செங்கோட்டையனை தொடர்ந்து ஈபிஎஸ் விழாவை புறக்கணித்த தங்கமணி! அதிமுகவில் புதிய கலகக்குரல்?

2 hours ago
ARTICLE AD BOX

அதிமுகவில் இப்போது பெரும் பிளவு ஏற்படுள்ளது. ஏற்கெனவே சசிகலா அணி, தினகரன் அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக பிரிந்து கிடக்கும் நிலையில், இப்போது அதிமுகவை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியில் புகைச்சல் உருவாகி இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பு கோவையில் அத்திக் கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. 

இந்த விழாவை அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்தார். எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியின் காரணமாகவே அவர் விழாவை புறக்கணித்ததாக தகவல் வெளியானது. அதிமுகவின் இருபெரும் தலைவர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படங்கள் வைக்கப்படாததால் விழாவில் கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். 

சில நாட்களுக்கு முன்பு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் செங்கோட்டையன் பெயர் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே மோதல் வெட்டவெளிச்சமானது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சென்னை அதிமுக அலுவலகத்தில் நடந்தது. இதில் அதிமுக மூத்த தலைவர்களான ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் செங்கோட்டையன் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இது அனைவரும் எதிர்பார்த்தது தான் என்பதால் அதிமுகவினர் அதிர்ச்சியடையவில்லை. ஆனால் இந்த விழாவில் அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி கலந்து கொள்ளாதது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனை போன்று தங்கமணியும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளதால் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செங்கோட்டையனை போன்று தங்கமணிக்கும் அதிமுகவில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் அண்மைகாலமாக கட்சியின் முக்கிய முடிவுகளில் தங்கமணியை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து வந்துள்ளார் எனவும் அதிமுக தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இது மட்டுமின்றி எஸ்.பி.வேலுமணிக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கமணியை ஈபிஎஸ் ஓரம்கட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தங்கமணி, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  செங்கோட்டையனை தொடர்ந்து தங்கமணியும் கலகக்குரல் எழுப்பி இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் செங்கோட்டையன் மற்றும் தங்கமணி இரண்டு பேரும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள். 

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த கோட்டையில் விரிசல் விழுவது ரத்தத்தின் ரத்தங்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே அதிமுகவில் கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு பெற்று விளங்கிய செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்து அமைச்சராகி கொங்கு மண்டலத்த்தை திமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அப்பட்டமாக தெரிந்தது. இப்போது கொங்கு மண்டலத்தில் இரண்டு கலகக் குரல்கள் எழுப்பி இருப்பது அதிமுகவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read Entire Article