ARTICLE AD BOX
சென்னை, கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி' கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும். அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல். உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
மேலும், மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று ஏற்படுத்திட "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை"யை உருவாக்கியது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதையும் படிக்க | இந்தியர்கள் தங்கள் ஊதியத்தில் செலுத்தும் இ.எம்.ஐ. எவ்வளவு தெரியுமா?

அந்த வகையில், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானிய கோரிக்கையில், சென்னை நகரமானது பாரம்பரியமாகவே குத்துச்சண்டை விளையாட்டிற்கு புகழ்பெற்றது. சென்னையில் பல்வேறு குத்துச்சண்டை வீர்ர்கள் உருவாகி குத்துச்சண்டை விளையாட்டில் புகழ்பெற்று விளங்கினர். தமிழ்நாட்டில் குத்துச்சண்டை விளையாட்டை மீண்டும் புகழ்பெறச் செய்ய, பல்வேறு உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்களை உருவாக்குவது அவசியமானதாகும்.
எனவே, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் குத்துச்சண்டை விளையாட்டிற்கு புத்துயிர் அளிக்க குத்துச்சண்டை அகாதெமி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல்வரால் 2.11.2023 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை, கோபாலபுரத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குத்துச்சண்டை அகாதெமி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை கோபாலபுரத்தில் 8 கோடி ரூபாய் செலவில், 890 நபர்கள் அமரும் வகையிலான பார்வையாளர் மாடத்துடன் கூடிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட உள்அரங்கம், பயிற்சி மைதானம், உடற்பயிற்சிக் கூடம், பயிற்சியாளர் அறை, பயிற்சி செய்யும் பகுதி, மருத்துவர் அறை, நிர்வாக அலுவலகம் ஆகிய வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாதெமியை முதலமைச்சர் திறந்து வைத்து, அங்கு நடைபெற்ற 48 முதல் 51 கிலோ எடைப் பிரிவிற்கான குத்துச்சண்டை போட்டியை பார்வையிட்டு, வெற்றி பெற்ற குத்துச்சண்டை வீராங்கனைக்கு கோப்பையை வழங்கினார்.

இந்த குத்துச் சண்டை அகாதெமி அமைக்கப்படுவதன் மூலம், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள குத்துச்சண்டை ஆர்வலர்கள் மற்றும விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்துக்கொண்டு பதக்கங்களை வெல்வதற்கு நல்வாய்ப்பாகவும் அமையும்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.