ARTICLE AD BOX
இனி பெங்களூருவில் டபிள்யூபிஎல்
பெண்களுக்கான டபிள்யூபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியின் 3வது தொடர் கடந்த பிப்.14ம் தேதி தொடங்கியது. இந்த முறை 4 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. லீக் ஆட்டங்களில் முதல் 6 போட்டிகள் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்தன. இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை 8 லீக் போட்டிகள் பெங்களூரில் நடைபெற உள்ளது. இன்று இரவு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணிகள் களம் காண உள்ளன.
முதல் டிவிஷன் ஹாக்கி சென்னையில் நாளை துவக்கம்
சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் முதல் டிவிஷன் ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்கத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு மின் வாரியம், சென்னை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), கன ரக தொழிற்சாலை (எச்விஎல்), சென்னை துறைமுகம் என 33 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் மொத்தம் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் லீக் ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இடம் பிடிக்கும் 6 அணிகளும், ஒட்டுமொத்தமாக 2வது இடம் பிடிக்கும் அணிகளில் சிறந்த 2 அணிகளும் என 8 அணிகள் காலிறுதியில் களம் காணும். காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
தேசிய டேபிள் டென்னிஸ் அத்ரித்-மமதி சாம்பியன்
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. அதில் சிறுவர்களுக்கான யு-11 பிரிவு இறுதி ஆட்டத்தில் அத்ரித் 3-1 என்ற செட்களில் அரஹம் சோர்டியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் சிறுமிகளுக்கான யு-11 பிரிவில் மமதி 3-1 என்ற கணக்கில் உஜ்ஜியனி நியாகியை வென்று சாம்பியன் ஆனார்.
பெங்களூரு ஓபன் டென்னிஸில் ராம்குமார்
சென்னை, மும்பை, டெல்லி ஓபன் டென்னிஸ் போட்டிகளை தொடர்ந்து ஆண்களுக்கான ஏடிபி டூர் பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டி இம்மாதம் 24ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழ்நாடு வீரர் ராம்குமார் ராமநாதன் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் இந்தியா சார்பில் களம் காண இருக்கிறார். இரட்டையர் பிரிவில் வழக்கம் போல் சக இந்திய வீரர் சாகேத் மைனேனியுடன் விளையாட உள்ளார்.
இகாவை வீழ்த்திய மிர்ரா
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதன் முதல் காலிறுதியில் முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனையான போலாந்தின் இகா ஸ்வியாடெக்(23வயது, 2வது ரேங்க்), ரஷ்யாவின் இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா(17வயது, 14வது ரேங்க்) ஆகியார் மோதினர். உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காப், ஜெசிகா பெகுலா(அமெரிக்கா), டாரியா கசட்கினா(ரஷ்யா), பவுளா படோசா(ஸ்பெயின்) என முன்னணி வீராங்கனைகள் பலரும் காலிறுதிக்கு முன்பே வெளியேறியதால், இகா மீது வெற்றிப் பார்வையை ரசிகர்கள் வைத்திருந்தனர். ஆனால் 6-3, 6-3 என நேர் செட்களில் இகாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு மிர்ரா முன்னேறினார். இதன் மூலம் துபாய் ஓபன் அரையிறுதியில் விளையாடப் போகும் இளம் வீராங்கனை என்ற பெருமையை மிர்ரா பெற்றுள்ளார்.
வீனஸ் வில்லியம்சுக்கு வைல்டு கார்டு எண்ட்ரி
அமெரிக்காவின் கலிப்போர்னியாவில் உள்ள இந்தியன் வெல்ஸில் நடக்கும் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி மார்ச் 2ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வைல்டு கார்டு எண்டரியாக 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 44 வயது வீனஸ் வில்லியம்ஸ் பங்கேற்க உள்ளார். இவர் கடைசியாக 2024ம் தேதி மார்ச மாதம் நடந்த மியாமி ஓபனில் பங்கேற்று முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
The post சில்லி பாயிண்ட்ஸ்… appeared first on Dinakaran.