ARTICLE AD BOX
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை அடையார், தாமோதரபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தங்கராஜ் (56). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த 19ம் தேதி அடையார் அருகே அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் அந்த மாணவியை மிரட்டியுள்ளார்.
பயந்து போன அந்த மாணவி, அங்கிருந்து ஓடி விட்டார். இதையடுத்து நேற்று பள்ளிக்கு வந்த அந்த மாணவி, தனது வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வகுப்பு ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாணவியின் பெற்றோர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.