ARTICLE AD BOX
கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூட்டில் புகழ்பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கபில நதிக்கரையில் உள்ள இக்கோயிலில் சிவனும் பார்வதியும் சில காலம் வசித்ததாக கூறப்படுகிறது. பக்தர்கள் இத்தலத்தை தட்சிண பிரயாகை என்று அழைக்கிறார்கள். இக்கோயிலின் இறைவனை வழிபடுவதன் மூலம் காசி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்தல புராணம்
இக்கோயிலின் வரலாறு பல புராணங்களோடு தொடர்புடையது. ஆரம்ப காலத்தில் இந்த ஊர் கரல்புரி என்றழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் நச்சுத் தன்மை மிக்க கேசி என்ற ஒரு அசுரன் மனிதர்களையும் தேவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்தான். கபில, கவுண்டினி, மணிகர்ணிகை ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் கரல்புரியில், யாகம் செய்யப் போவதாக கூறி தேவர்கள் கேசி அரக்கனை அதில் கலந்து கொள்ள அழைத்தனர். யாகத்திற்கு வந்த கேசியை தேவர்கள் சேர்ந்து அக்னி குண்டத்தில் தள்ளி விட்டனர். அக்னியில் கொடிய நஞ்சாக மாறிய கேசியை, அக்னியில் வீரபத்திரனாக தோன்றி சிவபெருமான் விழுங்கி விட்டார். இதனால் நஞ்சுண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
இன்னொரு புராணக் கதைப்படி தேவர்களும் அசுரர்களும் இணைந்து மந்திரமலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். உடல் வலி பொறுக்காது வாசுகி ஆலகால நஞ்சை கக்கியது. அந்த நஞ்சு உலகை அழிக்கும் வன்மை கொண்டதால் சிவபெருமான் உலகைக் காக்கும் பொருட்டு நஞ்சை பருகினார். அதை பார்த்த உமையவள் சிவனின் தொண்டையில் கை வைத்து நஞ்சு உள்ளே இறங்க விடாமல் செய்தார். இதனாலும் இறைவனுக்கு நஞ்சுண்டேஸ்வரர் என்ற பெயர் வந்துள்ளது.
ஶ்ரீ லட்சுமி நாராயணன் திருமணம் நடைபெற்ற தலம்:
பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்த போது அதிலிருந்து அலைமகள் மஹாலக்ஷ்மி வெளிப்பட்டு, மஹாவிஷ்ணுவை கண்டு மையல் கொண்டாள். பரந்தாமனை மணக்கும் பொருட்டு இந்த தலத்தில் சிவனை நோக்கி தவமிருந்தாள். லக்ஷ்மியின் தவத்தில் மெச்சிய சிவபெருமான், மஹா விஷ்ணுவிற்கும் லஷ்மிக்கும் திருமணம் செய்து வைத்தார்.
பரசுராமரின் பாவம் போக்கிய இடம்:
பரசுராமர் தன் தந்தையின் கட்டளைப்படி தன் தாயின் தலையை வெட்டினார். அதன் பின்னர் தந்தையிடம் தாயை உயிர்ப்பிக்குமாறு வேண்டினார். அதனால் அவர் தாயும் உயிர் பெற்றார். ஆனாலும் தாயை வெட்டிய பாவத்தை நீக்க உலகெங்கும் அலைந்தார். கரல்புரியில் அவர் தவம் செய்ய கோடரியால் இடத்தை சுத்தம் செய்த போது, அது சிவலிங்கத்தில் பட்டு இரத்தம் பீறிட்டது. அதைக் கண்ட பரசுராமர் தன்னை தானே வெட்டிக் கொல்ல கோடரியை தூக்கினார்.
அப்போது சிவபெருமான் அவர்முன் தோன்றி கபிலநதி நீரில் மண்ணைக் கலந்து லிங்கத்தில் பூச சொன்னார். பரசுராமரும் அதைச் செய்ய, இரத்தம் நின்றது. மேலும் சிவபெருமான் பரசுராமருக்கு சிரஞ்சீவி வரத்தினையும் அளித்தார்.
ஒருமுறை திப்பு சுல்தானின் பட்டத்து யானையின் இரு கண்களும் குருடாகி விட்டது. எந்த வைத்தியராலும் யானைக்கு பார்வையை கொண்டு வர முடியவில்லை. அமைச்சர் பூர்ணய்யாவின் ஆலோசனைப்படி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் 48 நாள் சிகிச்சை செய்யப்பட்டு யானைக்கு பார்வை திரும்பியது. அதனால் மருத்துவர் நீலகண்டேஸ்வரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலை முதலில் பரசுராமர் உருவாக்கியுள்ளார். பின்னாளில் பல அரசர்கள் திருப்பணி செய்து புணரமைத்து கோயிலை சிறப்பித்துள்ளனர். தீராத நோய் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வழிபாடு செய்து பலன் அடைகின்றனர். தினமும் இக்கோயிலில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு நோய் தீர்க்கும் மருந்தாக, பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.