனியாக, அநாமதேயமாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்வதன் மூலம் கிரகங்கள் எப்படி உருவானது? கிரகத்தில் உள்ள நீர் எப்படி ஆவியாகும்? ஒரு கிரகம் எப்படி இறந்து போகும்? உள்ளிட்டவை குறித்து நம்மால் கூடுதல் தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது சீனாவின் ரோவர் மிக முக்கியமான தகவல்களை நமக்கு கொடுத்து சென்றிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் பூமியை, செவ்வாய் போல இறந்த கிரகமாக மாற்றக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
English summary
Today, Mars is a dry and barren desert. However, American scientists have stated that an analysis of data provided by the Chinese rover suggests that oceans may have once existed on the planet.
Read Entire Article