அதிமுக ஆட்சிக்கு வந்தால் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்போவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வாக்குறுதி அளித்துள்ளார். இதுகுறித்து தலைமை முடிவு செய்யும் என்றும் நம்பி வாக்களிக்குமாறும் சி.வி. சண்முகம் மக்களை கேட்டு கொண்டுள்ளார்.

வாக்குறுதி அளித்த சி.வி. சண்முகம்:

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பெண்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது திமுக அரசு.

குறிப்பாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி திமுகவுக்கு கேம் சேஞ்சராக மாறியது. திமுக ஆட்சி அமைப்பதற்கு, இது முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், திமுகவுக்கு சவால் விடும் வகையில் ஆட்சியை பிடிக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திமுக பாணியை பின்பற்றி, ஆட்சிக்கு வந்தால் 5,000 ரூபாய் தருவோம் என ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம்.

ஆட்சியை பிடிக்குமா அதிமுக?

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையில், அதற்குள்ளேயே அதிமுக வாக்குறுதி வழங்கி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த தேர்தலில், அதிமுக இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், மக்கள் மத்தியில் அது எடுபடவில்லை.

எனவே, 5,000 ரூபாய் தருவோம். நம்பி ஓட்டு போடுங்கள். அதிமுக நம்மையை செய்யும் என சி.வி. சண்முகம் அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளார். ஆட்சியை பிடிக்கும் முயற்சியாக மெகா கூட்டணி அமைக்கும் பணியில் அதிமுக ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில், கூட்டணியில் தவெகவை இணைக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தவெகவை தவிர்த்து பல்வேறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்து திமுகவை வீழ்த்த அதிமுக வியூகம் அமைத்து வருகிறது.

சமீபத்தில், பாமக கெளரவ தலைவர் ஜி.கே. மணியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.