ARTICLE AD BOX
-பவானி ரவி
"அம்மா! அம்மா! இங்கே பாரேன்!" என்று விழிகளை விரித்துக்கொண்டே ஓடி வந்தாள் பாரதி. லட்சம் தடவைக்கு மேல் "இப்படியொரு அதிசயம் எப்படி வாய்த்தது" என்று வியந்தாலும், மீண்டுமொருமுறை வியந்து புன்னகைத்தாள் பத்மினி. பாரதியின் கையில் ஒரு பல்பம் நிறைந்த பர்ஸ். 'அய்யோ எப்படி உன் கையில் கிடைத்தது? ஒண்ணொண்ணா தரணும்னு வெச்சிருந்தேனே' என்று சொல்ல வாயெடுத்தாள், மகளின் தெரிந்த கண்களில் பரவசத்தை அழிக்க மனமில்லாமல், "அடேய்யப்பா எவ்ளோ இருக்கு!" என்று தானும் சேர்ந்து வியந்தாள். மூன்று வயது குட்டி ஜீவன் ஒன்று, இப்படி தன்னுடைய உடல், உள்ளம், உயிருடன் கலந்துவிடும் என்று அவள் நினைக்கவேயில்லை. பத்மினியின் நினைவு பின்னோக்கி ஓடியது.
பாரதி வருவதற்கு முன் வீட்டில் எத்தனை பிரச்னைகள்! ஆளுக்கு ஓர் ஆலோசனை, கொஞ்சம் அசந்தால் அறிவுரைகள்.
"கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம்தானே ஆயிருக்கு? இன்னும் கொஞ்சம் போகட்டுமே.'
''நான் சொன்ன டாக்டரைப் பார்த்தால் நிச்சயம் பலனுண்டு."
"இந்தக் கோயிலில் இந்தப் பிரார்த்தனை செய்து பாரேன்" என்று தொடங்கிய வார்த்தைகள்.
"என்ன இருந்தாலும் நம் ரத்தம்போல வருமா", "யார் எந்த நிலையில் பெத்தாங்களோ!'', ''ஒரு வேளை அதுவும் புத்தி சரியில்லாமல் கெட்டுப் போனால்?" என்று மிரட்டல்களாகவும், கேள்விகளாகவும் விஸ்வரூபம் எடுத்தன.
எல்லாவற்றுக்கும் காரணம் பத்மினி, ''ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாமா?" என்று கேட்டதுதான்! கணவர் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. தடைகள் எல்லாம் உறவினர்களிடமிருந்துதான். மாமியார் மாமனாருக்கு 'உலகம் என்ன சொல்லும், குழந்தை என்ன ஜாதியோ, நாளைக்கு எப்படிக் கல்யாணம் செய்வது' என்றெல்லாம் கவலை வேறு!
நினைத்துப் பார்த்தால் எப்படி இதையெல்லாம் தாண்டி வந்தோம் என்று இன்னும் புரியவில்லை பத்மினிக்கு… எப்படியோ கணவரின் துணையுடன் தன் முடிவில் உறுதியாக நின்று ஜெயித்துவிட்டாள். இப்போது பாரதி செல்லம் வீட்டுக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன. பாட்டி தாத்தாவின் உயிர்நாடி, ஆசிரியர்களின் விருப்பமானச் சுட்டி, உறவினர்களின் செல்லப் பெண் என்றெல்லாம் இடம் பெற்றுவிட்ட பாரதியைப் பார்த்துப் பூரித்துப்போனாள் பத்மினி..
இப்போது இத்தனை எண்ணங்களும் மீண்டும் தொந்தரவு செய்வதற்கு காரணம் இருந்தது. பத்மினி, இப்போது தன் இரண்டாவது, இல்லை முதல் குழந்தையை எதிர்பார்த்திருந்தாள். இத்தனை வருடங்களாக நடக்காமல் இப்போது ஏன் நடக்க வேண்டும் என்ற கேள்வி மனத்தில். இன்னும் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் பாரதியின் நிலைமை என்னவாகும்; எல்லோரது அரவணைப்பும் மாறிவிடுமா என்ற கலக்கம்?
முதன்முதலில் பாரதியைக் கையில் பெற்ற அனுபவத்தை நினைத்துப் பார்த்தாள். அந்தத் தத்தெடுக்கும் விடுதியில், சிரித்த முகத்துடன் ஒரு "அரை மணி நேரம் வேண்டுமானாலும் பெண் அதிகாரி, குழந்தையை வைத்துக்கொள்ளுங்கள். வெளியே வரும்போது குழந்தையைப் பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள். வேறு யாருடைய சொல்லும் குழப்பாமல், உங்கள் இருவரின் தீர்மானமாகவே உங்கள் பதில் இருக்க வேண்டும் என்பதற்கா அந்த விதிமுறை” என்று சொல்லிவிட்டு விடைபெற்றதை நினைத்தாள்.
"பத்மினிக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘எதை வைத்து ஒரு குழந்தையை வேண்டும், வேண்டாம் என்று சொல்வது? நிறமா? அழகா?' அந்தக் குழந்தை அவளையே பார்த்தது. 'என்ன முடிவு?' என்று கேட்பதுபோல் தோன்றியது. திடீரென அந்தக் குழந்தை, பளிச்சென்று சிரித்தது. அந்த நிமிடத்தில் முடிவு தெரிந்தது பத்மினிக்கு. அவர்கள், அந்த குழந்தையைத் தேர்வு செய்யவில்லை. குழந்தை அவர்களைத் தேர்வு செய்துவிட்டது!
"தத்தெடுப்பதன் மூலம் ஒரு குழந்தைக்கு வாழ்வு கொடுப்பீர்கள்” என்று கூறி தேவையில்லாமல் மனத்தைத் தேற்ற முயன்ற உறவினர்களுக்கு, "உங்கத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு குழந்தையை எடுத்து, ஏதோ நீங்க பெரிய நன்மை செஞ்சுட்டதா நெனைக்கிறீங்க!'' என்று கத்த வேண்டும்போல இருந்தது பத்மினிக்கு.
இந்தப் பூமகளை, பாரம் என்று எந்தத் தாயும் நினைக்க மாட்டாள். தாய்மை ஒன்பது வயிற்றில் சுமப்பதில் இல்லை. மனத்தில், கண்ணில் சுமப்பது என்ற உண்மையை உணர்ந்தாள்.
"அம்மா, வா அம்மா!" என்ற குரல் பத்மினியை உலுக்கியது "என்னம்மா, . அழறியா, வலிக்குதா, கீழே விழுந்தியா?" என்று சரமாரியாக அந்தப் பிஞ்சு குழந்தையிடமிருந்து வந்த கேள்விகளுக்கு கண்ணீர் மல்க சிரித்துக்கொண்டே, "இல்லை கண்ணம்மா, கண்ணுல தூசி... போயிடுச்சு" என்று சொல்லி சமாளித்தாள்.
இது என் மகள், என் தெய்வம், என் தாய்... குழந்தை களுக்கே உரிய தீவிரமான அன்பினால், என்னை காக்கிறாள். இவ்வளவு தெளிவான மனமுடைய நானே சிறிது நேரம் குழம்பிவிட்டேனே! நான் உருவாக்கிய குழந்தையில்லை இவள் என்னைத் தாயாக உருவாக்கிய செல்லம் இவள், நானா இவளை பாதுகாக்க வேண்டும் என்று பயந்தேன்? என்று சட்டென உணர்ந்த பத்மினி, தெளிந்த முகத்துடன் எழுந்தாள்.
எங்க வீட்டுல இன்னொரு மழலை வரப்போகுது' என்பதை எல்லோரிடமும் சொல்லி மகிழ விரைந்தாள்.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர், ஏப்ரல் 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்