ARTICLE AD BOX
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT Madras) இன் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (CODE) மற்றும் சி.ஐ.ஐ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆகியவை 'சப்ளை செயின் மேனேஜ்மென்ட் புரொஃபஷனல்' (SCMPro) சான்றிதழ் படிப்பு திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளன. இந்த திட்டத்தில் சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர்களின் வீடியோ வகுப்புகள் இருக்கும்.
ஆங்கிலத்தில் படிக்க: IIT-Madras, CII offer certification programme in supply chain management
உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், மின் வணிகம், சில்லறை விற்பனை, எஃப்.எம்.சி.ஜி அல்லது லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த பணிபுரியும் வல்லுநர்கள் மற்றும் எந்தவொரு பொறியியல், வணிகம், அறிவியல் அல்லது வணிக மேலாண்மை கல்லூரிகளின் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேரத் தகுதியுடையவர்கள்.
இந்தப் படிப்பு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும். இந்தப் படிப்பில் சேர பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம் – code.iitm.ac.in/supply-chain-management-professional-certification-scm-pro
கடந்த பத்தாண்டுகளில், எஸ்.சி.எம் புரோ (SCM Pro) சான்றிதழ் படிப்புத் திட்டம் ஏற்கனவே 40,000-க்கும் மேற்பட்ட நிபுணர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சி.ஐ.ஐ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பாடத்திட்டத்தில் கல்வி நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும். புதிய பாடத்திட்டம் பங்கேற்பாளர்களுக்கு விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்த திறன்களையும் நுண்ணறிவுகளையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டத்தில் 30 மணிநேர வீடியோ உள்ளடக்கம் கொண்ட தொகுதிகள், மின் படிப்புப் பொருட்கள், பதிவிறக்கம் செய்யக்கூடிய டிரான்ஸ்கிரிப்டுகள் ஆகியவை அடங்கும். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொலைதூர மேற்பார்வையிடப்பட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் சி.ஐ.ஐ மற்றும் CODE, சென்னை ஐ.ஐ.டி இணைந்து வழங்கும் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலந்துரையாடல் மன்றங்களுக்கான அணுகலைப் பெறுவார்கள்.
சான்றிதழைப் பெற, பங்கேற்பாளர்கள் 3 மணிநேரம் (180 நிமிடங்கள்) கால அளவு கொண்ட 200 பல தேர்வு கேள்விகள் (MCQs) கொண்ட ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 70% மதிப்பெண் (200க்கு 140) பெற வேண்டும். பங்கேற்பாளர்கள் ஒரு வருடத்திற்கான பாடப் பொருட்களை அணுகலாம். சென்னை ஐ.ஐ.டி அவர்களை வளாகத்தைப் பார்வையிட அழைக்கும்.