சிறுகதை; தெலுங்கு கங்கா ஸ்நானம் ஆச்சா...

2 hours ago
ARTICLE AD BOX

-அகிலா கார்த்திகேயன்

"நீலு பாக உந்தி காதா?'' சென்ற பதினைந்து நாட்களாக எங்கள் வீட்டுக்காரர் ராமகிருஷ்ணா ரெட்டிகாரு இந்தக் கேள்வியைக் கேட்டு உயிரை எடுத்துக்கொண்டிருந்தார். நானும் நரசிம்மராவ் ஸ்டைலில் பிடிகொடுத்து பதில் சொல்லாமல் மரத்துப்போன முகத்தோடு,

"அப்படி ஒண்ணும் தெரியலையே" என்று இழுத்துக்கொண்டிருந்தேன். ஆனால், உண்மையில் நீலு பாக உந்தியோ இல்லையோ செப்டம்பர் கடைசி வாரத்திலிருந்து 'பாக'தான் 'ஒச்சிந்து' கொண்டிருந்தது.

ஆனால் ரெட்டிகாருவிடம் 'பாக' என்று சொல்லிவிட்டால் 'கபா'லென்று வாடகையை ஏற்றிவிடுவாரோ என்று பயந்துகொண்டுதான் சொல்லவில்லை. வீட்டிற்குக் குடிவந்த ஆறுமாதத்தில் 'இல்லு பாக உந்தியா' என்றார். எதார்த்தமாக "ஆகா... ஓகோ... பேஷ் பேஷ்" என்றேன். உடனே வாடகையை ஏற்றிவிட்டார். ஒருமுறை டிரைனேஜ் அடைத்துக்கொண்டு ஒரே அவஸ்தையாகப் போய்விட்டது. இவரிடம் முறையிட்டும் பலனில்லாமல் போகவே, கார்ப்பரேஷன்காரர்களை வரவழைத்து நானே செலவு செய்து ஒருவழியாக சீராக்கிக் கொண்டேன். அடுத்த நாள் இதைப் பற்றி விசாரிக்க வந்தவரிடம் என் மனைவி "இப்புடு டிரைனேஜ் பாக உந்தி" என்று விட்டதில் உடனே வாடகை ஏற்றம் கண்டுவிட்டது. அதிலிருந்து வீட்டைப் பற்றி எந்த சமாசாரத்திற்கும் ‘பாகு’ என்று அடைமொழி தருவதை தவிர்த்துக்கொண்டிருந்தேன்.

இந்த முறை நீலு பற்றி வீட்டுக்காரர் விசாரிப்பதில் வேறு ஒரு காரணமும் இருக்கக்கூடும்தான். தமிழ் பூமியில் தெலுங்கு தண்ணீர் வருவது அந்த ஆந்திரக்காரருக்கு பெருமையாகத்தான் இருக்கும். கடந்த இரண்டு வார காலமாக கார்ப்பரேஷனா, கிருஷ்ணாவா என்று இனம்கண்டு கொள்ள முடியாத நிலையில் என் மனைவியே,

"ஆகா கிருஷ்ணா தண்ணீன்னா கிருஷ்ணா தண்ணிதான்... சாதம் என்னமா வெள்ளை வெளேர்னு வெந்திருக்கு பாருங்கோ... துணிக்கெல்லாம் துளி சர்ப் போட்டாலும் அத்தனை நுரை வருது" என்று புளகாங்கிதமடைந்து கொண்டிருந்தாள்.

"உன் வாயை மூடிட்டு பேசாம இரு... வீட்டுக்காரன் காதில் விழுந்து தொலைக்கப்போகிறது” என்று அவளை எச்சரித்தேன். ஆனால் அவள் இன்னொரு தொல்லைக்கு வழிவகுக்க ஆரம்பித்தாள்.

இதையும் படியுங்கள்:
ஹேமமாலினியை ஒரு பாடலுக்கு மட்டும் ஆட வைத்து அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்...
Kalki short story

ஏண்ணா... அப்போ இந்த வருஷம் நம்ம சாந்தியோட தலைதீபாவளியை வைச்சுக்கலாமா" என்றாள். நான் திடுக்கிட்டேன் 'அடிப்பாவி நீ இன்னுமா அதை மறக்காம இருக்கே... பதிமூணு வருஷமாச்சு, என்று மனத்தில் நினைத்தபடி,

"இத்தனை வருஷத்துக்கப்புறம் இது அவசியமா... கல்யாணமானதும் வர்ற முதல் தீபாவளிதான் தலை தீபாவளி... இப்போ நம்ப பொண்ணுக்கு பையன், பொண்ணுன்னு தலைக்கு ஒண்ணு பொறந்தாச்சி... இனிமே என்ன தலைதீபாவளி வேண்டியிருக்கு" என்று முனகினேன்.

"அல்பமா எதையாவது பேசாதீங்க... முறையா முதல் வருஷம் பண்ற தலைதீபாவளிக்கு வந்த மாப்பிள்ளையைத்தான் விரட்டி அனுப்பிட்டீங்க. நம்ப மாப்பிள்ளை ரொம்ப ரோஷக்காரர்... அப்புறம் வர்றதேயில்லே. இந்த வருஷம்தான் தண்ணி கஷ்டமிருக்காதுன்னு நிச்சயமா தெரியறது. இன்னிக்கே லெட்டர் எழுதிடுங்கோ. விசாகப்பட்டினத்திலேர்ந்து வரணும்... ரிசர்வ் பண்ணி வைச்சுக்கட்டும்" என்றாள்.

அதற்குப் பிறகு வாய் திறக்க வழியில்லை. பெண், மாப்பிள்ளை குழந்தைகளை தலைதீபாவளிக்கு அழைத்துக் கடிதம் போட்டேன்.

இதுபோல்தான் 1983-ம் வருஷம் ஒரிஜினல் தலைதீபாவளிக்கு மாப்பிள்ளையை அழைத்துக் கடிதம் போட்டேன். சென்னை வருவதற்கே பயந்தார். அந்த வருடம் 'மே' மாத வெயிலில் சென்னையே வறண்டிருந்த நிலையில் கல்யாணம் வைத்துக்கொண்டது ஆபத்தாகிவிட்டது. ஆந்திராவிலிருந்து ஒரு பஸ் நிறைய வந்திறங்கிய பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு சத்திரத்தில் சரித்திரம் காணாத அனுபவம் ஏற்பட்டது. வேர்த்து விறுவிறுத்து வந்தவர்களை பவர்கட் பாடாய்படுத்த, ரேஷன் முறையில் ஆளுக்கு அரை பக்கெட் தண்ணீர் என்று பகிர்ந்துகொடுத்து குளிக்கச் சொன்னபோது, கோங்கூரா சட்னியைவிட அதிகமாக அவர்களுக்கு எரிச்சல் உண்டாகிவிட்டது. அத்தனை தண்ணீர் கஷ்டம். கல்யாணத்தன்று குளிக்காமல் கொள்ளாமல், தாலி கட்டிய கழுத்தோடு தலைதெறிக்க ஓடியவர்கள்தான்.

அதே பயத்தில் தலைதீபாவளிக்கு வந்த மாப்பிள்ளையை நட்டநடுநிசியில் நான் எழுப்பி,

"மாப்ளே... தண்ணி லாரி வந்திருக்கு. நாளை மறுநாள் தீபாவளி... லாரியை விட்டுட்டா கங்கா ஸ்நானம் பண்றது கஷ்டம்" என்று இரண்டு பிளாஸ்டிக் குடத்தைக் கையில் திணித்து, என்னுடன் தெருக்கோடி வரை இருட்டில் இழுத்துக்கொண்டு சென்றதில் மிகவும் கடுப்பாகி விட்டார்.

"இனிமே எப்ப தண்ணி கஷ்டம் தீருமோ அப்பதான் மெட்ராஸ் பக்கம் தலைவெச்சிப் படுப்பேன்" என்று தீபாவளிக்கு முதல் நாளே என் பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றவர்தான்.

ஏதோ அதே வருடம் அடிக்கல் நாட்டப்பட்டு தெலுங்கு கங்கை அடி அடியாக நானூறு கிலோ மீட்டருக்கு நகர்ந்து இப்பொழு சென்னை வந்தாயிற்று.

மாப்பிள்ளைக்கும் தைரியமாக தீபாவளி அழைப்பு விட்டாயிற்று.

ந்துகொண்டிருப்பது கிருஷ்ணாதான் என்ற நம்பிக்கையில் ஆந்திரமணம் கமழ குளித்து, துவைத்து, சமைத்துக் கொண்டிருந்த குதூகலத்தில் இப்படி உடைப்பு ஏற்படுமென்று எதிர்பார்க்கவில்லை.

பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டு வரும் கிருஷ்ணாவிற்கு, புகுந்து வீட்டிற்கு வரத் தயங்குவதுபோல, நடுவில் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு, பீறிட்டு வெளியே ஓடிவிட்டதாகப் பத்திரிகையில் தகவல் வந்தது. சந்திரபாபுநாயுடு தாரை வார்த்த தண்ணீர் கிருஷ்ணா அல்ல வருணா என்று செய்தி சொன்னது. ஆந்திரா எல்லையில் சேகரமான மழைநீர்தான் மதகினைத் திறந்தபோது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மாயகிருஷ்ணாவாக பாய்ந்திருக்க வேண்டுமென்று செய்திகள் கூறின.

"அதுதானே பார்த்தேன்... பதினாலு ரூபாய் கொடுத்து வாங்கின அரிசி இப்படி ஏமாத்திடுத்தேன்னு..." என்று என் மனைவி பிளேட்டை திருப்பிப் பேச ஆரம்பித்தாள். வந்து கொண்டிருப்பது கங்கையல்ல கார்ப்பரேஷன்தான் என்றவுடன் எனக்கு கபரா அதிகமாகிவிட்டது. ஆந்திராவில் உடைப்பு ஏற்பட்ட இடத்தைச் சீர்செய்யவே பலநாள் ஆகுமென்ற நிலையில் 'கிருஷ்ணா நீ பேகனேபாரோ' என்று அழைத்துப் புண்ணியமில்லை. இந்த அழகில் மாப்பிள்ளையை வேகமாக வரச் சொல்லிக் கடிதம் போட்டாயிற்று. கார்ப்பரேஷனை நம்பி கங்காஸ்நானம் செய்ய முடியுமா...

கவலை பிடித்துக்கொள்ளவே பொதுப்பணித்துறை மந்திரி கணக்காக கவலையுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று "கிருஷ்ணா எப்ப வரும்... கிருஷ்ணா எப்ப வரும்" என்று கேட்க ஆரம்பித்து விட்டேன்.

"என்ன ஸார் உங்க தொந்திரவு தாங்க முடியலையே என்னவோ கிருஷ்ணாவிலே பிறந்து கிருஷ்ணாவிலே குளிச்ச மாதிரியில்லே தொலைச்சி எடுக்கறீங்க... கார்ப்பரேஷன் வாட்டர் வருது இல்லே... உங்க மேனி எழிலுக்கு அது பத்தாதாக்கும்" என்று அவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டேன்.

வாஸ்தவம்தான். அவர்கள் சொல்வதுபோல கார்ப்பரேஷன் தண்ணீர் ஒழுங்காகத்தான் வந்துகொண்டிருந்தது. புருஷனை விட்டு அரசனுக்கு ஏன் அலைய வேண்டும்... சமாதானமானேன்.

மாப்பிள்ளையும் பெண்ணும் குழந்தைகளோடு வந்தாயிற்று. விடிந்தால் தீபாவளி. அவரிடம் கிருஷ்ணா பற்றிய உண்மையைக் கூறவில்லை.

இதையும் படியுங்கள்:
கவிதை: நிழல் விடுத்து நிஜத்திற்கு...
Kalki short story

"மாப்ளே...நீங்க ரொம்ப வைராக்யமான பேர்வழி... அது என்ன தெலுங்கு கங்கை வந்தாத்தான் தலைதீபாவளின்னு வீம்பா இருந்துட்டீங்க. உங்க ராசி பாருங்க குழாயைத் திறந்தா கங்கை வந்து விழறா மாதிரி இந்த வருஷம் அமைஞ்சி போச்சு... நாளைக்கு 'தெலுங்கு கங்கா ஸ்நானம்'தான்" என்றேன்.

மாப்பிள்ளை முகத்தில் புஸ்வாணம் பிரகாசித்தது.

விடிந்தது. மழை... பேய் மழையாகக் கொட்டிக்கொண்டிருந்தது.

 "முதல்ல மாப்பிள்ளையை உட்கார வைச்சி தலையிலே எண்ணெயை வையுங்கோ" என்றாள் என் மனைவி. சொத சொதவென்று எண்ணெய் உடம்போடு மாப்பிள்ளை குளியலறை சென்றார்.

"வெந்நீர் வேண்டாம்.. பச்சைத் தண்ணியே போதும்னு அடம் பிடிக்கறீங்க... பரவாயில்லே. பைப்பை திறங்க. தெலுங்கு கங்கை கொட்டும்.." என்று நான் பாத்ரூமிற்கு வெளியே சப்தம் போட,

"ஐயையோ... ஒரே நாத்தம் சகிக்கலே" என்றபடி டவலை சுத்திக்கொண்டு மாப்பிள்ளை அலறியபடி வெளியே வந்தார்.

"என்ன, நாத்தமா... இவ பண்ணின தீபாவளி பட்சணம் எதையாவது பாத்ரூமில எலி கொண்டு போட்டிருக்கும்" என்று அசடுவழிந்தேன்.

"தெலுங்கு கங்கையா இது... ஒரே சாக்கடை நாத்தமா வருது... ஐயையோ நான் எப்படி குளிப்பேன்னு தெரியலையே" என்று மாப்பிள்ளை மிரண்டார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"தண்ணி நேத்து வரை நல்லாத்தானே வந்துண்டிருந்தது" என்றபடி குளியலறை குழாயைத் திறந்து தண்ணீரை மூக்கின் அருகில் கொண்டு போனேன்.

ஆகா.. சாக்கடை நாற்றம்தான்.

கொட்டுகிற மழையில் எங்கேயோ குழாய்கள் உடைந்து கார்ப்பரேஷன் வாட்டரும். கழிவுநீரும் சங்கமமாகி விட்டிருக்கின்றன. எப்போதாவது இப்படி நடப்பது வழக்கம்தான். அது தீபாவளி அன்றா நடக்க வேண்டும்'

'தெலுங்கு கங்கா ஸ்நானம் போச்சா

சென்னை கூவம் ஸ்நானம் ஆச்சா" என்று ஆந்திரா மாப்பிள்ளையைக் கேட்க வேண்டும் போலிருந்தது.

"மாப்பிள்ளை கொடுக்க பாக உன்னாரா" என்று சமயம் புரியாமல் விசாரிக்க வந்த வீட்டுக்காரரை,

"லே...து" என்று உரக்கக் கத்தி, எண்ணெய் உடம்போடு நின்ற மாப்பிள்ளையின் குரல் விரட்டியது.

பாவம் அவருக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்: என்ன செய்வது.

பின்குறிப்பு:-

கல்கி 10.11.1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Read Entire Article