செய்யூர் பஜார் பகுதியில் வாரச்சந்தை கட்டிடம் கட்டித்தர வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

3 hours ago
ARTICLE AD BOX

செய்யூர்: செய்யூர் பஜார் பகுதியில் உழவர் சந்தை கட்டிடம் அமைத்து தரவேண்டும் என வாரச்சந்தை நடத்தும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பஜாரில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பஜார் பகுதியில் இருந்து செய்யூர் காவல் நிலையம் செல்லும் சாலையில் வியாபாரிகள் வாரச்சந்தை நடத்தி வருகின்றனர். செய்யூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கனிகள், பல்வேறு வகையான பூக்களை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கடலோரம் உள்ள மீனவர்கள் தாங்கள் கொண்டு வரும் மீன்களை இங்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலைகளில் அமர்ந்து வியாபாரம் செய்ய இடம் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. இதனால், சாலையோர இடுக்குகளில் அமர்ந்து வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், செய்யூர் பகுதியில் தங்களுக்கு என்று தனி உழவர் சந்தை கட்டிடம் கட்டி தர வேண்டும் என நீண்ட காலமாக வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அதற்காக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், வாரம்தோறும் வாரச்சந்தையின்போது இச்சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால், அவ்வப்போது இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே, வாரச்சந்தை நடத்தும் வியாபாரிகள் நலன் கருதி அவர்களுக்கென இப்பகுதியில் தனியாக உழவர் சந்தை கட்டிடம் ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செய்யூர் பஜார் பகுதியில் வாரச்சந்தை கட்டிடம் கட்டித்தர வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article