கரூர்: `காலை முதல் இரவு வரை!' - செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற 12 மணி நேர சோதனை

3 hours ago
ARTICLE AD BOX

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில், அமைச்சருக்கு நெருங்கிய நண்பர்களான கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணியின் ராயனூர் வீடு, கரூர் பழனியப்பா நகரில் வசிக்கும் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் வீடு, சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவரது கோதை நகர் வீடு ஆகிய மூன்று இடங்களில், கேரளாவைச் சேர்ந்த 20 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பிரிவுகளாக பிரிந்து, இன்று காலை 8 மணி முதல் சோதனையை நடத்தினர்.

கடந்த 2023 - ம் ஆண்டு மே மதம் 26 - ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரத்தில் சோதனை செய்ய முற்பட்டபோது, அங்கு தி.மு.க-வைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் வருமானவரித் துறை அதிகாரிகளின் காரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களில் சிலர் சோதனை செய்ய வந்த பெண் அதிகாரியைத் தாக்கியதாக, வருமானவரித் துறை அதிகாரிகள் சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டனர்.

raid

இதற்கிடையில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக்கொண்டு தங்களை ஏமாற்றியதாக பாதிக்கபட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு அவருக்கு ஜாமின் கிடைத்த நிலையில், மறுபடியும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவருக்கு நெருக்கமானவர்கள் மூன்று பேரின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு ஆர்.சி,எஃப் துணை ராணுவப்படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அமலாக்கத்துறையினர் இன்று காலை தொடங்கி இரவு 8.30 மணி வரை என்று மொத்தம் 12 மணி நேரம் சோதனை மேற்கொண்டதில், பல ஆவணங்களைக் கைப்பற்றி எடுத்துச்சென்றதாகத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவுசெய்த, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி செய்த வழக்கு, அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு என இரண்டு வழக்குகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை சென்று, 471 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் தமிழக அமைச்சரவையில், ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகிய துறைகளுக்கான அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், மறுபடியும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருப்பது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பை கலங்க வைத்துள்ளது.

Read Entire Article