ARTICLE AD BOX
“தானே-தானே பர் கானேவாலே லிகா ஹை!” என்று கூறுவார்கள். அதாவது, சாப்பிடும் அரிசி ஒவ்வொன்றிலும், நமது பெயர் எழுதியிருந்தால் மட்டுமே சாப்பிட முடியும் எனக்கூறுவது போலவேதான் புனித பயணங்களும். நாம் போகவேண்டுமென எழுதியிருந்தால் மட்டுமே செல்ல முடியும். நல்லதை மனதில் நினைக்கையில், பிரபஞ்சம் வழிகாட்டுகிறது என்பது நிதர்சனம்.
என்னுடைய மகா கும்பமேளா பயணமும் பிரபஞ்சத்தின் மூலம், திடீரென திட்டமிடப்பட்ட ஒன்றெனலாம். என்னுடைய 80 வயது சகோதரி பூனேயிலிருந்து, "நாமிருவரும் மகா கும்ப மேளாவிற்கு திவ்யதேஷ் டூர் வழியே செல்லலாமா? விசாரித்து ஏற்பாடு செய்" என்று ஃபோனில் கூறவும், மும்முரமாக செயல்பட்டேன்.
பிப்ரவரி 20 முதல் 22 வரை, இரண்டாவது க்ரூப் செல்கிறது. சில இடங்களே இருக்கின்றன. உடனே புக் செய்யுங்களெனக் கூறவும் புக் செய்தேன். பணம் கட்டினேன். செக்டர் 25, Luxury tent city. இந்த கூட்டத்தில் போகவேண்டுமா? அவசியமா? என்று வீட்டினர்களும், தெரிந்தவர்களும் கேட்டனர். புன்சிரிப்புடன் " "தானே-தானே பர் கானேவாலே லிகா ஹை!". போகிறேன்" என்றேன்.
மும்பை-கான்பூர்-மும்பை வழி டிக்கெட்தான் இருந்தது. 3 டூர் மேனேஜர்கள். பயணிகள் 40. ஆக மொத்தம் 43 பேர்கள். 11 கார்கள் எங்களை கான்பூர் ஏர்போர்ட்டிலிருந்து ஏற்றிக்கொண்டு கல்யாண ஊர்வலம் மாதிரி சென்றன.
கான்பூர் ஏர்போர்ட்டிலிருந்து பிரயாக்ராஜ் சிட்டிக்குள் நுழைய, சாலைவழிப் பயணம் சுமார் 4 மணி நேரம். பின்னர் சிட்டியிலிருந்து செக்டர் 25ற்கு செல்ல 15 கிலோமீட்டர்.
எக்கச்சக்க டிராபிக். ஒரே ஜாம்தான். டைவர்ஷன் வேறு. ஆங்காங்கே போலீஸ் கெடுபிடி. 20/2/ மாலை 4 மணிக்கு கான்பூர் ஏர்போர்ட்டிலிருந்து புறப்பட்ட நாங்கள், 21/2 அதிகாலை 2 மணியளவில் செக்டார் 25 ஐ சுற்றி - சுற்றி அடைந்தோம். வழியில் 2-3 இடங்களில் Halt.
மூன்று கார்கள் இடையே மிஸ்ஸிங். ஒரே பர-பரப்புதான்.
144 ஆவது மஹா கும்பமேளாவில் கலந்துகொள்ள போகிறோமென்ற எண்ணம் மேலோங்கியிருந்ததால், பயணத்தை அநுபவித்தேன்.
மஹாகும்ப மேளாவின் பின்னணியில் பாகவத புராண விபரம் இருக்கிறது. அதாவது, பாற்கடலை கடைந்தபோது கிடைத்த அமிர்த கலசத்திலிருந்து ப்ரயாக்ராஜ், உஜ்ஜயின், ஹரித்வார், நாசிக் என்ற இடங்களில் ஒருதுளி வீதம் நான்கு துளிகள் விழுந்தன. அமிர்த துளி விழுந்த பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில், வானில் கூடும் கோள்களின் அபூர்வ நிலை, ஒரு வித பரிசுத்தமான சக்தியை வெளிப்படுத்துகிறது என்பதாகும்
ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 சிவராத்திரி திருநாள் வரை நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு ஒவ்வொரு நிமிஷமும் வரும்
கூட்டத்தை பார்க்கும்போது 26 பிப்ரவரிக்குள் இந்த மஹா கும்பமேளாவைப் பார்த்துவிட வேண்டுமென்கிற வேட்கை பக்தர்களிடையே தெரிகிறது.
சிரமத்தைப் பொருட்படுத்தாமல், தலையில் மூட்டை முடிச்சுடனும், கைகளிலும், இடுப்பிலும் குழந்தைகளை வைத்துக்கொண்டும் வரும் மக்கள் கூட்டம் அப்பப்பா!
ஆங்காங்கே இலவச கழிப்பிடங்கள், தண்ணீர் குழாய் வசதிகள், இலவச உணவு, அன்னதானக் கூடங்கள் போன்றவைகளில், அதிகமான ஹைஜீனிக்கை எதிர்பார்க்க முடியாது. அரசின் துப்புரவு தொழிலாளர்கள் நிலத்திலும், நீரிலும் கழிவுகளை அப்புறப்படுத்தும் வேலைகளை அவ்வப்போது செய்கின்றனர்.
கடைசி 10 கிலோ மீட்டர் தூரம், கட்டுக்கடங்காத போக்குவரத்தால் ஸ்தம்பிக்கிறது.
நதியின் ஓட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாய் குளிக்க வசதியாக ஆங்காங்கே படித்துறைகள்; கரையோரங்களின் ஐம்பதடி அரைவட்டங்களாக மிதக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களின் சங்கிலி தடுப்பு; அதனுள்ளே இடுப்பளவு சற்றே குறைந்த விசையுள்ள தண்ணீர் ஓட்டம்; அதனை ஒட்டி நீரோட்டப் பகுதியில் மூழ்கும் அசம்பாவிதத்தைத் தவிர்க்க தயார் நிலையில் நீச்சல் வீரர்கள் அடங்கிய படகுகள் போன்ற முன்னேற்பாடுகள் உள்ளன.
21/2 காலை 8 மணிக்கு பஸ்ஸில் 5 கிலோமீட்டர் சென்று பின்னர் திரிவேணி சங்கமத்திற்கு 3 கிலோமீட்டர் நடந்து சென்றோம். நடப்பதற்கு இடமில்லை. எக்கச்சக்க வி.ஐ.பி. கார்கள், பைக், ஸ்கூட்டர் இத்யாதி! இத்யாதி! ஒரே தள்ளு-முள்ளுதான்!
இரண்டு போட்களில் சுமார் 20 நிமிடங்கள் பயணித்து திரிவேணி சங்கம் சென்றவுடன் ஏற்பட்ட பரவசம் அளவிட முடியாததாகும். வயதான மாமா-மாமிகள் உற்சாகத்துடன் சங்கத்தில் குளித்தனர். மந்திரங்கள் கூறினார்கள். மூன்று முழுக்குகளை நானும் போட்டேன். ஆயாசமும், அலுப்பும் மறைந்தன.
இந்த 144 ஆவது மகா கும்பமேளாவில், திரிவேணி சங்க ஸ்நானத்தை நான் மேற்கொள்ள உதவி செய்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி செலுத்தினேன். ஒருவரின் வாழ்நாளில் இத்தகைய பாக்கியம் கிடைப்பதென்பது பெரிய விஷயம். அத்திவரதரின் தரிசனமும் அடியேனுக்கு எதிர்பாராமல் கிடைத்தது.
எங்கள் டூரில் வந்த 5 வயது சிறுமியை, டூர் மேனேஜர் ஒருவர் தனது தோளில் அமரவைத்து தூக்கிச் சென்றார். இதேபோல் வயதானவர்களை கைகளைப்பிடித்து தாங்கலாகத் தோள்மீது போட்டு அழைத்துச் சென்றார்.
உபரித் தகவல்கள்:
வயதில் மூத்த, நடக்க முடியாத தாத்தாவை தன் தோளில் சுமந்து வந்த பேரன், அவரை மெதுவாக நீராடச்செய்து, தானும் நீராடியது, கண்ணிலிருந்து கண்ணீரை வரவழைத்தது.
பத்து பேர்களாக கிராமங்களிலிருந்து வரும் மக்கள், கூட்டத்தில் தொலைந்து போகாமல் இருக்க, மனித சங்கிலி போல, ஒரு கயிற்றின் முதல் முனையினை முன்னால் செல்பவர் பிடித்துக்கொள்ள, அடுத்தடுத்து வருபவர் அந்த கயிற்றைப் பிடித்தவண்ணம் வரிசையாக பின் தொடர்ந்து செல்கின்றனர். பகல்-இரவு, சூடு - குளிர் என பாராமல், 24 மணி நேரமும் பக்தர்கள் நீராடுகின்றனர்.
தினமும் மாலை வேளைகளில் கலை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பல்வேறு இடங்களிலிருந்து, அநேக கலைஞர்கள் வருகையளித்து நிகழ்வுகளை நடத்துகின்றனர். கடம் வித்தகி சுகன்யா ராம்கோபால், சிக்கில் மாலா சந்திரசேகர் என பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்
அத்தனை பேரும் ஒருவித நல்ல நம்பிக்கையுடன் திரிவேணி சங்கத்தில் கூடுகையில், அந்த இடத்தின் பாஸிட்டிவ் எனர்ஜிக்கு அளவேயில்லை.
கங்கையும் யமுனையும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதியும் ஒன்றாக கலந்து ஸ்நானம் செய்யும் அனைவரையும், பரிவுடன் அணைத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.
டூரில் அநேக நண்பர்கள், நண்பிகள் கிடைத்தனர். அருமையான வெஜிடேரியன் சாப்பாடு. டென்ட் சிட்டியில், ஒவ்வொரு டென்ட்டும், பாத்ரூம் வசதியுடன் அருமையாக அமைக்கப்பட்டிருந்தது. ஜிப் போட்டு மூடிவிட்டால் போதும். பூட்டு - சாவி தேவையில்லை. திருட்டுப்பயம் கிடையாது.
புனிதப்பயணம் இனிதே முடிந்து, மனதில் மகாகும்ப நிகழ்வினை நிறைவுடன் சுமந்து வீடு திரும்பினேன்.
ஹர ஹர மகாதேவ்!
ஹர ஹர கங்கே! யமுனா! சரஸ்வதி!