ARTICLE AD BOX
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பெங்களூருவில் இருந்து காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை ரிசர்வ் கோச்சில் பயணித்துள்ளார். அப்போது அந்த இளம்பெண் டூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் அடங்கிய பையை தோளில் மாட்டிக்கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது பை தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அதே கோச்சில் நின்று கொண்டு பயணித்து வந்த ஒரு நபர் கீழே விழுந்த பையை திருடி மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து திடீரென கண்விழித்த அந்தப் பெண் தனது பையை காணததால், உடனே சத்தமிட்டபடி அவசர சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். இதைப் பார்த்த அநத நபர் தான் மறைத்து வைத்திருந்த பையை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார். இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட சக பயணிகள் அந்த நபரை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து கீழே கிடந்த பையை திறந்து பார்த்தபோது, அதிில் பல லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் இருந்ததைக் கண்ட போலீசார், பெண்ணிடம் உறுதிப்படுத்திய நிலையில் பெண்ணிடமிருந்து பையை திருடியது அந்த நபரை சென்ட்ரல் ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், பையை திருடிய அந்த நபர் ஓட்டேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றும் காவலர் வசந்தகுமார் என்பது தெரியவந்தது.
பை அழகாக இருந்ததால் தான் அந்த பையை திருடியதாகவும், உள்ளே நகைகள் இருந்தது தனக்குத் தெரியாது எனவும் வசந்தகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் வசந்தகுமாரிடம் சென்ட்ரல் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து தங்க வைர நகைகள் இருந்த பையை இளம் பெண்ணிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர் இதே போல எத்தனை முறை வசந்தகுமார் கைவரிசை காட்டியுள்ளார்? பையில் நகைகள் இருப்பதை அறிந்து காவலர் கைவரிசை காட்டினாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.