ARTICLE AD BOX
-பாரதி பாஸ்கர்
பெரியவர் நடேசன் காந்தி மண்டபத்தில் நுழையும்போதே அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டார். நாலைந்து நாட்களாகவே தினமும் பார்த்து வருகிறார். அவனுக்கு இருபது வயதுக்கு மேல் இருக்காது. பருக்கள் நிரம்பிய முகம், சிகரெட் பிடித்துக் கறுத்துப்போன உதடுகள், கட்டம் போட்ட கர்சீப்பை எடுத்து அடிக்கடி வியர்வையைத் துடைத்துக்கொண்டிருந்தான்.
அனாவசியமாக அவள் மேல் கை போட்டுக் கொண்டிருந்தான் - அவள் மேல் அவனுக்கிருந்த உரிமையை நாலு பேர் பார்க்கட்டுமே என்பதுபோல். அவள் சின்னப் பூப்போல இருந்தாள். ரோஸ் தாவணியும், வெள்ளைச் சட்டையும் செங்கல் நிற பள்ளிச் சீருடையுமாக. அழகான மருண்ட கண்கள். ஏராளமான முடி. கோவிலில் வைத்து 'பாலா' என்று சொல்லி பிரதிஷ்டை செய்யலாம் போல்.
இதுபோன்ற ஜோடிகளைப் பார்ப்பது ஒன்றும் நடேசனுக்குப் புதிதில்லை. முதன்முதலில் இங்கே வர ஆரம்பித்தபோது இதைப் பார்த்துக் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்.
காந்தி மண்டபத்தில் புதர் தவறாமல் உட்கார்ந்திருந்த ஜோடிகள் எல்லாம் சின்னஞ்சிறு பெண்களும் விடலைப் பையன்களும். இதுகள் முத்தம் பரிமாறிக்கொள்வதும் தொட்டுக்கொள்வதும் இன்னமும் உள்ளே புதர் மண்டிய இடங்களுக்குப் போய் மறைவாக இருக்க நோட்டுக்கள் கைமாறுவதும், மண்டபத்தின் உள்ளேயே வந்து, 'நல்ல வசதி சார். டீசென்ட் ப்ளேஸ். ரெய்ட் தொந்தரவே கிடையாது. வீடு மாதிரி சார்' என்று விற்கும் லாட்ஜ் தரகர்களும்... எல்லாம் அவருக்குப் பழகிவிட்டது. இந்த நாட்டுக்கே சாபக்கேடு என்று அவர் நினைப்பார்.
கண்டும் காணாததுமாய் போகும் கலையை அவரும் இப்போதெல்லாம் பயின்றுவிட்டபோதிலும் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் அவர் மனசெல்லாம் பதறுகிறது. வீட்டில் இருக்கும் பேத்தி சாருவின் நினைவு வருகிறது.
அவளைவிட இதற்கு மூன்று அல்லது நாலு வயசு அதிகமாயிருக்கலாம். பள்ளிக்குப் போகாமல் ஆனால் வீட்டில் பள்ளிக்குப் போவதாய்ச் சொல்லிவிட்டு வந்திருக்கிறாள். நினைக்க நினைக்க அவருக்குக் கோபம் தலைக்கேறி விடுவிடென்று அவர்கள் பக்கத்தில் போனார்.
"என்னப்பா இது? பப்ளிக் பிளேசில விரசம்? ஏய் பொண்ணு, ஸ்கூலுக்குப் போகாம இங்க என்ன பண்ணறே?" என்றார் அதட்டலாக கேட்டவுடன் இருவரும் கூசித் தவிப்பார்கள். நல்லபடியாக புத்தி சொல்லி அனுப்ப வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்த அவரின் எண்ணத்தில் மண் விழுவதுபோல் அந்தப் பையன் ஆக்ரோஷமாக எழுந்து, ''ஏய் பெரிசு, வீட்ல சொல்லிட்டு வந்திட்டியா? உன் வேலையைப் பார்த்துகிட்டு போகலைன்னா வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும்!" என்றான். குரலில் நூறு சதம் அவமரியாதை, அலட்சியம், வெறுப்பு, யாருக்கும் அஞ்சாத தடித்தனம் தெரிந்தது. பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த இரண்டு மூன்று ஜோடிகள் சிரிக்க, அவமானத்தால் மனம் நொந்து திரும்பினார் நடேசன்.
"நாம பொண்ணுங்ககூட இருந்தா, நம்ப வயசுப் பசங்களைவிட இந்தக் கிழங்களுக்குத்தான்யா ரொம்பப் பொறாமை" என்று பின்னால் குரல் கேட்டது. கனத்த மனத்துடன் வீடு பார்க்க நடந்தார்.
அவருக்கு திடீரென்று தன் பேத்தியை "சினிமாவுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நினைவுக்கு வந்தது. பிரபல நட்சத்திரம் நடித்த படம். சாரு முதல்நாளே போய்த்தீர வேண்டும் என்றாள்.
மகன் அரவிந்தனின் ஆடிட்டர், சினிமா நட்சத்திரத்திற்கும் ஆடிட்டராய் இருந்ததால் எளிதில் டிக்கெட் கிடைத்தது. துணைக்கு யாருமில்லை என்பதால் அவரே புறப்பட்டார். கூட்டம் நெரியும் என்று அவர் எதிர்பார்த்திருந்தாலும், முதல் காட்சியில் நட்சத்திரம் தோன்றியவுடன் கையில் கற்பூரத்துடன் ஆரத்தி காட்டிய வெறிக்கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய்விட்டார். இன்டெர்வெல்லில் தலைவலி என்று காப்பி சாப்பிட பேத்தியோடு வெளியே வந்தபோதுதான் அது நடந்தது.
இவர் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே படத்தின் ஹீரோ, கதாநாயகியை அடிக்கடி செய்வதுபோல், சாருவின் பின்பக்கத்தில் தட்டினான், டிக்கெட் வாங்கும் முயற்சியில் சட்டை கிழிந்திருந்த ஒரு இளைஞன். தாத்தாவிடம் சொல்லக்கூட கூசியபடி அவமானத்தினாலும் கோபத்தினாலும் முகம் சிவக்க. கண்ணில் வழியும் நீரை அடக்கப் போராடினாள் பேத்தி. ரவுடித்தனத்தை அகலத் திரையில் பயிற்றுவிக்கிற ஹீரோக்கள்... அவர் நெஞ்சு எரிந்தது.
அன்றுபோலவே இப்போதும் அவருக்கு நெஞ்சு எரிகிறது. அவர்கள் இருவரின் கிட்டத்தில் சில வினாடிகள் நின்று பேசியபோது, அந்தப் பெண்ணின் நோட்டைப் பார்த்தாரே, அதை ஞாபகப்படுத்திக்கொண்டார். வி.வனிதா, பதினோராம் வகுப்பு, புஷ்பம் பள்ளி..
நகரின் இன்னொரு கோடியில் புறநகர்ப் பகுதியில் இருந்தது அந்தப் பள்ளி. அதனால்தானே இத்தனை தூரம் தாண்டி இங்கே தள்ளிக்கொண்டு வந்திருக்கிறான், அந்தப் பையன்? பள்ளியில் அதே சீருடையில் இருந்த ஒரு பெண்கள் கூட்டத்தை அணுகி, "வி. வனிதா, பதினோராம் வகுப்பு, சிகப்பா, ஒல்லியா இருப்பாளே, அந்தப் பொண்ணு வீடு யாருக்காவது தெரியுமாம்மா? நான் உறவு. விலாசம் தொலைச்சிட்டேன்" என்றார்.
அவர்கள் ஏழெட்டுப் பேரை கலந்து பேசி, வீட்டு அடையாளம் சொன்னார்கள். போய்க் கதவைத் தட்டும்போதுகூட நடேசனுக்கு ரொம்ப பயமாக இருந்தது. ஏதாவது அவமானப்பட்டு வீட்டுக்கு விஷயம் தெரிந்தால்... அரவிந்த் எப்படிக் கத்துவான்? மருமகள் இளக்காரமாகச் சிரித்து 'இப்படிக்கூட செய்வார்களா? எங்க ஃபேமிலியில் இப்படி எல்லாம் நடக்காதுப்பா' என்பாளே என்றெல்லாம் யோசித்தார். எதற்கு இந்த விலாசத்தைத் தேடிப் பிடித்தார்? என்ன செய்யப் போகிறார்? வனிதாவை அடித்து கிடித்து, ரசாபாசம் ஆகிவிட்டால்... யோசனை முடிவதற்குள் கதவு திறந்தது.
திறந்தது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. தோற்றத்தில் வறுமையும் முகத்தில் அனுபவமும் தெரிந்தது. கூப்பிய கைகளுடன் நடேசன் பேசினார்.
"இந்த வீட்டுப் பொண்ணு வனிதா...."
"ஆமா என் பொண்ணுதான், ஏதாவது ஆக்ஸிடென்டா?" அவள் பதறினாள்.
"இல்லேம்மா. இல்லை. உங்க பொண்ணைப் பத்தி நான் கொஞ்சம் பேசணும்..."
கதவைத் திறக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கம் அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்தது.
"அடையாறு பக்கத்தில இருந்து ஒண்ணரை மணி நேரம் பயணம் பண்ணி கஷ்டப்பட்டு வந்திருக்கேன். என்னை நீங்க நம்பலாம்" என்றார்.
"அதெல்லாம் இல்லை உள்ளே வாங்க" என்று கதவைத் திறந்தாள். வீட்டில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு தம்ளர் நீர் அருந்திவிட்டு எல்லாம் சொன்னார்.
"மனசு கேக்கலம்மா எனக்கு. கிட்டத்தட்ட என் பேத்தி வயசுதான் நம்ப பொண்ணுக்கு! அந்தப் பையன் முகமே சரியில்லைம்மா. வெறும் பொறுக்கி. வனிதாவுக்கு ரெண்டுங்கெட்டான் வயசு. இப்ப வர்ற பாட்டும் சினிமாவும் நல்லாவா இருக்கு? பொம்பளங்களை கலாட்டா செய்யற பொறுக்கிதான் பாதி படத்தில ஹீரோவா வரான். நம்ப பொண்ணு இந்த வயசிலே சென்சிடிவ்வா இருப்பா. அவன் ரெண்டு வார்த்தை சொன்னவுடனேயே சொக்கிப் போயிருப்பா. நாமதா மெள்ளப் பேசி அவ மனசை மாத்தணும்."
"அடிப்பாவி. பணம்தான் இல்லை. மானமாச்சும் மிஞ்சிச்சுன்னு நினைச்சேனே" என்று அலறத் தொடங்கிய வனிதாவின் தாயை 'உஷ்' என்று அடக்கினார் நடேசன்.
"இதப் பாருங்கம்மா, இங்க வந்து செய்தியைச் சொல்றதுக்கே நான் ரொம்ப யோசிச்சேன். வீட்ல மொரட்டு ஆண் பிள்ளைகள் இருந்து,கலாட்டா செய்து விஷயத்தைப் பெரிசாக்கி,நாலு பேருக்குத் தெரிஞ்சு பெரிய ரசாபாசம் ஆயிடுமோன்னு. நல்லவேலை நீங்க இருந்தீங்க. பொறுப்பா செய்யுங்க."
வனிதாவின் தாய் கொஞ்சம் யோசித்தாள்.
"வெளியிலே தெரிஞ்சா வனிதாவுக்கு ஸ்கூல்ல டீ.சி. கொடுத்திடுவாங்க. எல்லாமே கெட்டுரும். போன வருஷம் இவர் திடீர்னு இறந்திட்டாருங்க. வனிதாவுக்கு மேலே ஒரு அக்கா. கீழே இரண்டு தம்பிங்க. பெரிய பொண்ணை ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு அனுப்பறேன். மாமனார் கொஞ்சம் பணஉதவி செய்யறார். பத்தாம, வீட்ல மெஷின் போட்டிருக்கேன். ராணி மாதிரி இருந்தோமே, நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சேன்னு நான் புலம்பிக்கிட்டு இருந்ததிலே, வனிதா பாதை மாறிப்போறதை கவனிக்கலை. இப்ப நீங்க சொன்னதும் கவனம் வருது. இரண்டு மாசமாவே ரொம்ப அலங்காரம். புதுத் துணி வேணும்னு நச்சரிப்பு. நேரம் கழிச்சு வீட்டுக்கு வரது எல்லாம் நடக்குது. ஆனா வனிதா, வீட்டுக் கஷ்டம் தெரிஞ்ச பொண்ணு. நான் அழுது பேசி சரிசெய்யறேன். சொல்லாம கொள்ளாம வீட்டை மாத்தறேன். வனிதாவோ அப்பா வேலை செஞ்ச நிர்வாகமே தாம்பரத்திலே ஒரு ஸ்கூல் நடத்தறாங்க. இந்த வருஷம் இப்பத்தான் தொடங்கியிருக்கு. அவங்க கால்ல விழுந்தாவது பிள்ளைங்களை அங்க சேத்திடறேன்."
''வரேம்மா" என்று கிளம்பியவர், வனிதாவின் தாய் கால்களில் விழவும், பதறிப்போனார்.'என்னம்மா இது? விடும்மா' என்றார்.
"எனக்கென்னான்னு நீங்க பாட்டுக்குப் போயிருந்தா ஆண்துணை இல்லாத குடும்பமே நசிஞ்சு போயிருக்கும். ரொம்ப நன்றிங்க."
அந்தப் பையன் தொடர்ந்து நாலைந்து நாள் தினமும் காந்தி மண்டபம் வந்து காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்புவது நடந்தது. வனிதாவின் தாய் ஃபோன் செய்தாள். சுருக்கமாய், "எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சுது ஐயா. முள்ளில் விழுந்த எங்க வீட்டு சேலையை சேதமில்லாமல் எடுத்தாச்சு" என்றாள். தாம்பரம் வீட்டின் முகவரி கொடுத்தாள்.
அன்று அவர் காந்தி மண்டபத்திலிருந்து வீட்டைப் பார்க்க நடக்க ஆரம்பிக்கையில் பின்னால் குரல்கள் கேட்டன.
“இதே பார்ட்டிதாண்ட சேகர்! இதுவா உங்களாண்டை வந்து ரப்சர் பண்ணிச்சுன்னு சொல்றே? இதேதான் அன்னிக்கு வனிதா வீட்லேர்ந்து வெளியே வந்திச்சு. நான் பார்த்தேனே. இதுதான் ஏதோ சில்மிஷம் செஞ்சு அவங்களோட அம்மாவை உஷார் பண்ணியிருக்கு. இப்ப அவங்க எங்க போனாங்கன்னே தெரியலை."
"நல்லா மசிஞ்சு வந்தாடா. கெடுத்தான் கிழவன். விடக்கூடாது."
'டேய்' என்ற சேகரின் வெறிக் கூச்சலைக் கேட்டபடியே நடேசன் ஓடத்துவங்கியும், வெகு சீக்கிரம் மாட்டிக்கொண்டார்.
கீழே விழுந்தபோது மண்டை மோதிய சத்தம் அவருக்கே கேட்டது. ஆளரவமற்ற பாதையில் அரை மயக்கத்தில் கிடந்தார்.
விழித்தபோது இன்னும் தெருவில் கிடப்பதை உணர்ந்தார். பின்மண்டை பயங்கரமாக வலித்தது. எத்தனை வெறி? எத்தனை ஆக்ரோஷம்? எத்தனை வன்மம்? இந்தத் தலைமுறைக்கு ஏன் சரியான வழிகாட்டும் நபர்கள் அமையாமல் போய்விட்டார்கள்?
சேகரின் செயலில் அவருக்கு வருத்தமில்லை. இப்படியொரு பொறுக்கியாக அவன் மாற யார் அல்லது எது காரணம்? யோசிக்க ஆரம்பித்தார்.
நடேசனுக்கு சேகர் மற்றும் தியேட்டரில் அவர் பேத்தியின் மேல் இடித்தவன் போன்றோர்களின் மீது ரொம்பப் பரிதாபமாக இருந்தது. அடி வாங்கினபோதுகூட வராத கண்ணீர் இப்போது வர, மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
பின்குறிப்பு:-
கல்கி 25 ஆகஸ்ட் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்