சிறுகதை: தடுமாற்றம்

3 hours ago
ARTICLE AD BOX

-கிருஷ்ணா

தோ ஒரு வேன் வருகிறது. டீலக்ஸ் டைப் போலத் தெரிகிறதே. மடக்கி விட வேண்டியதுதான்.

கான்ஸ்டபிள் துரை சுறுசுறுப்பானார். நடுரோட்டுக்கு வந்து கையை நீட்டினார்.

இவரது காக்கி பேன்ட்டையும், வெள்ளைச் சட்டையையும் டிரைவர் கவனித்துவிட்டான் என்பது வண்டியின் வேகம் குறைந்ததிலிருந்து தெரிந்தது.

இடது பக்கம் ஓரம் கட்டச் சொன்னார் வேனை.

வேனின் கண்ணாடியில் பட்ட வெய்யில், இவர் முகத்தில் ஒளிச்சிதறல்களைப் பரப்ப,

முகத்தைத் திருப்பிக்கொண்டார் துரை. வேனின் உள்ளே நோட்டமிட்டார். டவுன் பஸ் கும்பல் தெரிந்தது.

"எத்தனை பேரு உள்ளே?"

டிரைவர் நெளிந்தபடி பின்பக்கம் உள்ளே திரும்பிப் பார்த்தான்.

உள்ளே அமர்ந்திருந்த பெண்மணிகளின் தடித்த உடம்பில், தங்கச் சங்கிலிகளும், நெக்லசும் மின்னின.

எவனாவது வழிப்பறி கொள்ளைக்காரன் கையில் இவர்கள் மாட்டாமல் போய்ச் சேரவேண்டும்!

வேன் கதவைத் திறந்தபடி பட்டு வேட்டி, சட்டையில் ஒரு ஆள் இறங்கி வந்தார்.

'அம்பதாவது தேறுமா? நாமே கேட்பதா, இல்லை, அவர் கொடுப்பதை வாங்கிக்கொள்வதா?"

கான்ஸ்டபிள் துரையின் மனசுக்குள் தடுமாற்றம்.

''அண்ணே வணக்கம்."

இவருக்கு நான் அண்ணனா?

''புதுக்கோட்டை ஏரியா நம்மளுது."

பையிலிருந்து அடையாள கார்டை எடுத்து நீட்டினார் அந்த வேன் நபர்.

துரையின் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது. ஒரே டிபார்ட்மெண்ட், ப்ச்!

"நீங்க கிளம்புங்க. டிரைவர் பார்த்து, சீக்கிரமா ஊர் போய்ச் சேருங்க."

அந்தப் பெண்களின் உடம்பில் அணிந்திருந்த நகைகளைப் பார்த்தவாறே எச்சரித்தார்.

இவர்களுக்கு மட்டும் காசு, மரத்தில் காய்க்கிறதா?

புர், புர் என இருமுறை உறுமிவிட்டு வேன் புறப்பட்டது.

மதியம் மூன்று மணி வெயில் மண்டையைப் பிளந்தது. சாலையின் இருபக்கமும் பார்த்தார். எந்த வாகனத்தையும் காணோம்.

பெருமூச்சு விட்டபடி மரநிழலில் ஒதுங்கினார்.

'நாம உப்பு விக்கப் போனா, மழை வர்ற அதிர்ஷ்டம்தான்.'

சத்தமாய் முணுமுணுத்தபடி, கூழாங்கற்களை பூட்ஸ் காலால் உதைத்தார்.

"ஆபரேஷன் செஞ்சுதான் குழந்தையை வெளியே எடுக்கணும். உங்க மனைவி ரத்த குரூப் ரேர் குருப். யாராவது ஆள் கிடைக்குமான்னு பாருங்க."

காலையில் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது டாக்டர் சொல்லிவிட்டார்.

மேடிட்ட வயிறுடன் கட்டிலில் படுத்திருக்கும் மனைவியை நோக்கினார் துரை.

''ஆள் கிடைக்கலேன்னா ப்ளட் பாங்க்கிலேதான் வாங்கணும்."

செலவுத் தொகை பயமுறுத்தியது.

அரசாங்க ஆஸ்பத்திரிதான். போலீஸ் உத்யோகம் வேறு கைகொடுத்ததில், வசந்திக்கு நல்ல கவனிப்புதான்.

இருந்தாலும், செலவுக்குப் பணம் புரட்ட முடியாமல் திணறினார் துரை.

"இந்த மருந்தெல்லாம் ஆஸ்பத்திரியிலே கிடையாது. வாங்கிக் கொடுத்தீங்கன்னா நல்லது."

இதையும் படியுங்கள்:
சாலையில் மேயும் செல்ல மாடுகள் - ஐயோ பாவம்! யார்... மாடுகளா? மக்களா?
Short Story in Tamil

திடீரென முளைத்த மாத்திரை இன்ஜெக்ஷன், பில்லே அறுநூறு ரூபாயை சாப்பிட்டுவிட்டது இதுவரை.

இப்போது இரத்தம் வாங்க தனியாகப் பணம் செலவாகும் போலுள்ளது.

அலைந்து பார்த்தும் ஆள் கிடைக்கவில்லை. ஒருத்தன் ஊரிலில்லை. இன்னொருவன் ரத்த தானம் கொடுத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆகமொத்தம் ஏமாற்றம்தான் மிஞ்சியது. .

போன மாசம்தான் அம்மாவின் கைமுறிவுக்கு வைத்திய செலவு என்று தண்ணீரில் போட்ட உப்பாய் பணம் கரைந்தது. பாத்ரூம் போகும்போது விழுந்து விட்டார்கள். வயசாகி விட்டது. தடுமாற்றம் இருக்கும்தான்.

தடுமாற்றம்!

துரை ஒரு விநாடி குறுகுறுப்பாய் நின்றார்.

இதுவரை கைநீட்டி யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை.

லாரி, வேன்களை சாலையில் மடக்கி, டாகுமென்டுகளை சரிபார்க்கும்போது, இதுவரை யாரிடமும் கேட்டதில்லை, ஒரு பைசா!

இன்று, சற்று முன்தான் முடிவு செய்து விட்டார்.

மகானாய் இருந்து யாருக்குப் பிரயோஜனம்.

'துரையா, அவன் பைத்தியமாச்சே.'

டிபார்ட்மென்டில் அவன் சகாக்களின் கேலி இன்றோடு முடியட்டும்.

அதோ ஒரு லாரி வருகிறதே! அதன் முகப்பு சிரித்தபடி இருக்கிறது.

ஒவ்வொரு லாரியின் முன்புறத்தையும் கவனித்தால், வேடிக்கையாயிருக்கும்.

சிலது அழும், சிலது சிரிக்கும், அந்தச் சிரிப்பிலும் வகையுண்டு கம்பீரச் சிரிப்பு, கோமாளிச் சிரிப்பு, வெகுளியான சிரிப்பு... இது கம்பீர சிரிப்புடன் வரும் லாரி!

"என்னண்ணே, நம்ம ஐயாவோட லாரி. வரட்டுமா?"

ஒரு செகண்ட் நிறுத்தி, பறந்துவிட்டான் டிரைவர்.

இந்த ஊர் எம்.எல்.ஏவுக்குச் சொந்தமான லாரி. நிறுத்தவும் முடியாது, உள்ளே உள்ள சரக்கை பரிசோதிக்கவும் முடியாது.

ப்ச், போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் உத்யோகங்கறது சரியாய்த்தான் இருக்கிறது.

எல்லா போலீஸ்காரனுக்குமா இப்படி? அந்த நாகராஜ் புல்லட்டில் பறக்கிறான். கழுத்தில் மைனர் செயின். நாலு ஆட்டோ ஓடுகிறது டவுனில் அவனுக்கு.

தன்னைப் போன்ற நாணயமான ஆட்களுக்குத்தான் இந்தப் பழமொழி பொருந்தும்.

வெயில், மழையிலேயே நிற்கும் தங்களுக்கு சம்பளத்தையாவது கூட்டிக் கொடுக்கலாம்.

எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள்தானோ? வாங்கிய கடனே,விழி பிதுங்குகிறது. இனி கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள்!

ஆஸ்பத்திரி செலவுக்குத்தானே? லஞ்சம் வாங்கினால் என்ன தப்பு?

இதுவே தொடருமா? சேச்சே, இந்த ஒரு முறை மட்டும்தான்! நிறுத்த முடியுமா, ஒரு முறை வாங்கிப் பழகியபின்?

அதோ லாரி ஒன்று வருகிறதே! நிறுத்து, நிறுத்து, இதிலாவது அம்பது, நூறு கிடைக்குமா?

இவரின் சைகைக்கு லாரி தலை வணங்கி ஓரமாய் நின்றது.

"வணக்கம் சார், சௌக்யமா?"

அட, இவனை நிறைய முறை இந்த ரூட்டில் பார்த்திருக்கிறோமே! எல்லா டாகுமெண்டும் சுத்தமாய் வைத்திருப்பான். லாரி டிரைவராய் ஓட ஆரம்பித்து, இப்போது ஒரு லாரிக்கு அதிபதியான பின்னும், டிரைவராய் தொடர்கிறான்.

"வாங்க பரமு, பிசினஸ் ஓடுதா?"

வறண்ட காவிரி போல ஆனது துரையின் உள்ளம். ஒப்புக்கு, அவனுடன் பேசினார்'.

இவனிடம் காசு கேட்கலாமா? அதிலென்ன தப்பு. மற்ற போலீஸ்காரர்களாயிருந்தால், தரமாட்டானா? ஓடும் வண்டியில் ஏதாவது ஒரு 'மிஸ்டேக்' கண்டு பிடிக்க முடியும். அது டிரைவர்களுக்கும் தெரியும். அதனால்தான் லஞ்சம் கொடுக்கிறார்கள்.

"அண்ணே..." என்று இழுத்தான் கிளினர் பையன்.

"டேய், டேய், உள்ளே வைடா. சார் பார்த்தா கோவிச்சுக்கப் போறார்."

பரமு, இவரைப் பார்த்துச் சிரித்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உள்ளீடுகள்..!
Short Story in Tamil

"பையிலே தயாராய் பணத்தை எடுத்து வைச்சுக்க. ஆளைப் பொறுத்து பத்தோ, அம்பதோ கொடுக்கணும் ரூட்டுல போறச்சேன்னு' சொன்னேன். உங்களைத் தெரியாதா எனக்கு. கை சுத்தமாச்சே. லாரியிலே போய் உட்காருடா."

கிளீனரை விரட்டினான் பரமு.

கேட்டுவிடலாமா? கை சுத்தமாவது, கால் சுத்தமாவது? இப்படி சொல்லிச் சொல்லியே தன்னை ஏமாளியாக்குகிறார்கள். கேட்டு விட வேண்டியதுதான்.

தொண்டையை செருமிக்கொண்டார் துரை.

"என்ன சார் வழக்கமான மிடுக்கைக் காணோம். உங்க முகத்துல? உடம்புல கூட விறைப்பு குறையுது?"

திடுக்கிட்டுப் பார்த்தார் துரை.

மனசில் ஏற்படும் மாற்றத்தால், நடவடிக்கைகளிலும் இவ்வளவு மாற்றங்களா?

"ஏன் சார், வீட்டுலே யாருக்கும் உடம்ப சரியில்லையா?"

அட, எப்படி கண்டுபிடித்தான்?

"நம்மளை மாதிரி ஆம்பளைக்கு செயல் தடுமாறுதுன்னா, வீட்டுல மனைவிக்கோ, குழந்தைக்கோ உடம்பு சரியில்லேன்னு அர்த்தம். சரியா சார்?"

துரை கடகடவென கொட்டிவிட்டார்.

"என்ன க்ரூப் சார்?"

சொன்னார்.

"அட, என் க்ரூப்பும் அதேதான். போன வாரம் எய்ட்ஸ் தடுப்பு முகாமிலேயிருந்த டாக்டர்கள் எங்களை மாதிரி டிரைவர்களை டெஸ்ட் பண்ணினப்பதான் தெரிஞ்சது. சொல்லுங்க சார், எப்ப வரணும் ஆஸ்பத்திரிக்கு. பணம் கைமாற்றாய் ஏதும் வேணுமா?"

பரமுவை நிமிர்ந்து பார்த்த துரையின மனசுக்குள் நிம்மதிப் பூக்கள்.

நல்லவேளை காப்பாற்றிவிட்டான்!

பின்குறிப்பு:-

கல்கி 13.10.1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Read Entire Article